Published : 13 Jan 2020 01:28 PM
Last Updated : 13 Jan 2020 01:28 PM

வேட்டைக்குத் தயாராகும் ஸ்கோடா: 

ஸ்கோடா இந்த ஆண்டு 5 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. எஸ்யூவி, செடான் என புதிய மாடல்களும், மேம்படுத்தப்பட்ட மாடல்களுமாக ஸ்கோடாவிலிருந்து அணிவகுக்க உள்ளன.

ஸ்கோடா ரேபிட்:

வரும் ஏப்ரல் 1 முதல் ஸ்கோடா ரேபிட் டீசல் இன்ஜின் மாடல் நிறுத்தப்பட உள்ளது. அதற்குப் பதிலாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடல் சந்தைக்கு வருகிறது. இன்ஜினில் மட்டும் அல்லாமல், காரின் வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ் 6 விதியின்கீழ் உருவாக்கப்படும் இந்தப் புதிய மாடல், 115 ஹார்ஸ் பவரை 200 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஸ்கோடா சூப்பர்ப்:

செடான் மாடலான ஸ்கோடா சூப்பர்ப் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இந்த ஆண்டு அறிமுகமாக உள்ளது. உட்புற வடிவமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளிவருகிறது. வரும் ஏப்ரல் முதல் இதன் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் இன்ஜின் நிறுத்தப்பட்டுவிட்டு, அதற்குப் பதிலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அறிமுகப்
படுத்தப்பட உள்ளது. இதன் இன்ஜின் 190 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

ஸ்கோடா கரோக்:

நீண்ட நாளாக ஸ்கோடா, அதன் புகழ்பெற்ற கரோக் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறிவந்தது. இதுவரை தகவலாக மட்டுமே இருந்த இந்தச் செய்தி தற்போது நிஜமாகவிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து ஸ்கோடாவின் கரோக் இந்தியச் சந்தையில் கிடைக்கும். இந்த மாடல் நேரடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. அதனால் இதன் விலை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இதன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 150 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடல் டீசல் இன்ஜினில் வெளிவராது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா ஆக்டோவியா ஆர்எஸ் 245:

ஸ்கோடா ஆக்டோவியா ஆர்எஸ் 245-யும் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் காண உள்ளது. விசேஷம் என்னவென்றால் இந்தியச் சந்தைக்கு என்று எந்த மாறுதல்களும் மேற் கொள்ளப்படாமல், வெளிநாடுகளில் என்ன அம்சங்களுடன் கிடைக்கிறதோ அதே அம்சங்களுடனே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்
பட உள்ளது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 245 ஹார்ஸ் பவரை 370 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த மாடலும் நேரடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதன் விலை ரூ.40 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா கோடியாக்:

எஸ்யூவி மாடலான ஸ்கோடா கோடியாக் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த ஆண்டு வெளிவர உள்ளது. இதன் டீசல் இன்ஜின் மாடல் நிறுத்தப்பட்டு அதற்குப்பதிலாக 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் இன்ஜினும் 190 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து மாடல்களைத் தவிர, ஸ்கோடா இந்த ஆண்டு ஆல் நியூ ஆக்டோவியாவை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x