Published : 10 Aug 2015 11:20 AM
Last Updated : 10 Aug 2015 11:20 AM

இது தள்ளுபடி காலம்

இது தள்ளுபடி காலம்.! ஆம்; ஆடி மாதம் என்றதுமே உடனடியாக நினைவுக்கு வருவது வியாபார நிறுவனங்களின் தள்ளுபடிதான். ஆடி மாதத்துக்கான இதர விசேஷங்கள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் என எந்த ஊரும் இதற்கு விதிவிலக்கல்ல, அதுபோல பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என வேறுபாடு, பாகுபாடு கிடையாது. குறிப்பாக ஜவுளி விற்பனை நிறுவனங்களுக்கு இது இன்னொரு தீபாவளி.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 50 சதவீதம் முதல் 60 சதவீதம் விலைக் குறைப்பு மற்றும் இன்னபிற சலுகைகள் என ஆடி மாதத்தை அமர்க்களப்படுத்தி விடுகின்றன இந்த நிறுவனங்கள். ஜவுளி விற்பனைக் கடைகள் மட்டுமல்ல, கார் விற்பனை நிறுவனங்களும் இந்த ஆடிக் காத்துக்கு அல்லாடத்தான் செய்கின்றன.

ஆடித் தள்ளுபடியில் பொருட்கள், துணி வகைகள் வாங்குவது எந்த அளவுக்கு லாபகரமானது? இந்த தள்ளுபடி உண்மைதானா ? நுகர்வோராக நமது கடமை என்ன?

எப்படி தள்ளுபடி

பொதுவாக ஜவுளி மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு இதர மாதங்களைவிட பண்டிகை மாதங்களில் விற்பனை இரண்டு மடங்காக அதிகரிக்கும். ஆடி மாதம் என்பது பண்டிகை தொடக்கங்களுக்கான முன் மாதமாக இருப்பதால் பண்டிகைக் கால விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் கண்டுபிடித்த ஒரு வியாபார உத்திதான் இந்தத் தள்ளுபடி என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

தவிர ஆடி மாத விற்பனையில், கையிருப்பில் உள்ள துணிகளை விற்பனை செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கின்றன ஜவுளி நிறுவனங்கள். ஏனென்றால் அடுத்தடுத்து வரும் பண்டிகை நாட்களுக்கான புதிய மாடல்கள், ரகங்களை கொள்முதல் செய்ய கையிருப்பை காலி செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அவை உள்ளன.

ஆடி மாத விற்பனையே பிரமாண்டமாக இருப்பதால் இதற்காகவே தனியாக கொள்முதல் செய்வதும் நடக்கிறது. ஜவுளி விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் சலுகை போல, அவர்கள் கொள்முதல் செய்யும் இடத்திலும், கொள்முதல் சலுகைகளை கொடுக்கிறார்கள். இதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு மாற்றி விடுகின்றனர்.

பண்டிகை காலத்துக்கு இணையாக இந்த மாதத்தில் விற்பனை இருப்பதால் நிறுவனங்கள் தங்களது லாப வரம்பில் சிறிதளவு குறைத்துக்கொள்ளவும் செய்கின்றன. இப்படியாக ஆடி மாத தள்ளுபடிக்கு பின்னர் பல காரணங்கள் இருக்கின்றன.

கூடவே ஆடி மாதத்தில் தள்ளுபடி கொடுத்தால்தான் கடைகளுக்கு செல்வோம் என்கிற நுகர்வோர்களின் மனநிலையும் ஆடித் தள்ளுபடி என்கிற தாரக மந்திரத்தின் எழுதப்படாத விதியாக உள்ளது.

தள்ளுபடி லாபமா?

எல்லா வர்த்தக நிறுவனங்களிலும் புதிய கொள்முதல் மற்றும் கையிருப்பு இரண்டையும் சேர்த்துதான் விற்பனை செய்வார்கள். அதுபோல எல்லா வகைகளுக்கும் தள்ளுபடி வழங்கிவிட மாட்டார்கள். 50 சதவீதம் தள்ளுபடி என்றால் அது வாடிக்கையாளர்களை கடைக்கு உள்ளே இழுக்கிற உத்திதான். எத்தனை சதவிகிதம் தள்ளுபடி என்பதைப் பொறுத்து அது கையிருப்பு துணியா அல்லது புதுத் துணியா என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக 5 முதல் 15 சதவீத தள்ளுபடி கிடைத்தால், அது அவர்களுக்கு கிடைத்த சலுகை, அல்லது அவர்களுக்கான லாபத்தை குறைத்துக் கொள்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 50 சதவீத தள்ளுபடி என்பது மிகச் சில துணிகளுக்கு மட்டும்தான். இதைத்தான் கொட்டை எழுத்தில் எழுதி வைப்பார்கள். அதுவும் பத்து துணிகளை மூலையில் தொங்க விட்டிருப்பார்கள்.

15 சதவீதம் வரையிலான தள்ளு படிகளில் புதிய ரகங்கள், மாடல்கள் கிடைக்கும். 20 சதவீதத்துக்கு மேல் இருக்கும் தள்ளுபடிகளில் அப்டேட் பேஷனை எதிர்பார்க்க முடியாது. அதாவது லேட்டஸ்ட் டிசைன்களுக்கு தள்ளுபடி கிடைக்காது. அல்லது குறைவான தள்ளுபடிதான் கிடைக்கும்.

மின்னணு பொருட்கள்

பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, ரைஸ் குக்கர், இன்டெக்‌ஷ்ன் ஸ்டவ் என வீட்டு உபயோகப்பொருட்களுக்குகூட தள்ளுபடி எதிர்பார்க்கிறோம். இதற்கு ஏற்ப மின்னணு பொருட்களை விற்கும் நிறுவனங்களும் இந்த ஆடி சீசனில் கல்லா கட்டுகின்றன. விலை குறைப்பு, ஜீரோ சதவீத வட்டி, தவணையில் வாங்க சலுகைகள் என பல சலுகைகளை அளிக்கின்றன.

இது ஒரு வகையில் நுகர்வோர்களுக்கு தூண்டில் போடும் வேலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது முன்னணி பொருள் உற்பத்தி நிறுவனங்களே நேரடியாக விற்பனை மையங்களை வைத்துள்ளதால் உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப சலுகைகளை அறிவிக்கின்றன. சில தயாரிப்பாளர்கள் பைனான்ஸ் நிறுவனங்களோடு கூட்டு வைப்பதன் மூலம் நுகர்வோருக்கான சலுகைகள் கொடுக்கின்றன.

ஜீரோ சதவீத வட்டி

அவ்வப்போது அறிவிக்கும் இந்த சலுகையை, ஆடி மாதத்தில் மட்டும் ஸ்பெஷல் என குறிப்பிடுவார்கள். தவணை தொகையை மட்டும் கட்டினால் போதும் என்றுதான் நினைப்போம். ஆனால் இதற்கான நடைமுறைக் கட்டணம், மறைமுகக் கட்டணம் என பெரும் தொகை போவது கண்ணுக்குத் தெரியாது. இதை கணக்கிலெடுத்தால் தள்ளுபடி பெரிதாகத் தெரியாது.

பேரம் பேச முடியாது

பொதுவாக அதிகபட்ச சில்லரை விற்பனை விலை என்பது எல்லா தயாரிப்புகளுக்கும் நிர்ணயிக்கப்படும். இந்த விலைக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது என்பதற்காகத்தான் அதை குறிப்பிடுகின்றனர். இந்த விலையிலிருந்து பேரம் பேசினால் கணிசமாக விலையைக் குறைக்கலாம். இதிலும் ‘மேக்ஸிமம் ஆப்பரேட்டிங் விலை’ என்று ஒரு வரம்பு வைத்திருப்பார்கள்.

அதாவது லாபம் குறையாத அளவுக்கு ஒரு வரம்பு நிர்ணயித்திருப்பார்கள். 10,000 ரூபாய் அதிகபட்ச விலை என்று குறிப்பிடப்பட்ட பொருளை 1,000 ரூபாய் குறைத்து 9,000 ரூபாய்க்கு விற்பனை செய்வார்கள். இதிலிருந்தும் ரூ. 500 வரை பேரம் பேசி குறைக்கலாம். இது வர்த்தகத்தில் உள்ள நடைமுறைதான். ஆனால் தள்ளுபடி சலுகைகளில் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது.

தயாரிப்பு தேதி

மின்னணு பொருட்களை தள்ளு படியில் வாங்குவதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் அதன் தயாரிப்பு தேதி மற்றும் மாடல். பொதுவாக, தயாரிக் கப்பட்ட தேதியிலிருந்து இரண்டரை வருடங்களுக்கு மட்டுமே அந்த மாடலுக்கான உதிரிபாகங்கள் கிடைக்கும். இடைப்பட்ட காலத்தில் புதிய மாடலை கொண்டுவந்து விடுவார்கள்.

தள்ளுபடி சலுகைகளை பெற வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதம் வரை காத்திருக்க தொடங்கிவிட்டோம். இதை புரிந்து கொண்டு தற்போது செல்போன் விற்பனையாளர்களும் இறங்கிவிட்டனர்.

கார் விற்பனை நிறுவனங்கள்கூட ‘இந்த ஆடிக்கு வாங்க காரை ஓட்டிகிட்டு போங்க’ என அமர்க்களப்படுத்துகின்றனர்.

அடக்க விலைக்கு விற்பனை செய்கிறோம், லாபம் இல்லாமல் விற்கிறோம் என்பதெல்லாம் வாடிக் கையாளர்கள் மனதைக் குளிரவைக்கும் பேச்சு. தள்ளுபடியில் வாங்குவது லாபமானது என்று கொண்டாட்டமோ, ஏமாற்றுகிறார்கள் என்று புறக்கணிக் கவோ தேவையில்லை. கொடுக்கும் காசுக்கு தரமான பொருளை வாங்க வேண்டியது நுகர்வோரான நமது கடமைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x