Published : 30 Sep 2019 10:27 AM
Last Updated : 30 Sep 2019 10:27 AM
இந்திய அளவில் வாகன விற்பனை இந்த ஆண்டில் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. கிட்டத்தட்ட முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அளவில் விற்பனை சரிந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ச்சியாகப் பண்டிகைகள் வருவதால், வாகன விற்பனை அதிகரிக்கக் கூடும் என்று வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இதை முன்னிட்டு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை களமிறக்க உள்ளன. மாருதி, ரெனால்ட், ஹூண்டாய், டாடா, டட்ஸன், ஸ்கோடா, டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை வரும் நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளன.
மாருதியின் எஸ்-ப்ரஸ்ஸோ: நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு மாருதி சுசூகியின் புதிய தயாரிப்பான எஸ்-ப்ரஸ்ஸோ 30-ம் தேதியான இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மைக்ரோ எஸ்யூவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு இதன் வடிவமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ரெனால்ட் க்விட்டுக்கு போட்டியாக இது இருக்கும் என்று தெரிகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விற்பனையாகும் அனைத்து வாகனங்களும் பிஎஸ் 6 விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், மாருதி சுசூகி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எஸ்-ப்ரஸ்ஸோவை பிஎஸ்6 தொழில் நுட்பத்தின்படி உருவாக்கியுள்ளது. இது மேனுவல் கியரைக் கொண்டிருக்கும். 1195 சிசி திறனை கொண்டு இருக்கும். இதன் பெட்ரோல் என்ஜின், லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. இதன் விலை ரூ.4 லட்சம் முதல் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.
ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிப்ட்: ரெனால்ட் தயாரிப்பில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்ற கார்களில் ஒன்று க்விட். இந்தப் பண்டிகை காலத்தை ஒட்டி க்விட்டில் சில மாறுதல்களை மேற்கொண்டு அதன் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த ரெனால்ட் திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய மாடலில் அதன் புறத் தோற்றம் மேலும் மெருகேற்றப்பட்டு இருக்கிறது. உள்புறத்திலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால், இன்ஜின் முந்தைய மாடலைப் போன்றே பிஎஸ்-4 தயாரிப்பில்தான் வெளிவருகிறது. 799சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் பெட்ரோல் இன்ஜின் 54 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் விலை ரூ.3.20 லட்சம் முதல் ரூ.4.80 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது. இது அக்டோபர் மாதத்தில் அறிமுகமாக உள்ளது.
ஹூண்டாய் எலன்ட்ரா: சமீபத்தில்தான் ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸ்-ஐ அறிமுகம் செய்தது. இருந்தும் ஸ்கோடா ஆக்டாவியா, டொயோட்டா கொரோலா அல்டிஸ் மற்றும் ஹோண்டா சிவிக் ஆகியவற்றுக்கு போட்டியாக தனது புதிய மாடலை களமிறக்க வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில் ஹூண்டாய் எலன்ட்ரா மாடலை புதுப் பொலிவுடன் மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளது. அதன் புறத் தோற்றம் மேலும் வசீகரமாக மாற்றப்பட்டுள்ளது. உள் அமைப்பிலும் நவீன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 1999 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் பெட்ரோல் இன்ஜின் 152 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் விலை ரூ.14 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.
டாடா டியாகோ விஷ்: டாடா நிறுவனமும் இந்த அக்டோபரை விடுவதாக இல்லை. 2017-ல் வெளிவந்த டியாகோ, தற்போது மீண்டும் புதுப் பொலிவுடன் வெளிவர உள்ளது. முந்தைய மாடலில் இருந்து பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இந்தப் புதிய டியாகோ விஷ் எடிஷனில் மேற்கொள்ளப்படவில்லை. மேற்கூரை, முகப்பு வடிவம் இரண்டில் மட்டும்தான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் என இருவகைகளிலும் வெளிவருகிறது. 1047 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் பெட்ரோல் இன்ஜின் 85 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யக் கூடியது. விலை தோராயமாக ரூ.5 லட்சம் முதல் இருக்கும் என்று தெரிகிறது.
டட்சன் கோ, கோ பிளஸ்: டட்சனின் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களும் முக்கிய மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த இருமாடல்களும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வசதியுடன் வர உள்ளன. 1198 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் பெட்ரோல் இன்ஜின் 77 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யக்கூடியது. லிட்டருக்கு 19 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட்: ஸ்கோடா நிறுவனம் சார்பாக கோடியாக் ஸ்கவுட் களமிறங்க உள்ளது. ஆஃப் ரோடிலும் பயணிக்கத்தக்க வகையில் இந்த மாடல் வடிமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் தோற்றமும் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.36 லட்சம் முதல் ஆரம்பம் ஆகும் என்று தெரிகிறது.
டொயோட்டா வெல்ஃபயர்: மற்ற நிறுவனங்கள் முந்தைய மாடலை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்து வருகிற நிலையில் டொயோட்டா நிறுவனம் புதிய உயர்ரக எம்பிவி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. வெல்ஃபயர் என்று பெயரிடப்பட்டு இருக்கும் டொயோட்டாவின் இந்தப் புதிய தயாரிப்பு, மெர்சிடஸ் வி கிளாஸுக்கு போட்டியாகக் களம் இறங்க உள்ளது.
வெல்ஃபயர் கிட்டத்தட்ட ஒரு மினிவேன். பெட்ரோல் மற்றும் மின்சார இணைப்பில் இயங்கக்கூடிய இதன் 2.5 லிட்டர் இன்ஜின் 150 ஹார்ஸ் பவரை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் விலை ரூ.80 லட்சம் முதல் ஆரம்பமாகும் என்று தெரிகிறது. வீழ்ச்சியடைந்த வாகன விற்பனையை இந்தப் பண்டிகைக் காலம் மீண்டும் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT