Published : 07 Oct 2019 12:01 PM
Last Updated : 07 Oct 2019 12:01 PM
கடந்த வாரம் இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் வெளியிட்ட ஒரு தகவல் மிகவும் அதிர்ச்சியளித்தது. இந்தியாவில் இணையதளம் உபயோகிப்போரில் 6 கோடியே 60 லட்சம் பேர் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட பிரிவினர் என்பதுதான் அது. இந்த நவீன டிஜிட்டல் உலகம் குழந்தைகளின் திறன்களை வளர்த்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் இணையதள உபயோகம் இந்திய குழந்தைகளிடம் ஆபத்தான பல விஷயங்களை உருவாக்குகிறது என்பதுதான் பிரச்சினை.
சிறுவர்களின் ஆன்லைன் உலகம் பெரும்பாலும் அவர்களை ஆபத்தில் சிக்க வைப்பதாக இருப்பதுதான் நிதர்சனமான உண்மை. தேவையில்லாத பல விஷயங்களை பார்ப்பது, தவறான நபர்களிடம் சிக்குவது போன்ற பல விஷயங்கள் இணையதளம் மூலமாகவே நடந்தேறி வருகின்றன. ஆன்லைன் மூலமான பல விஷயங்கள் குழந்தைகளின் உயிருக்கே உலை வைப்பதாக அமைந்துள்ளன என்பதுதான் கடந்த கால சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். புளூவேல் சேலஞ்ச் எனப்படும் ஆன்லைன் சவால் சிறுவர்களின் உயிரைக் குடித்தது.
மேலும் இளம் பிராயத்தினர் பலரையும் தற்கொலைக்கு தூண்டுவதும் ஆன்லைன் சமாச்சாரங்கள்தான். அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்த பிறகு அங்கு விழித்துக் கொண்டு குழந்தைகளைக் கெடுக்கும் ஆன்லைன் விஷயங்களுக்கு கடுமையான சட்டம் கொண்டு வந்து தடை விதித்தது. சிறுவர்கள் இதுபோன்று ஆன்லைன் வலையில் சிக்குவதற்கு பெற்றோரும், கல்வி நிறுவனங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை ஒரு போதும் மறுக்க முடியாது.
குழந்தைகள் எத்தகைய இணையதளங்களை பார்க்கலாம் என்பதை வடிகட்டி அனுப்புவதற்கு ஏகப்பட்ட சாஃப்ட்வேர்கள் உள்ளன. வீட்டில் குழந்தைகள் கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது அதை கட்டுப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. தேவையற்ற விஷயங்களை தவிர்க்கும் சாஃப்ட்வேரை பயன்படுத்தி அத்தகைய இணையதளங்கள் தங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் நுழையாதவாறு பார்த்துக் கொள்ள முடியும். இணைய
தளங்களை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது. குறிப்பிட்ட இணையதள நடவடிக்கைகள் வரம்பை மீறும் வகையில் இருப்பின் அதற்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும். இதற்குரிய கொள்கைகளை வகுக்க வேண்டியதும் அவசியமாகும்.
அமெரிக்காவில் சுதந்திரம் அதிகம், ஆனால் அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை அந்நாட்டு அரசு வரையறுத்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்திலும் தீவிரமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் இதுபோன்று தகவல்களை திரட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் அதைத் தடுக்க வலுவான சட்டங்கள்தான் இங்கில்லை. இந்தியாவில் சமூக வலைதளங்கள் மீது கட்டுப்பாடு ஏதும் கிடையாது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மோசமான கருத்துகள், தகவல் பரிமாற்றங்கள் வரையறை, கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் பகிரப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர், சிறுவர்களைக் காப்பதற்கான சட்ட திட்டங்கள் எதுவும் இங்கில்லை. இங்குள்ள சிறுவர்களில் பலரும் முதல் முறையாக இணையதளம் மூலமாக கருத்துகளையும் தகவல்களையும் பெறுகின்றனர். அந்த வகையில் தொழில்நுட்ப நிறுவனங்களான ஃபேஸ்புக், ஆப்பிள், கூகுள் ஆகியவற்றுக்கும் இளம் தலைமுறையினரைக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் இளம் பிராயத்தினர் அனைவருமே எதிர்கால சமூகத்தினர்தான். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்குமே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT