Published : 30 Dec 2019 12:17 PM
Last Updated : 30 Dec 2019 12:17 PM
1990 வரையில் வீடுகளில் தொலைபேசி, அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது. கிராமங்களில் ஒட்டுமொத்தமாக ஓரிரு செல்வந்தர்கள் வீடுகளில் மட்டும் தொலைபேசி இருக்கும். ஆனால் இன்று தொலைதொடர்புத் துறை அடைந்துள்ள வளர்ச்சி அப்போது யாரும் நினைத்துப் பார்த்திராத ஒன்று.
தொலை தொடர்புத் துறையில் இத்தகைய பெரும் மாற்றம் நிகழ காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசுவதற்கு ஒரு ரூபாய் கட்டணம் என்று ராஜீவ்காந்தி காலத்தில் ஏற்பட்ட புரட்சி முக்கியகாரணம். இதையடுத்து பேஜர் எனப்படும் தகவல் பரிமாற்ற சாதனம் வந்தது.உடனடியாக தொடர்பு கொள்ள தொலைபேசி மூலம் தகவல் அனுப்பினால் இது வைத்திருப்பவரை சென்றடைந்து அவர் அருகாமையில் உள்ள தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்டவருடன் தொடர்பு கொள்ள உதவியது. செல்போன் வந்து, தொலைபேசி மற்றும் பேஜர் ஆகிய இரண்டையும் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டது.
முதன் முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் செல்போன் சேவையை அறிமுகப்படுத்தியபோது அதை இருகரம் நீட்டி வரவேற்றவர்கள் அதிகம். அடுத்து பல நிறுவனங்கள் ஆர்பிஜி, டாடா இன்டிகாம் ஆகியவை தவிர்த்து அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்ஆகியவையும் செல்போன் சேவையில் ஈடுபட தொடங்கின. பிறகு மளமளவென தனியார் நிறுவனங்கள் பலவும் செல்போன் சேவை அளிக்கத் தொடங்கின.
இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி பலவெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து சேவையளிக்கத் தொடங்கின. அந்த வகையில் வோடபோன், யுனிநார், டெலிநார், எம்டிஎஸ் போன்ற நிறுவனங்களும் இந்தியசந்தையை முற்றுகையிட்டன.
ஆனால், செல்போன் வந்த புதிதில் அழைப்பு வந்தாலும் கட்டணம், பேசினாலும் கட்டணம் என்ற நிலை இருந்தது. காலப்போக்கில் மாறத் தொடங்கியது. கட்டணம் குறையக் குறைய உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. செல்போன் விலையும் மளமளவென குறைய செல்போன் உபயோகம் ஆண்டுக்கு ஆண்டு பலமடங்கு அதிகரித்தது.
செல்போன் சேவையில் முக்கிய பங்காற்றிய அலைக்கற்றை அடுத்த தலைமுறைக்கு வளர வளர செல்போன் உபயோகம் ஸ்மார்ட்போனுக்கு மாறியது. இப்போது மறுமுனையில் இருப்பவரின் முகம் பார்த்து பேசும் அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் விரிவடைந்துள்ளது.
நிறுவனங்கள் அதிகரிக்க அதிகரிக்கபோட்டியும் உருவானது. இதனிடையே அலைக்கற்றை ஊழல் (2-ஜி) இப்பிரச்சினையின் வளர்ச்சிக்கு சற்று முட்டுக்கட்டையாக அமைந்தது. இதன் காரணமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டிய சூழலும் உருவானது.
தனியார் துறையில் டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஜப்பானின் டோகோமோ வெளியேற்றம் டாடாவுக்கு பின்னடைவாக அமைந்தது. முதன் முதலில் சேவை தொடங்கிய ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் (ஆர்-காம்) அதிகரித்த கடன் சுமை அந்நிறுவன செயல்பாடுகளை முடக்கியது. தமிழகத்தில் தனிப்பெரும் நிறுவனமாக விளங்கிய ஏர்செல் நிறுவனமும் கடன் சுமையில் சிக்கி மூழ்கியது.தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு நிகராக சேவை வழங்க முடியாத சூழலில் பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியன கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டன.
இறுதியாக எஞ்சிய ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏக போக சாம்ராஜ்யத்தை சரித்தது முகேஷ் அம்பானியின் ஜியோ வருகை. தொடக்கத்திலேயே இலவச சலுகையை அளித்து ஏற்கெனவே பிற நிறுவன சேவைகளைப் பெற்றுவந்த வாடிக்கையாளர்களையும், புதிய வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுத்தது. மலிவான விலையில் தரமான சேவை ஜியோவில் கிடைக்கவே பிற நிறுவனங்களும் போட்டியைச் சமாளிக்க விலை குறைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பிற நிறுவனங்களின் தொழில் பாதித்தது. நஷ்டம் அதிகரித்தது.
இந்தியாவில்தான் உலகிலேயே மிகக் குறைந்த அளவில் செல்போன் டேட்டா பரிமாற்ற கட்டணம் உள்ளது. ஒரு ஜிபி கட்டணம் 0.26 டாலராக உள்ளது. இது சீனாவில் 12.37 டாலராகவும், அமெரிக்காவில் 6.66 டாலராகவும் உள்ள நிலையில் குறைந்த கட்டணங்களால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளன.
இதனிடையே தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பேரிடியாக அமைந்தது. வருவாய் பகிர்வு அடிப்படையில் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காணாவிடில் நிறுவனத்தை மூடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று பிர்லாகுழுமத் தலைவர்குமார் மங்களம் பிர்லா குறிப்பிட்டுள்ளார். ஜியோ நிறுவனம் கட்டணத்தை குறைக்காத சூழலில் மற்றஇரு நிறுவனங்கள் (ஏர்டெல், ஐடியா வோடபோன்) மட்டும் கட்டணத்தை உயர்த்தினால் இருக்கும் வாடிக்கையாளர்களையும் இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். பிறகு இத்துறையில் ஏகபோக சக்ரவர்த்தியாக ரிலையன்ஸ் ஜியோ திகழும். ஒரு நிறுவனம் மட்டுமே நிலைத்து நின்றால் பிறகு அந்நிறுவனம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மக்கள்செலுத்த வேண்டிவரும் என்று தொழில்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தங்க முட்டையிடும் கோழியைப் போல இருந்த இந்திய தொலை தொடர்பு துறைதற்போது பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஜியோவா, மற்ற நிறுவனங்களா எனும் அளவுக்கு யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் மீள வழி தெரியாமல் தடுமாறும் நிறுவனங்கள் பக்கம் அரசின் கவனம் திரும்பாவிடில் பாதிப்பு யாருக்கு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT