Published : 30 Dec 2019 11:58 AM
Last Updated : 30 Dec 2019 11:58 AM

ஏடிஎம் பிரச்சினைகளும் தீர்வுகளும்...

ஜெ. சரவணன்
saravanan.j@hindutamil.co.in

வங்கிச் சேவை அனைவருக்குமே கட்டாயமாகிவிட்ட காலகட்டத்தில் இருக்கிறோம். ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்க நவீன தொழில் நுட்பங்களின் உதவியால் பரிமாற்றங்களை மிகவும் எளிதாக்கிக்கொண்டிருக்கின்றன அரசும் வங்கிகளும்.

ஆனாலும் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ரொக்க பரிவர்த்தனையை முற்றிலுமாக நீக்குவதும் சாத்தியமில்லை. இத்தகைய சூழலில் பணப் பரிவர்த்தனைகளையும் வங்கிச் சேவைகளையும் மிக எளிதாகவும் விரைவாகவும் செயல்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் ஏடிஎம், சிடிஎம் உள்ளிட்ட இயந்திரங்கள் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவிலான மக்களுக்கு இந்த வசதிகள் குறித்த போதிய அனுபவம் இல்லை. இதனால் அவ்வப்போது சில சிரமங்களைச் சந்திக்கிறார்கள். பலரும் இந்த வசதிகளை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் தெரியாமலிருக்கிறது.

குறிப்பாக ஏடிஎம்களில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் பலர் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஏடிஎம் தொடர்பான புகார்கள் 48 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. 2017-2018 நிதி ஆண்டில் 24672 புகார்கள் பதிவாகியிருந்த நிலையில், 2018-2019 நிதி ஆண்டில் 36539 ஆக அவை உயர்ந்துள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும், ஆனால், ஏடிஎம்மில் பணம் வராது. ஏடிஎம் பயன்பாடு தொடர்பான கட்டணங்கள். பிற பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகியவை ஆகும். ஏடிஎம் தொடர்பாக பதிவான புகார்களில் பெரும்பாலானவை கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு
விடும், ஆனால் பணம் வரவில்லை என்பதுதான்.

இதுபோன்ற சமயங்களில் வாடிக்கையாளர்கள் பதட்டப்படாமல், தங்களின் வங்கிக் கிளையை அணுகி விஷயத்தை சொன்னால் அதற்கான தீர்வுகள் தரப்படும். அல்லது வங்கியின் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டும் தங்களின் புகாரைத் தெரிவிக்கலாம். எடுக்கப்பட்ட பணம் சில நாட்களில் மீண்டும் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அதிகபட்சம் பரிவர்த்தனை நடந்த நாளிலிருந்து 5 நாட்களுக்குள் வரவு வைக்கப்படவில்லை எனில், வங்கிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதமாக விதிக்கப்படும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். அந்த அபராதம் அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு வங்கியிலிருந்து வழங்கப்படும். எனவே, ஏடிஎம்மில் பணம் வரவில்லை எனில் முதலில் வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள்.

கட்டணங்கள்

ஏடிஎம் பயன்பாடுகளுக்கான கட்டணங்கள் குறித்த விவரங்களை அனைவருமே தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஒருநாளைக்கு எத்தனை முறை பணம் எடுக்கலாம், பணம் டெபாசிட் செய்யலாம், அதற்கான வரம்புகள், கட்டணங்கள் அனைத்தும் தெரிந்துவைத்திருப்பது நல்லது. பெரிய நகரங்களில் இலவச ஏடிஎம் சேவை மூன்று என்ற அளவில் உள்ளது. கிராமப்புறங்களில் இதைவிட அதிகம். முடிந்தவரை இணையவழி, பாயின்ட் ஆஃப் சேல் உள்ளிட்ட வழிகளில் மக்கள் தங்கள் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இதற்கான நோக்கம்.

ஆனால், பெரும்பாலான மக்கள் ரொக்கப் பரிவர்த்தனை செய்தே பழகியதால் ஏடிஎம்மில் பணத்தை எடுத்தே செலவு செய்கின்றனர். இலவச சேவைகளின் வரம்பைத் தாண்டும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணங்கள் பிடிக்கப்படுகின்றன. இதனால் இருப்பு வைக்கப்பட்ட தொகையிலிருந்து கணிசமான கட்டணம் பிடிக்கப்படுவதால், கணக்கில் இருந்து பணம் காணாமல் போவதாகவும் புகார்கள் பதிவாகின்றன.

சேவைகள்

அதேபோல் வங்கி சேவைகள் ஏடிஎம்களில் பெற்று பயனடைவதற்கான விவரங்களும் பலருக்கு தெரியவில்லை. ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை மாற்ற, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற, பணம் இருப்பு வைக்க என பல வசதிகள் ஏடிஎம் இயந்திரங்களிலேயே வழங்கப்படுகின்றன. அதேபோல் ஏடிஎம் மூலம் பணம் இருப்பு வைக்கும் வரம்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கிக்குச் சென்று வரிசையில் காத்திருப்பதற்குப் பதிலாக பணம் இருப்பு வைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏடிஎம்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறித்தும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏடிஎம் மோசடிகள் பல இடங்களில் நடந்துவருகின்றன. கார்டுகளை ஏடிஎம்மில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரகசிய எண்ணை யாருக்கும் தெரியாதவாறு மறைத்து உள்ளிடுவது அவசியம். ஸ்கிம்மர் கருவி ஏதேனும் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

ஏடிஎம் இயந்திரங்களின் வடிவமைப்பில் ஏதேனும் வித்தியாசமான மாற்றம் தெரிந்தால் பயன்படுத்தாமல் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும். முடிந்தவரை பரிவர்த்தனைகளை நீங்களாகவே மேற்கொள்ள தெரிந்துகொள்ளுங்கள். டைரி, பேப்பர் போன்றவற்றில் கார்டு எண், ரகசிய எண் போன்றவற்றை எழுதி வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

தெரியாத நபர்களிடம் உங்களுடைய மொபைலையோ, ஏடிஎம் கார்டையோ கொடுத்து உதவி ஏதும் கேட்க வேண்டாம். பயன்படுத்த தெரியாதவர்கள் முடிந்தவரை பகல் நேரங்களில் வங்கி செயல்படும்போது எப்படி பயன்படுத்துவது என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். ஏடிஎம் வங்கிச் சேவைகளை எளிதில் பயன்படுத்திக்கொள்ள கிடைத்த வரப்பிரசாதம் அதை சரியாகப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் பயனடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x