Published : 09 Mar 2020 10:36 AM
Last Updated : 09 Mar 2020 10:36 AM

மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் கவனத்துக்கு

ராதிகா மெர்வின்
radhika.merwin@thehindu.co.in

அரசின் மோட்டார் வாகன சட்டப்படி நாம் வாங்கும் வாகனத்துக்கு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்ஷூரன்ஸ் எடுத்தே ஆக வேண்டும். செப்டம்பர் 2018-ல் நீண்டகால மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மோட்டார் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் பலவித மாற்றங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன. தற்போதுள்ள விதிப்படி டூவீலர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கும், கார்களுக்கு மூன்றாண்டுகளுக்கும் மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் எடுத்தே ஆக வேண்டும்.

அதேசமயம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடையே நிலவும் போட்டி காரணமாக, வாடிக்கையாளர்களைத் தங்கள்பக்கம் ஈர்க்க பல சலுகைகளைக் கொண்டுவந்தன. இது வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், கூடவே பல குழப்பங்களையும் கொண்டுவந்தது.

இதனால் சரியான மோட்டார் இன்ஷூரன்ஸை தேர்ந்தெடுப்பது என்பதே சிக்கலாக இருக்கிறது. எனவே மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

பலவிதமான தேர்வுகள்

மோட்டார் இன்ஷூரன்ஸ் இரண்டு விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. ஒன்று மூன்றாம் நபருக்கான காப்பீடு, மற்றொன்று வாகனத்தின் சொந்தக்காரர் சந்திக்கும் இழப்புக்கான காப்பீடு. மூன்றாம் நபர் காப்பீடு என்பது கட்டாயம். அசம்பாவிதம் நேரும்போது உண்டாகும் மோசமான காயம், மரணம் போன்றவற்றின் போது எழும் சட்ட ரீதியிலான இழப்பீடுகளுக்கு இந்தக் காப்பீடுஉதவும். வாகனத்தின் சொந்தக்காரருக்கான காப்பீடு என்பது விரும்பினால் எடுத்துக்கொள்ளலாம். இதில் வாகனம் சேதம் அடைந்தால், திருடுபோனால் இழப்பீடு கிடைக்கும்.

இதில் மூன்றாம் நபர் காப்பீடு 2018 செப்டம்பருக்கு முன் ஒரு வருடமாக இருந்தது, டூவீலருக்கு ஐந்து வருடமாகவும், கார்களுக்கு மூன்று வருடமாகவும் மாற்றப்பட்டது. ஆனால் சொந்த காப்பீடு விருப்பத்தின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம் என்பதால் எடுக்காமல் விடவோ, அல்லது விருப்பப்படும் காலம்வரை எடுத்துக்கொள்ளவோ முடியும்.

இப்போது, நீங்கள் கார் வாங்கப் போகிறீர்கள் எனில் உங்களுக்கு மூன்று சாய்ஸ்கள் உள்ளன. (1) மூன்றாம் நபர்காப்பீடு மட்டும் எடுப்பது (2) 3 வருடங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடும், ஒரு வருட சொந்த காப்பீடும் எடுத்துக்கொள்வது (3) 3வருடங்களுக்கு மூன்றாம்நபர் காப்பீடும், சொந்தக் காப்பீடும் எடுப்பது.

இதில் எது சிறந்தது?

முதல் ஆப்ஷன் எப்போதுமே சிறந்த தேர்வு அல்ல. ஏனெனில் சாலைகளில் எப்போது என்ன நடக்கும் என்ற நிலை இருப்பதால் மூன்றாம் நபர் காப்பீடு மட்டுமே போதாது. கட்டாயம் சொந்தக் காப்பீடும் அவசியம். மற்ற இரண்டு ஆப்ஷன்களில் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது நாம் செலுத்தும் பிரீமியம், இரண்டாவது நோ-கிளெய்ம் போனஸ்.

மூன்றாம் நபர் காப்பீடை பொறுத்தவரை, அது ஐஆர்டிஏஐ நிர்ணயிக்கும் தொகை ஆகும். 2019 ஜூன் மாதத்தில் இந்தக் காப்பீடுக்கான தொகையை ஒழுங்குமுறை அமைப்பு உயர்த்தியது. இதனால் பிரீமியம் அதிகரித்தது. ஆனால், சொந்தகாப்பீடுக்கான பிரீமியத்தை நிர்ணயிக்கும் சுதந்திரம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு இருக்கிறது. இதனால் மொத்த காப்பீடு செலவில் சொந்த காப்பீட்டின்பிரீமியம் முக்கிய காரணியாக உள்ளது.

முதல் பார்வையில், மூன்று வருடத்துக்கான சொந்த காப்பீடு எடுத்தால் ஒரு வருடத்துக்கு எடுப்பதுபோல் மூன்று மடங்கு தொகை செலுத்த வேண்டும் என்று தோன்றும்.

ஆனால், அப்படி இல்லை.முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் இருசக்கர வாகனத்துக்கான சொந்த காப்பீட்டின் ஐந்து வருடங்களுக்கான பிரீமியம்ஒரு ஆண்டுக்கான பிரீமியத்தைக் காட்டிலும் 3-3.5 மடங்கு மட்டுமே. கார்களுக்கான மூன்று வருட காப்பீட்டின் பிரீமியம் ஒரு வருடத்துக்கான பிரீமியத்தைக் காட்டிலும் 2-2.5 மடங்கு மட்டுமே.

பாலிசிபஜார் புள்ளிவிவரங்களின்படி பார்க்கும்போது அதிக ஆண்டுகளுக்கு சொந்தக் காப்பீடு எடுக்கும்போது பிரீமியம் செலவு என்பது குறைவாகவே உள்ளது. மூன்று வருடத்துக்கான சொந்தக் காப்பீடு எடுப்பது, ஒரு வருடத்துக்கு எடுப்பதைக் காட்டிலும் குறைவான செலவு எனில் அதை தேர்வு செய்வீர்களா? முதலில் மூன்று வருடத்துக்கான பிரீமியம் எனில் அப்போதைக்கு அது பெரியதொகையாக இருக்கும். கார் எனில் சற்று அதிகமாகவே இருக்கும். உதாரணத்துக்கு கிரெடாவுக்கு ஹெச்டிஎஃப்சி எர்கோ மூன்று வருட மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் ஒரு வருட சொந்தக் காப்பீடுக்கு ரூ.37,377 (ஜிஎஸ்டி தவிர்த்து) வசூலிக்கிறது. இதுவே மூன்று வருடத்துக்கு சொந்தக் காப்பீடு எனில் ரூ.6,4828 செலுத்த வேண்டும். எனவே அவரவர் நிதிநிலைக்கு ஏற்ப முடிவு செய்யலாம். வாகனக் கடனில் இன்ஷூரன்ஸுக்கும் நிதி வழங்கப்படுகிறது என்பதால் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நோ கிளெய்ம் போனஸ்

நோ கிளெய்ம் போனச் என்பது வாகனஉரிமையாளருக்கு பாலிசி காலத்தில் அவர் எந்த கிளெய்மும் பெறவில்லை எனில் அவருடைய சொந்தக் காப்பீட்டின் பிரீமியத்தில் வழங்கப்படும் தள்ளுபடி ஆகும். ஒரு வருடத்துக்கான பாலிசி எடுத்திருந்தால், இந்த நோ கிளெய்ம் போனஸ் காப்பீட்டை புதுப்பிக்கும்போது பெற்றுக்கொள்ளலாம். நீண்டகாலத்துக்கு காப்பீடு எடுத்திருந்தால், தொடர்ந்துசில ஆண்டுகளுக்கு எந்த கிளெய்மும் பெறவில்லை எனில், பாலிசி காலம் முடிந்து புதுப்பிக்கும்போது சொந்தக் காப்பீட்டின் பிரீமியத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும்.

ஆனால், தற்போது நிறுவனங்கள் செய்வது என்னவெனில், நீண்டகாலத்துக்கு காப்பீடு எடுக்கும்போது இந்தநோ கிளெய்ம் போனஸை ஆரம்பத்திலேயே வழங்கிவருகின்றன. நீங்கள் நம்பிக்கையான சிறந்த ஓட்டுநர் எனில் ஒரு வருட பாலிசி எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும்போது நோ கிளெய்ம் போனஸை பெற்று பயனடையலாம்.

பாலிசி புதுப்பிக்கும்போது

2018 செப்டம்பருக்குப் பிறகு வாகனம்வாங்கியவர் ஒரு வருட சொந்தக் காப்பீடும், மூன்று வருட மூன்றாம் நபர் காப்பீடும் எடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் தன்னுடைய பாலிசியை ஓராண்டுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிபுதுப்பித்தலுக்கான பிரீமியத்தில் கவர்ச்சிகரமான பல சலுகைகளையும் குறைவானபிரீமியம் விலையையும் வழங்குகின்றன. நிறுவனங்களின் பிரீமியம் சலுகைகளைஒப்பிட்டு குறைவான பிரீமியத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x