Published : 03 Aug 2015 12:44 PM
Last Updated : 03 Aug 2015 12:44 PM
சொகுசுக் கார்கள் என்றவுடனேயே ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ கார்கள் நிச்சயம் அனைவரது மனதிலும் நிழலாடும். உலகம் முழுவதும் பிஎம்டபிள்யூ கார்கள் போகாத சாலையே இல்லை எனலாம். 2016-ல் நூற்றாண்டை கொண்டாடும் இந்நிறுவனத்துக்கு இந்தியா வில் புத்துயிரூட்டுகிறது ஃபோர்ஸ்.
பொதுவாக கார்களுக்கு இதயம் போன்றது இன்ஜின்தான். அத்தகைய இன்ஜின்களை அசெம்பிள் செய்வது மற்றும் அவற்றை சோதித்து அளிக்கும் பணியை செய்கிறது புணேயைச் சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கான இன்ஜின்களை அசெம்பிள் செய்வதற்காகவும், அவ்விதம் அசெம்பிள் செய்ததை சோதித்துப் பார்ப்பதற்காகவும் சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் ஒரு ஆலையை அமைத்துள்ளது ஃபோர்ஸ் மோட்டார்ஸ்.
ஆட்டோமொபைல் துறையில் நீண்ட அனுபவம் மிக்க ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் மற்றும் டிராக்டர்களைத் தயாரிக்கிறது. புணேயில் உள்ள ஆலையில் இவை தயாராகின்றன. எஸ்யுவி மற்றும் எம்யுவி ரக வாகனங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பீதம்பூர் ஆலையில் உருவாகின்றன.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள மஹிந்திரா வேர்ல்டு சிட்டி-யில் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஃபோர்ஸ் ஆலை அமைந்துள்ளது. ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அசெம்பிளி பிளாண்ட் அமைந்துள்ளது.
புணேயைச் சேர்ந்த இந்நிறுவனம் தமிழகத்தில் அமைத்துள்ள முதலாவது ஆலை இதுவாகும். 7 மாதங்களில் இந்த ஆலை கட்டி முடிக்கப்பட்டதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு முதலாவது சுயேச்சையான தனியார் நிறுவன அசெம்பிளி ஆலை இதுவாகும். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சர்வதேச தரத்துக்கு இணையான நிறுவன ஆலோசனையோடு இங்கு அசெம்பிளிங் பணியை செய்கிறது ஃபோர்ஸ். இந்த ஆலையில் கியர்பாக்ஸ் மற்றும் பிற உபரி பாகங்களையும் பிஎம்டபிள்யூ கார்களுக்காகத் தயாரிக்கிறது ஃபோர்ஸ்.
இந்த ஆலை ஆண்டுக்கு 20 ஆயிரம் இன்ஜின்களை அசெம்பிள் செய்யும் திறன் கொண்டது. அடுத்த ஓராண்டுக்குள் இதன் திறன் 50 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசான் ஃபிரோடியா தெரிவித்துள்ளார்.
பிஎம்டபிள்யூ நிறுவன கார் ஆலை மஹிந்திரா சிட்டி-யில் 2007-ம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. இந்த ஆலை ஆண்டுக்கு 14 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்குதான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 1 சீரிஸ், 3 சீரிஸ், 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் வகைக் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் கார்களில் 50 சதவீதம் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆலையில் எக்ஸ் சீரிஸ் ரக எஸ்யுவி-க்களும் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் சொகுசுக் கார்களை விற்பனை செய்வதில் மூன்றாவது பெரிய நிறுவனமாக பிஎம்டபிள்யூ திகழ்கிறது. ஃபோர்ஸ் மோட்டார்ஸின் அசெம்பிளி பிளாண்ட் உத்தியானது பிஎம்டபிள்யூவுக்கு சாதகமான பல பலன்களை அளிக்கும்.
அதாவது போட்டி நிறுவனங்களாக திகழும் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஆடி மற்றும் மெர்சிடெஸ் பென்ஸ் ஆகிய கார்களை விட குறைந்த விலையில் இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ கார்களை விற்க முடியும். இந்தியாவிலேயே அதிக அளவில் உபரி பாகங்களை வாங்குவதன் மூலம் இறக்குமதி வரியும் கணிசமாகக் குறையும்.
இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 120 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. உபரி பாகங்களாக இறக்குமதி செய்யும்போது அதற்கான சுங்க வரி 30 சதவீதம்தான். உள்நாட்டிலேயே தயாரிக்கும்போது அதற்கான போக்குவரத்து செலவும் குறையும். பிஎம்டபிள்யூவின் உத்தியை மாற்றி யோசித்தால் அதுதான் `மேக் இன் இந்தியா’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT