Published : 06 Jan 2020 04:16 PM
Last Updated : 06 Jan 2020 04:16 PM

நவீனத்தின் நாயகன் 08: இவன் வழி தனி வழி!

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

கல்லூரி வாழ்க்கையின் முதல் வாரத்தில், ஈலான் காதலில் விழுந்தான். அந்தப் பெண் - வகுப்பில் உடன் படித்த ஜெஸ்டின் வில்சன் (Justine Wilson). பேரழகியல்ல. சுமார்தான். படிப்பில் புத்திசாலி. ஈலானைப் பெண்களிடம் ஈர்ப்பது அவர்களின் உடல் கவர்ச்சியை விட அறிவுக்கூர்மை. காதல் உட்பட, எதிலும் தாமதம் கூடாது என்பது அவன் கொள்கை. ஜெஸ்டினிடம் போனான். இலேசாக மோதினான்.

``சாரி. நாம் இதற்கு முன்னால் வேறு எங்கேயோ சந்தித்திருக்கிறோமா?”
இதைப்போல் எத்தனையோ ரோமியோக்களை ஜெஸ்டின் பார்த்திருக்கிறாள். பெண்களிடம் பெரும்பாலான ஆண்கள் பயன்படுத்தும் முதல் வாக்கியம். “இல்லையே?” நினைத்ததை முடிக்கும் நம் விடாக்கொண்டன் கேட்டான், ``என்னோடு ஐஸ்கிரீம் சாப்பிட வருகிறாயா?” சம்மதித்தாள். அடுத்த நாள் மாலை 4 மணிக்குச் சந்திப்பு. லேடீஸ் ஹாஸ்டலில் ஜெஸ்டின் அறைக்குப் போனான். அங்கே பூட்டு.

அவனுக்காக ஒரு சின்னக் குறிப்புச் சீட்டு – ``பரீட்சைக்குப் படிப்பதற்காகத் தோழியின் அறைக்குப் போகிறேன். வர முடியவில்லை. மன்னிக்கவும்.” “இல்லை” என்பது ஈலானுக்குப் பிடிக்காத வார்த்தை. ஹாஸ்டலின் பல அறைக்கதவுகளைத் தட்டினான். ஜெஸ்டின் தன் தோழியோடு மாணவர் மையத்துக்குப் போயிருப்பது தெரிந்தது. அவளுக்கு எந்த ஐஸ்கிரீம் பிடிக்கும் என்று விசாரித்தான். ‘‘சாக்லெட் சிப் கோன்” (Chocolate Chip Cone) என்று சொன்னார்கள்.

ஜெஸ்ட்டின் ஐஸ்கிரீமுக்கு வராவிட்டால், ஐஸ்கிரீமை அவளிடம் கொண்டுபோகவேண்டும். கடைக்குப் போனான். இரண்டு வாங்கினான். உருகிவிடக்கூடாதே? ஓடினான். மாணவர் மையம். படித்துக் கொண்டிருந்த ஜெஸ்டின் பின்னால், காலடிச் சப்தம் கேட்காமல் பதுங்கிப் பதுங்கிப் போனான். அவள் காதில் ``ஹை” என்று கத்தினான். திடுக்கிட்டாள். ஓடிவந்ததால் மேல் மூச்சு, கீழ் மூச்சு. கையில் உருகும் ஐஸ்கிரீம், அவளுக்கு ரொம்பவும் பிடித்த சாக்லெட் சிப் கோன். ``ஒரு அடி எடுத்துவைக்கும் போது அடுத்த பத்து அடிகளைத் திட்டமிடும் ஒரு மனிதனா?” என்று ஜெஸ்டின் மனதில் ஆச்சரியமோ ஆச்சரியம்.

இருவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார்கள். ஆனால், ஜெஸ்டின் எப்போதும் ஒரு மானசீக இடைவெளியை உணர்ந்தாள். ஈலானை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அடிக்கடி புத்தகங்கள், பூங்கொத்துக்கள் பரிசாகத் தந்தான். அதே சமயம், தான் அவளைவிட அறிவில் மேலானவன் என்று நிரூபிக்கும் ``ஆண்மை உயர்வு மனப்பான்மை.” மனோதத்துவப் பாடத்தில் ஒரு வகுப்புத் தேர்வு. ஜெஸ்டினுக்கு 97 மதிப்பெண்கள்; ஈலானுக்கு 98. அவனுக்குத் திருப்தியில்லை. பேராசிரியரிடம் போனான். என்ன பேசினானோ, என்ன செய்தானோ, அவன் மார்க் நூற்றுக்கு நூறு ஆனது.

ஈலானுக்குத் தன்னிடம் இருப்பது காதலா அல்லது ``இவள் என் சொத்து. எனக்கு மட்டும்தான்” என்று நினைக்கும் உடைமையாக்குதலா என்று ஜெஸ்டினுக்குத் தெரியவில்லை. ஆகவே, பிற மாணவர்களோடும் நெருக்கமாகப் பழகினாள். அடிக்கடி அவர்களுக்குள் விவாதங்கள். ஆனாலும், ஈலானிடம் ஏதோ காந்தக் கவர்ச்சி இருப்பதை ஜெஸ்டின் உணர்ந்தாள். ஆகவே, விட்டு விலகவும் அவளால் முடியவில்லை.

ஈலானுக்கு ஒரு தனி பலம். காதலில் ஈடுபட்டாலும், அது தன்னை ஆக்கிரமிக்க அனுமதிக்கவில்லை. படிப்பிலும், அறிவியல் புத்தகங்கள் படிப்பதிலும் கவனம் காட்டினான். ராக்கெட், விண்வெளி ஆராய்ச்சி, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவை பற்றி விவாதிக்கப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவனுக்கு இருந்த முக்கிய பிரச்சினை, பணம்.

அம்மா தந்ததை விட ஹாஸ்டல் செலவுகள் அதிகம். ஈலானின் கம்ப்யூட்டர் அறிவு கை கொடுத்தது. சக மாணவர்களின் கம்ப்யூட்டர்களில் கோளாறுகள் வந்தால், ரிப்பேர் செய்வான்; உதிரி பாகங்களை மொத்த விலைக்கு வாங்கி, ஸ்டாக் வைத்து லாபத்தில் விற்றான்; பலருக்குக் கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்து கொடுத்தான்.

தென்னாப்பிரிக்காவில் பள்ளிப் படிப்பின் போது பல சிக்கல்கள் – நாட்டின் இனவெறிக் கொள்கை, அப்பாவின் தலையீடு, சித்திரவதைகள், அவன் பேசுவதைப் புரிந்துகொள்ளாமல் தனிமைப்படுத்திய சக மாணவர்களின் கேலி, வன்முறை…….கல்லூரியில் இவற்றுள் பல மறைந்துவிட்டன. நண்பனாக, உதவும் கரங்களாக, வழிகாட்டியாக அம்மா, பாசமுள்ள தம்பி, தங்கை. சக மாணவர்கள் அவனை அவனாகவே ஏற்றுக்கொண்டார்கள். அவன் பேசுவதைக் கவனித்துக் கேட்டார்கள். அவன் அறிவுக்கு மதிப்புக் கொடுத்தார்கள்.

ஈலானுக்குத் தன்னம்பிக்கை வளர்ந்தது. நம் எல்லோருக்குள்ளும் ஆயிரமாயிரம் திறமைகள் தூங்குகின்றன. தாழ்வு மனப்பான்மை இருக்கும் வரை, இவை விழிப்பதேயில்லை. தூண்டிவிட்டால், குன்றிலிட்ட தீபமாய் ஜொலிக்கும். அம்மாவும், கனடா சூழ்நிலையும் இதைத்தான் செய்தன. ஈலானின் ஜெயிக்கும் வெறி கம்பீரமாக எழுந்தது.
படிப்பில் முதல் இடம் பிடித்தான். பேச்சுப் போட்டிகளில் பரிசுகளைத் தட்டிச் சென்றான். சக மாணவர் சொல்கிறார், ``எதில் இறங்கினாலும், அதில் முதல் இடம் பிடிக்கும் வெறி ஈலானுக்கு உண்டு. கோடிக்கணக்கான பிறரிடமிருந்து அவனை இந்த வேகம்தான் வித்தியாசப்படுத்துகிறது.”

கோடை விடுமுறை. நோவா ஸ்காட்டியா வங்கியில் பயிற்சிக்குச் சேர்ந்தான். அவன் ஒரு முந்திரிக் கொட்டை. தனக்குப் பதினெட்டு வயது தானே ஆகிறது, வங்கிகள் பற்றியோ, பிசினஸ் பற்றிய அரிச்சுவடியே தெரியாத கத்துக்குட்டி என்றெல்லாம் நினைப்பே கிடையாது. ‘‘நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்பதுபோல், மனதில் பட்டதைத் தைரியமாகச் சொல்லுவான்.

அர்ஜென்ட்டீனா, பிரேசில் போன்ற பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஆதரவோடு ஆட்சி நடத்தினார்கள். இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குக் கடன் தருமாறு வங்கிகளை ஊக்குவித்தார்கள். இதன்படி, நோவா ஸ்காட்டியா வங்கியும் இந்த நாடுகளுக்குப் பல்லாயிரம் கோடிடாலர்கள் கடன் கொடுத்திருந்தார்
கள். இந்த நாடுகளின் பொருளாதாரம் சரிந்தது. கொடுத்த பணம் வாராக்கடன்களானது.

நாம் கண்ணன் என்பவருக்கு 1,000 ரூபாய் கடன் கொடுத்திருப்பதாக எடுத்துக்கொள்ளுங்கள். அவரால் திருப்பித் தர முடியவில்லை. அப்போது ஒரு நண்பர் வருகிறார். சாம, தான, பேத, தண்டம் எனப் பல வழிகளில் வசூலிக்கத் தெரிந்த கில்லாடி. ‘‘வசூல் செய்யும் சட்ட உரிமையை எனக்கு 500 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்” என்று கேட்கிறார். அவர் சாமர்த்தியம் நமக்கு இல்லாததால், காந்திக் கணக்காக எழுதிய காசில் பாதி வருகிறதே என்னும் திருப்தியில், 1,000 கடன் உரிமையை நண்பருக்கு 500 ரூபாய்க்கு விற்றுவிடுகிறோம். இனி அவர் பாடு, கண்ணன் பாடு.

இது ஒரு எளிய உதாரணம். வாராக் கடன்களை வசூலிக்க, இத்தகைய வழிமுறை சட்டத்தில் இருக்கிறது. “சொத்து நிர்வாக நிறுவனங்கள்” (Asset Management Companies) இதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. நோவா ஸ்காட்டியா வங்கியின் லத்தீன் அமெரிக்கக் கடன்களுக்கு இந்தச் சொத்து நிர்வாக நிறுவனங்கள் நிர்ணயித்த மதிப்பு – 25 சதவிகிதம்.

அதாவது, கோடிக்கணக்கான டாலர்கள் கடனில் முக்கால் பங்கு போச். 1989 – இல் அமெரிக்க அரசு, இந்த நாடுகளின் உதவிக்கு வந்தது. அமெரிக்க நிதித்துறைச் செயலாளராக இருந்த நிக்கோலஸ் பிராடி (Nicholas Brady) என்பவர் ஒரு திட்டம் வகுத்தார். இதன்படி, அர்ஜென்டீனாவும், பிரேசிலும் கடன் பத்திரங்கள் வெளியிட்டன. இந்த நாடுகளால் தர முடியாவிட்டால், அமெரிக்க அரசு 50 சதவிகிதத் தொகையைத் தரும் என்னும் உத்தரவாதம்.

சொத்து நிர்வாக நிறுவனங்கள் நிர்ணயித்திருந்த விலை 25 சதவிகிதம்; அமெரிக்க அரசின் உத்தரவாதம் 50 சதவிகிதம். அதாவது, 25 சதவிகித விலைக்கு வாங்கி, அரசிடமிருந்து 50 சதவிகிதம் பெறலாம். இந்தத் தங்கச் சுரங்கத்தை ஏனோ, வங்கிகளும், நிதி ஆலோசகர்களும் கண்டுபிடிக்கவில்லை. ஈலான் கண்டுபிடித்தான். சொத்து நிர்வாக நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மான் ஸாக்ஸ் (Goldman Sachs) கம்பெனிக்கு போன் செய்தான்.

‘‘நான் நோவா ஸ்காட்டியா வங்கியிலிருந்து பேசுகிறேன். எங்களுக்கு பிரேசில் நாட்டின் பிராடி பத்திரங்கள் வேண்டும். கிடைக்குமா?” “தாராளமாக. எத்தனை வேண்டும்?” “பத்து பில்லியன் டாலர்களுக்கு*. என்ன விலை?” ‘‘75 சதவிகிதத் தள்ளுபடி விலை.” 1,000 கோடி டாலர்கள். 1989 மதிப்பில், சுமார் 27,620 கோடி ரூபாய். அதாவது, 250 கோடி டாலருக்கு வாங்கி, அரசிடம் 500 கோடி டாலர் பெறலாம். ஒரே டீலில் நோவா ஸ்காட்டியா வங்கிக்குக் கிடைக்கும் லாபம் 250 கோடி டாலர்கள். உற்சாகம் கொப்பளிக்கத் தன் மேனேஜரிடம் போனான்.

தன்னைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார், போனஸ் தருவார் என்று கனவுகள். மேனேஜர் சுரத்தே இல்லாமல் கேட்டார். பதில் சொன்னார், “ரிப்போர்ட் தயாரித்து எனக்குத் தா.” பெரிய நிறுவனங்களில், ரிப்போர்ட் என்பது ஐடியாவுக்கு அடிக்கும் சாவுமணி. சி.இ.ஓ – வுக்கு அறிக்கை போனது. வந்த வேகத்திலேயே நிராகரித்தார்.


ஈலான் விரக்தியின் உச்சத்தில். பின்னாட்களில் சொன்னார், ``வங்கிகளின் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் பணக்கார முட்டாள்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் காப்பி அடிக்கத்தான் தெரியும். ஒரு வங்கித் தலைவர் மலை உச்சிக்குப் போய்க் கீழே குதித்தால், எல்லோரும் குதிப்பார்கள். அறை நடுவில் தங்கம் கொட்டிக் கிடக்கும்போது, முதல் வங்கிக்காரர் அதைத் தொடாவிட்டால், மற்ற யாருமே சீந்தமாட்டார்கள்.”

இப்படி மனம் தளரும்போதேல்லாம், தனக்குத் தானே உற்சாகம் ஊட்டிக்கொள்ள அவன் கண்டுபிடித்த வழி – சுயமுன்னேற்ற நூல்கள். சாதனை படைத்தோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கும்போது, தன் பிரச்சினைகள் அத்தனையும் வெறும் தூசு என்னும் மனப்போக்கு வந்தது.

சிந்தனையில் புதுரத்தம் பாய்ந்தது. ஜெயிக்கும் வெறி கொழுந்துவிட்டு எரிந்தது. மனம் வைராக்கிய கீதம் பாடியது, “யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க; என் காலம் வெல்லும், வென்றபின்னே வாங்கடா வாங்க.”
(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x