Published : 30 Sep 2019 11:04 AM
Last Updated : 30 Sep 2019 11:04 AM
பர்வதவர்தினி.சி
vardhini.c@thehindu.co.in
வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு, தாங்கள் தாக்கல் செய்தரிட்டன் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்ற கவலை ஏற்படும் காலமிது. தாங்கள் தாக்கல் செய்த படிவம் பரிசீலனைக்குப்பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது அதில் ஏதேனும் பிரச்சினை இருக்குமா என்ற சிந்தனை அது ஏற்கப்படும் வரை இருந்து கொண்டுதானிருக்கும். இது தவிர்க்க முடியாததுதான்.
ஏனெனில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்போது சில சமயங்களில் அதிகாரிகள், தாக்கல் செய்தவர்கள் தங்களது வருமானத்தை குறைவாகக் காட்டியிருக்கலாம், இதனால் வரி குறைவாக செலுத்தியிருக்கும் வாய்ப்பை கண்டறிவர். இதனால் வருமான வரி சட்ட விதி 143 (2)-ன் கீழ் படிவம் தாக்கல் செய்த நபர்கள் குறிப்பிட்ட தேதியில் நேரில் ஆஜராகி படிவத்தில் தாக்கல் செய்துள்ள செலவு விவரங்களுக்கான ஆதாரங்களை கோருவர். இது பொதுவாக ஆய்வு மதிப்பீடு (scrutiny assessment) எனப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது வருமான வரி பிரிவு 143 (3)-ன் கீழ் வரும். வரி செலுத்துவோர் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்வதைத் தடுப்பதற்கும், வரித்துறையில் முறைகேடு நிகழாமல் தடுக்கவும், மனித குறுக்கீடு, அதாவது வருமான வரி படிவங்களை தனி நபர் அதிகாரி ஆய்வு செய்வதை தடுக்கும் பொருட்டு, மனித குறுக்கீடு இல்லாத ஆன்லைன் மூலம் வரி படிவங்களை (ரிட்டர்ன்) தாக்கல் செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
வரித்துறை கொண்டு வந்துள்ள இ-அசெஸ்மென்ட் 2019 இத்தகைய சிரமங்களை முற்றிலுமாக தவிர்க்க உதவும். இ-அசெஸ்மென்ட் முழுக்க முழுக்க வெளிப்படையான, ஆய்வு மதிப்பீடு முழுக்க முழுக்க கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையிலான நடைமுறை. தனிப்பட்ட அதிகாரிகளின் ஆதிக்கத்தை முழுக்க முழுக்க தவிர்க்கும் வகையில் இது ஒரு குழுவால் மதிப்பீடு செய்யப்படுவதாகும்.
இது மிகவும் வலிமையான குழுவாகும். இந்தக் குழுவானது நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும், எந்த ஒரு தனி நபரின் இ-ரிட்டர்னை மதிப்பீடு செய்யும். அதேபோல தாக்கல் செய்தவருக்கு அனுப்பப்படும் எந்த ஒரு நோட்டீஸ் அல்லது தகவல் தாக்கல் செய்தவரின் மின்னஞ்சல் முகவரிக்குத்தான் அனுப்பப்படும். அதேபோல ஒவ்வொரு மின்னஞ்சல் அனுப்பும்போதும் அது பற்றிய குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சம்பந்தப்பட்ட நபரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இது குறித்த பதிலை மின்னஞ்சல் மூலமாக 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் அனுப்ப வேண்டும்.
இவ்விதம் கிடைக்கப்பெற்ற பதிலை தேசிய இ-அசெஸ்மென்ட் மையம் (என்சி) பதிவேற்றி அதை நாட்டின் எந்த பகுதியில் உள்ள மதிப்பீட்டு குழுவுக்கும் (ஏயு) அனுப்பும். இது தானியங்கி முறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். கிடைக்கப்பெற்ற பதிலை தொழில்நுட்ப ரீதியில் அல்லது பரிசீலனை அடிப்படையில் வரைவு மதிப்பீடு அல்லது தாக்கல் செய்த ரிட்டர்ன் ஏற்கப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கும். இதை தேசிய இ-அசெஸ்மென்ட் மையம் கண்காணித்து இறுதி மதிப்பீட்டு அறிக்கையை, தேவைப்பட்டால் வரி தாக்கல் செய்தவரிடம் விளக்கங்களைப் பெற்று அனுப்பி வைக்கும். இ-அசெஸ்மென்டில் தேவைப்பட்டால் மட்டுமே ஆய்வுக்குள்படுத்தப்படும்.
இதுபோன்ற ஆன்லைன் மூலமான வரி செலுத்துவோரின் ரிட்டர்னை மதிப்பீடு செய்வது இப்போது ஒன்றும் புதிதல்ல. வருமான வரித்துறை அதிகாரிகளுடனான உரையாடலை தவிர்ப்பதற்காக இ-மெயில்அடிப்படையிலான மதிப்பீடு 2015-ம் ஆண்டு அக்டோபரிலேயே தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு வகையான பரிசீலனை, நடைமுறை, மின்னஞ்சல் மூலமாககேள்விகள் உள்ளிட்டவை மும்பை, பெங்களூர், டெல்லி, அகமதாபாத், சென்னை ஆகிய நகரங்
களில் தாமாக முன்வந்து தாக்கல் செய்வோருக்காக ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2017 ஏப்ரலில் இ-புரொசீடிங்ஸ் எனப்படும் முறை கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து இ-பைலிங் முறையை வரித்துறை தனது இணையதளத்தில் அமல்படுத்தியது. குறிப்பாக இ-புரொசீடிங்ஸ் நடைமுறையில் எண் சார்ந்த தவறுகள் சரி செய்ய முடிந்தது. குறிப்பாக படிவம் 26 ஏஎஸ், படிவம் 16, படிவம் 16 ஏ ஆகியவை இம்முறையில் ஏற்கப்பட்டன. தற்போது கொண்டு வரப்பட்ட இ-அசெஸ்மென்ட் முறைக்கும், இ-புரொசீடிங் முறைக்கும் இரண்டு வித்தியாசம் உள்ளது. முதலாவது சில குறிப்பிட்ட ஆய்வு செய்ய வேண்டிய விண்ணப்பங்கள் மட்டுமே இந்த முறையில் ஏற்கப்படும். இரண்டாவது, இ-அசெஸ்மென்ட் முறையில் மதிப்பீடு செய்த அதிகாரியே மீண்டும் அந்த படிவத்தை ஆய்வு செய்வதற்கு வழி இல்லை.
சாதக, பாதக அம்சங்கள் வருமானவரித்துறை அதிகாரி, வரி படிவம் தாக்கல் செய்தவர் நேரடியாக பேச்சு நடத்தும் முறை தவிர்க்கப்படும். வரி செலுத்துவோர் சிரமப்படக்கூடாது, அவர் எத்தகைய துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதற்காகவும், வரித்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வரி செலுத்துவோர் ஆய்வுக்கு வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இது தொடர்பாக வரி செலுத்துவோரின் நேரம், பயண நேரம் ஆகியவை மிச்சமாக்கப்பட்டுள்ளது. வரி படிவம் வரவில்லை, கால தாமதமாக வந்தது என்று சாக்கு போக்கு கூறவாய்ப்பே இல்லை.
வரித்துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக ஆஜராகி விளக்கம் கூறுவதற்கான வாய்ப்பு இதில் இல்லை என்றாலும் அதுவே சில சமயங்களில் பாதகமாக மாறவும் வாய்ப்புள்ளது என்று ஆண்டர்சன் குளோபல் நிறுவன ஆலோசகர் சந்தீப் ஜூன்ஜூன்வாலா தெரிவிக்கிறார். இருந்தாலும் தேவைப்பட்டால் வீடியோ கான்பரன்ஸ் முறையில் சம்பந்தப்பட்ட நபர் அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்கவும் வாய்ப்புள்ளது.
அந்த வாய்ப்பானது இரண்டு சந்தர்ப்பங்களில் அளிக்கப்படுகிறது. வரி படிவத்தை ஆய்வு செய்து அதற்கான வரைவு அறிக்கையை ஏயு தாக்கல் செய்த பிறகு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரப்படுவார். ஆனால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரியவரை அழைப்பதற்கு சில நிபந்தனைகளை மதிப்பீட்டு அதிகாரிதான் தீர்மானிப்பார் என்று உள்ளது. இதேபோல வரி தாக்கல் செய்தவரும் விரும்பினால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அழைக்கும் வாய்ப்பை அளிக்கலாம் என்று ஜூன்ஜூன்வாலா தெரிவித்துள்ளார்.
அனைத்துக்கும் மேலாக இ-அசெஸ்மென்ட் திட்டமானது முகம் தெரியாத நபரால் மேற்கொள்ளப்படுவது என்றெல்லாம் இருந்தாலும், மதிப்பீட்டை சம்பந்தப்பட்ட நபர் ஏற்கும் வரைதான். ஒருவேளை குறைதீர் ஆணையர் அவரைத் தொடர்ந்து மேல் முறையீட்டு தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் ஆகியவற்றிற்கு செல்லும்போது அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியாது. அப்போது நேரில் ஆஜராகித்தான் பதில் அளிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT