Published : 13 Jan 2020 02:10 PM
Last Updated : 13 Jan 2020 02:10 PM
கே.கண்ணன்,
நிதி ஆலோசகர்.
விவேகமாக திட்டமிடப்பட்ட போர்ட்ஃபோலியோ நீண்டகாலத்தில் செல்வத்தைப் பெருக்க மிக முக்கியப் பங்காக அமையும். ஆனால், நம்முடைய போர்ட்ஃ போலியோ முழுவதையும் ஒரே ஒரு முதலீட்டு திட்டத்தில் மட்டும் குவித்துவைத்திருப்பது சுழற்சி அடிப்படையிலும், பிற தாக்கங்களினாலும் அபாயங்களைச் சந்திக்க நேரிடலாம்.
அதே சமயம் நமது போர்ட்ஃபோலியோவை பல்வேறு முதலீட்டு அம்சங்களாகப் பிரித்து திட்டமிட்டால், நீண்டகால அடிப்படையில் வரக்கூடிய அபாயங்களைச் சரிசெய்து கணிசமான வருமானத்தையும் முதலீடுகளின் மீது பெற முடியும். போர்ட்ஃபோலியோ திட்டமிடலில் எதில் எவ்வளவு சதவீதத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை திட்டமிடுவதே அசெட் அலொகேஷன் எனப்படுகிறது. இது நம்முடைய ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்தும், நமது நிதி இலக்குகளைப் பொறுத்தும் தீர்மானிக்கப்படும்.
இதற்கு முன் பல்வேறு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு திட்டங்கள் கொடுத்த வருமானத்தின் அடிப்படையில் பார்க்கும்போது முதலீட்டு திட்டங்கள் பொருளாதார சூழல்களைப் பொறுத்து வெவ்வேறான வருமானத்தை கொடுத்துள்ளன. சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள். சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது முதலீடு செய்பவர்களாகவும், சந்தை இறக்கத்தை அடையும்போது முதலீடுகளை விற்று வெளியேறுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆனால், சரியான முதலீட்டு நடவடிக்கை என்னவெனில் இதற்கு மாறானதாகும். மற்றவர்கள் பயந்து ஒதுங்கும்போது சந்தைக்குள் துணிந்து இறங்குவதும், மற்றவர்கள் பணம் பணம் என ஆர்வமாக இருக்கும்போது ஒதுங்கி இருப்பதுவுமாகும். நம்முடைய போர்ட்ஃபோலியோவை வெவ்வேறு விதமான முதலீட்டு திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வது சரியான வழிமுறையாகும்.
இது முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வழிமுறைகள் குறித்த தெளிவையும், அதேசமயம் நீண்டகாலத்தில் செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பையும் தருகிறது. மேலும், அசெட் அலொகேஷன் உத்திகள் முதலீடு செய்பவரின் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்தது. முதலீட்டாளர் முதலீடு செய்வதில் துடிப்பாக, துணிவுடன் இருந்தால் போர்ட்ஃபோலியோவின் பெரும்பகுதியை பங்குகளில் முதலீடு செய்யலாம்.
வேறொரு முதலீட்டாளர் தனது போர்ட்ஃ போலியோவில் குறைந்தபட்ச ஏற்ற இறக்கத்தை மட்டுமே விரும்புகிறார் எனில் அவருக்கு கடன் திட்டங்களில் அதிக முதலீடுகளை மேற் கொள்ள பரிந்துரைக்கலாம். மிக குறைவான அளவில் ரிஸ்க் எடுக்க முடியும் என்பவர்கள் அவர்களுடைய ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்ப முதலீடு களைத் திட்டமிட வேண்டும்.
ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பார்க்கும் அதேசமயம் முதலீடுகளின் மதிப்பு என்பதும் மிக முக்கியமானதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மதிப்பு குறைவாக இருக்கும்போது முதலீடு செய்து, மதிப்பு உயரும்போது விற்று லாபம் பார்க்க வேண்டும்.
அதேபோல் நம்முடைய போர்ட்ஃபோலியோ அலோகேஷன் உத்திகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆராய்ந்து பார்த்து சமநிலைப்படுத்த வேண்டியது அவசியம். முதலீடுகளின் மீது காலம் செலுத்தும் தாக்கம் என்பதும் இங்கே முக்கியமானது. காலத்துக்கு ஏற்ப நம்முடைய அசெட் அலொகேஷன் முடிவுகளையும் மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் அதிக வருமானத்தை முதலீடுகளின் மீது பெற முடியும்.
அசெட் அலோகேஷன் என்பது ஒவ்வொரு முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவிலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய அம்சமாகும். முதலீடுகளைப் பிரித்து நம்முடைய தேவைகளுக்கும் இலக்குகளுக்கும் ஏற்ப திட்டமிட்டு சரியான நேரத்தில் நல்ல வருமானத்தை அடைய வழிவகுக்கும்.
ஏனெனில் சந்தையும், பொருளாதாரமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி முதலீடுகளைத் திட்டமிட்டால் அபாயங்களைத் தவிர்த்து செல்வத்தைப் பெருக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT