Published : 10 Aug 2015 10:29 AM
Last Updated : 10 Aug 2015 10:29 AM
கார் உற்பத்தியில் முதலிடம் என்பதைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவம், புதிய இலக்கை அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது மாருதி சுஸுகி. இந்நிறுவனத்தின் புதிய உருவாக்கம்தான் நெக்ஸா.
வாடிக்கையாளர்களின் கருத்துகள், தேவைகளுக்கேற்ப கார்களை வடிவ மைத்து வழங்கி வரும் மாருதி சுஸுகி நிறுவனம் புதிதாகத் தொடங்கியுள்ள விற்பனையகம்தான் நெக்ஸா. கார் வாங்குவதில் புதிய அனுபவத்தை தனது வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் என்பதற்காக பிரீமியம் விற்பனையகத்துக்கு நெக்ஸா என பெயர் சூட்டியுள்ளது இந்நிறுவனம்.
நிறுவனத்தின் உயர் ரகக் கார்களை இந்த விற்பனையகங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.கார் வாங்குவது தங்கள் வாழ்வில் அந்தஸ்தின் அடையாளம் எனக் கருதும் போக்கு இளம் தலைமுறையினரிடையே அதிகரித்துள்ளது. அதிலும் தங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதிலும், விற்பனைக்குப் பிறகு சிறப்பான சேவை கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகையோரின் தேவைகள், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நெக்ஸா அமையும் என்று நிறுவனத்தின் தலைவர் கெனிசி அயுகவா தெரிவித்துள்ளார்.
நெக்ஸாவின் வாடிக்கையாளர்கள் யாருமே முதன் முதலில் கார் வாங்குபவராக நிச்சயம் இருக்க மாட்டார்கள். சொகுசு கார்கள், பிரீமியம் கார்களை வாங்குவோர் அதற்குரிய மரியாதை, வாங்குமிடம் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் நியாயமானது. அத்தகையோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இது இருக்கும்.
கடந்த மாதம் முதல் இத்தகைய பிரீமியம் விற்பனையகங்களை பெருநகரங்களில் மாருதி சுஸுகி திறந்து வருகிறது. இதுவரை 23 நகரங்களில் 35-க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டுக்குள் 100 நெக்ஸா விற்பனையகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.
மாருதி சுஸுகியின் பிரீமியம் ரகக் கார்களான எஸ்-கிராஸ், சியாஸ் உள்ளிட்ட பிராண்டுகள் இந்த விற்பனையகங்களில் மட்டும்தான் கிடைக்கும்.விற்பனையகம் மட்டும் சர்வதேச அளவில் பிரமிப்பூட்டும் வகையில் பிரமாண்டமாக இருந்தால் மட்டும் போதுமா, வாடிக்கையாளர்களுக்கு கனிவான சேவை அளிப்பதற்கென்று பயிற்சி பெற்ற பணியாளர்கள் நெக்ஸாவில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கென்றே கணிசமான தொகையை மாருதி நிறுவனம் செலவிட்டுள்ளது.
நெக்ஸாவில் கார் வாங்கினாலும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை மாருதி சுஸுகி நிறுவன பழுது நீக்கும் மையங்களில் பெறலாம். விரைவிலேயே படிப்படியாக நெக்ஸா பழுது நீக்கு மையங்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று காரை பழுது நீக்க எடுத்துச் செல்வது மற்றும் பழுது நீக்கிய பிறகு வீட்டில் டெலிவரி செய்வது உள்ளிட்ட சேவைகள் நெக்ஸா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 லட்சம் கார்களை விற்பனை செய்ய மாருதி இலக்கு நிர்ணயித்துள்ளது.
பிரீமியம் கார்களான எஸ்-கிராஸ், சியாஸ் போன்றவற்றின் அறிமுகம் தவிர, நெக்சா விற்பனையகமும் இந்த இலக்கை எட்ட நிச்சயம் உதவும். ``நெக்ஸா’’ என்றால் உங்களுக்கு மட்டுமல்ல மற்றவரிடம் சொல் லுங்கள் என்று அர்த்தமாம். நிச்சயம் இந்த விற்பனையகத்துக்கு செல்வோர் அதைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT