Published : 30 Dec 2019 12:21 PM
Last Updated : 30 Dec 2019 12:21 PM
இந்திய வங்கி, துறைக்கு தற்போது போறாத காலம். அடுத்தடுத்து ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதே வாடிக்கையாகிவிட்டது. தற்போது வங்கிகளுக்கு புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது முத்ரா. பிரதமர் நரேந்திர மோடியின் அபிமான திட்டமான பிரதம மந்திரி முத்ரா யோஜனா (பிஎம்எம்ஒய்) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கும் திட்டமாகும். 2015-ம்ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கிவைக்கப்பட்ட இத்திட்டம் வங்கிகளுக்கு மிகப்பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்க வகை செய்யும் நோக்கில் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்கும் என்பதுதான் முத்ரா திட்டத்தின் முக்கியமான அம்சம். ஆனால் இந்த அம்சம்தான் இத்திட்டத்துக்குப் பாதகமான அம்சமாகவும் உருவெடுத்துள்ளது.
முத்ரா திட்டத்தில் மூன்று விதங்களில் கடன் வழங்கப்படுகின்றன. சிஷு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய பெயர்களில் நிறுவனங்களின் அளவு, அவற்றின் தேவை ஆகியவற்றுக்கேற்ப கடன்கள் வழங்கப்படுகின்றன.
ரூ. 50 ஆயிரம் வரையிலான கடன் தொகைக்கு சிஷு என்றும், ரூ.50,001 முதல் ரூ.5 லட்சம் வரையிலான திட்டத்துக்கு கிஷோர் என்றும் ரூ.5,00,001 முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு தருண் என்றும் பெயரிடப்பட்டுள்ளன.
இதில் சிஷு மற்றும் கிஷோர் ஆகிய திட்டங்களின் கீழ் கடன் பெறுவோரின் விண்ணப்பங்களுக்கு பரிசீலனை கட்டணம் ஏதும் கிடையாது. தருண் திட்டத்தில் வழங்கப்படும் கடன் அளவுக்கு 0.5% பரிசீலனை கட்டணம் செலுத்த வேண்டும்.
புதிதாக தொழில் தொடங்குவோர் மற்றும் ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுவோர் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதில் ரூ.5 லட்சம் வரையான கடனுக்கு எவ்வித உத்திரவாதமும் அளிக்கத் தேவையில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலே இந்தத் திட்டத்தில் கடன் பெறலாம். வங்கிகள் கடன் வழங்கும்போது குறிப்பாக தேவைப்படும் சிபில் மதிப்பெண்ணும் இந்த திட்டத்தில் கடன்பெற அவசியமில்லை.
பொதுத் துறை வர்த்தக வங்கிகள் (எஸ்சிபி), பிராந்திய கிராம வங்கிகள் (ஆர்ஆர்பி) ஆகியவை மூலம் இதுவரையில் அதாவது இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.6.04 லட்சம் கோடியாகும். இதில் வாராக் கடன் ரூ.17,251 கோடியாகும். இது வங்கிகள் முத்ரா திட்டத்தின் கீழ் அளித்த மொத்த கடன் தொகையில் 2.86 சதவீதமாகும். பிரதமரின் ஆசி பெற்ற திட்டம் என்பதாலேயே தனியார் வங்கிகள் உட்பட 46 வங்கிகள் இத்திட்டத்தின்கீழ் கடன் அளித்துள்ளன. வழக்கம்போல கடன் வழங்குவதிலும் பாரத ஸ்டேட் வங்கியே முதலிடத்தில் உள்ளது. மொத்தம் ரூ.1 லட்சம் கோடியை இவ்வங்கி வழங்கியுள்ளது. இதில் வாராக் கடன் விகிதம் 2.65 சதவீதமாகும். தனியார் வங்கிகளில் தனலட்சுமி வங்கி, பெடரல் வங்கி ஆகியனவும் அதிக அளவில் முத்ரா திட்டத்துக்கு கடன் வழங்கியுள்ளன. இவற்றின் வாராக் கடன் அளவு 10 சதவீதத்துக்கு மேலாகும்.
எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்கும் முத்ரா திட்டம் வங்கிகளுக்கு மிகப் பெரும் சிக்கலை உருவாக்கும் என்று இத்திட்டம் குறித்து எச்சரித்தவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்தான். இவரை அடுத்து இப்பொறுப்புக்கு வந்த பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்த உர்ஜித் படேலும், கவர்னர் பதவியிலிருந்து விலகிய பிறகு இதே கருத்தை ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட துறைக்கு முன்னுரிமை அளித்து பொருளாதாரத்தை ஊக்குவிக்கலாம் என்ற நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் திரும்பாக் கடன் அதிகரிப்புக்குத்தான் வழிவகுக்கும் என்றும் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்புக்கும் காரணமாகும் என்று தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார் உர்ஜித் படேல்.

கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில் பேசிய தற்போதைய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் செயல்பாடு மற்றும்வாராக் கடன் குறிப்பாக முத்ரா திட்டத்தில் வாராக் கடன் அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்ததோடு, இந்த விஷயத்தில் வங்கியாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
2017-ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட கடன் ரூ. 1.75 லட்சம் கோடி. அப்போது வாராக்கடன் ரூ. 3,790 கோடி. அடுத்த நிதி ஆண்டில் அதாவது2018-ல் ரூ.2.46 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது. வாராக் கடன் அளவு ரூ.7,277 கோடியாக உயர்ந்தது. 2019-ம் நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.3.11 லட்சம் கோடி, இதில் வாராக் கடன் ரூ.17,250 கோடியாகும்.
முத்ரா திட்டத்துக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் வழங்கப்படும் ரூ. 10 லட்சம் வரையான கடன் அளவை ரூ.20 லட்சமாக உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அரசு இதை ஏற்கும்பட்சத்தில் வங்கிகளின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார் செபி-யின் முன்னாள் தலைவரான யு.கே. சின்ஹா.
இத்திட்டத்தின் ஹைலைட்டே விண்ணப்பித்த 59 நிமிடங்களில் கடன் வழங்கப்படும் என்பதுதான். இதனாலேயே வங்கிகள் கடன் பெற விண்ணப்பித்தவர்களின் தகுதிகளை சரிவர ஆராயாமல் அரசின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் கடன் வழங்கியுள்ளன. பொதுவாக வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிப்பவர்களைப் பற்றி ஓரளவு விவரமாவது அந்தந்த கிளை மேலாளருக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் இத்திட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. விண்ணப்பங்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமான விண்ணப்பங்கள். கடன் கோரி விண்ணப்பித்தவருக்கு 59 நிமிடங்களில் கடன் வழங்கவேண்டும் என்ற நெருக்குதல் வங்கிகளுக்கு, பிறகு எப்படி உரிய நபர்களுக்கு கடன் வழங்க முடியும். கடன் பெறுபவரின் திரும்ப செலுத்தும் திறனை பரிசீலிக்க முடியும்.
பெரும்பாலும் பொதுத் துறை வங்கிகள் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாகத்தான் செயல்படுகின்றன. இதனாலேயே அரசியல் நெருக்குதலுக்கு ஆளாகின்றன. இதன் காரணமாக பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளன.
முன்னுரிமை துறைகளுக்கு பொதுத் துறை வங்கிகள் அளித்த கடனில் வாராக் கடன் அளவு 11.35 சதவீதமாகும். பிற துறையினருக்கு அளித்ததில் வாராக் கடன் அளவு 3.78% மட்டுமே. இதேபோல தொழில் துறையினருக்கு பொதுத் துறை வங்கியினர் அளித்த கடன் அளவில் வாராக் கடன் 16.45 சதவீதம். தனியார் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு வெறும் 1.5 சதவீதம் மட்டுமே. முன்னுரிமை சேவைத் துறைக்கு பொதுத் துறை வழங்கிய கடன் தொகையில் வங்கிகள் வாராக் கடன் 10.57 சதவீதமாக இருக்கையில் தனியார் துறை வங்கிகளின் அளவு வெறும் 1.56 சதவீதமாக இருப்பதில் ஆச்சரியமிருக்காது அல்லவா.
தனியார் வங்கிகள் 30 விநாடிகளில் கடன் வழங்குகின்றன. ஆனால் அதை திரும்ப செலுத்தும் தகுதி படைத்தவர்களுக்குத்தான் வழங்குகின்றன. அதற்கான அளவீடுகளை அவை துல்லிய மாக கணிக்கின்றன. ஆனால் பொதுத் துறை வங்கிகளுக்கு எப்போதுமே பன்முக நெருக்குதல் அதிகம். வங்கித் துறைக்கு சேவை நோக்கம் என்ற பரந்து பட்ட ஒரே நோக்கம்தான் பொதுத்துறை வங்கிகளுக்கு சூட்டப்படுகிறது. அரசியல் ஆதாயத்துக்காகவோ அல்லது உண்மையிலேயே நல்ல நோக்கத்துக்காகவோ அரசு செயல்படுத்தும் திட்டங்களை உரிய வகையில் ஆராயாமல் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் கடன்களை அளிக்கின்றனர்.
பொதுத் துறை வங்கிகளில் வாராக் கடன் அளவு அதிகம் என்பது மட்டுமல்ல, மோசடிகள், ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகளும் அதிகமே. தனியார் வங்கிகளில் இவை நடைபெறவில்லை என்று ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் பொதுத் துறை வங்கிகளோடு ஒப்பிடுகையில் தனியார் வங்கிகளில் இவை குறைவுதான்.
வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளாக்குவது மட்டுமே சர்வதேச அளவில் போட்டிகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்காது. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை, பணியாளர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். நெருக்குதல்இல்லாமல் அவர்களை செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடு மேம்படும். இல்லையெனில் அரசு செயல்படும் திட்டங்களுக்கு நெருக்குதலின் பெயரில் கடன் வழங்கி, வாராக் கடனில் மூழ்கி அழிவதை யாராலும் தடுக்கவே முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT