Published : 20 Jul 2015 11:18 AM
Last Updated : 20 Jul 2015 11:18 AM
உலகின் மிகப்பெரிய மென் பொருள் தயாரிப்பு ஜாம்பவான் நிறுவனம். இன்றுவரை இதன் இயங்குதளத்தோடு (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) போட்டிபோட ஆள் கிடையாது. இதெல்லாம் இருக்கட்டும், நோக்கியாவை வாங்கி கையைச் சுட்டுக் கொண்டது ஏன் என்று இன்றுவரை தொழில்நுட்ப உலகம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.
சரிந்து கொண்டிருந்த நோக்கியா நிறுவனத்தை 2012-ம் ஆண்டு 720 கோடி டாலர் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்கியது. அந்த நேரத்தில் நோக்கியா தனது சந்தை மதிப்பை கணிசமாக இழந்திருந்தது. அதற்கு முன்பாக 2010-ம் ஆண்டில் நோக்கியா செல்போன்களின் விண்டோஸ் இயங்குதளத்துக்கான கூட்டில் இரண்டு நிறுவனங்களும் ஈடுபட்டிருந்தன.
செல்போன் விண்டோஸ் தொழில்நுட்பத்துக்காக ஆரம்பித்த கூட்டு, அந்த நிறுவனத்தை வாங்க வைத்தது. ஆனால் செல்போன் விண்டோஸ் பயனாளிகளின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. கூகுள் ஆண்ட்ராய்டும், ஆப்பிளும் கொடுத்த வசதி காரணமாக விண்டோஸ் போன்கள் மந்தமாகவே விற்பனையானது. ஆண்ட்ராய்ட் போன்களின் அசுர வளர்ச்சியில் விண்டோஸ் போன்கள் நிலைகுலைந்து போனது என்றுதான் சொல்லவேண்டும்.
தற்போது மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தங்களது தவறை ஒப்புக் கொண்டுள்ளார். மொபைல் உலகை கணிக்கத் தவறிவிட்டோம். இது எங்களது தவறுதான் என்று கூறியுள்ளார். ஆனால் செல்போன் தயாரிப்பைக் கைவிடும் எண்ணமில்லை என்றும் கூறியுள்ளார்.
நாதெள்ளாவின் இந்த பேச்சுக்கு பின்னால் மைக்ரோசாப்ட் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்கின்றனர் தொழில்நுட்ப உலகைக் கணிப்பவர்கள்.
இந்த அடுத்த கட்ட பாய்ச்சலின் ஒரு பகுதியாக ஜூலை 29 ஆம் தேதி விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட உள்ளது. இது மைக்ரோ சாப்டின் அடுத்த அவதாரமாக இருப்பது மாத்திரமல்ல, இயங்குதள உலகிலும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர்.
மைக்ரோசாப்டின் விண்டோஸ்10 இயங்குதளத்துக்காக உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
விண்டோஸ் 8
பொதுவாக மைக்ரோசாப்ட் இயங்குதளம் யூசர் பிரண்ட்லி என்று பெயர் வாங்கியதுதான். விண்டோஸ் 7 இயங்குதளத்தை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர்.
விண்டோஸ் 7 லிருந்து மேம்படுத்தி வெளியிட்ட விண்டோஸ் 8 ல் தங்களுக்கு ஏற்கெனவே பழக்கமான startup, programe files, shut down போன்றவை டெஸ்க் டாப்பில் வரவில்லை என்பதால் பலரும் அந்த வடிவமைப்பை விரும்பவில்லை.
அதை மேம்படுத்தி வெளியிட்ட 8.1 இயங்குதளத்திலும் சில மாற்றங்கள் மட்டுமே இருந்தன. இதன் காரணமாக விண்டோஸ் 8 இயங்குதளம் கிட்டத் தட்ட தோல்விதான்.
விண்டோஸ் 10
விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இருந்த தவறுகளை சரிசெய்து தற்போது விண்டோஸ் 10 வெளியிட உள்ளது. இதற்கான சோதனை வெளி யீட்டில் பல புதிய வசதிகளையும் மைக்ரோசாப்ட் அளித்துள்ளது.
முக்கியமாக விண்டோஸ் 10 இயங்குதளம் பர்சனல் கம்ப்யூட்டர் முதல் லேப்டாப் மற்றும் மொபைல் சாதனத்தையும் ஒருங்கிணைக்கும் விதமாக இருக்கிறது. சோதனை முயற்சியாக உலகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் இதை பயன்படுத்த வைத்து கருத்து கேட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் தனது இயங்குதள வடிவமைப்பு மெமரியில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறது என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.
விண்டோஸ்-7 வடிவமைப்பில் இந்த தவறை மைக்ரோசாப்ட் சரிசெய்தது. இயங்குதளத்துக்கு குறைவான இடத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் கணினி வேகமாக இயங்க இடம் கொடுத்தது. விண்டோஸ்-10 இயங்குதளத்திலும் இந்த வேகம் இருக்கும்.
விண்டோஸ் 10 இயங்குதளம் குறித்து பேசியபோது ’விண்டோஸை தேடி வாங்கிய மக்களிடமிருந்து விண்டோஸ் இயங்குதளத்தை நேசிக்கும் மக்களை தேடி நகர்கிறோம் என்று நாதெள்ளா கூறியதும் முக்கியமானது.
விண்டோஸ்-10 இயங்குதளத்தின் முக்கிய அம்சமாக குறிப்பிடப்படுவது அது ஒருங்கிணைந்து செயல்படக்கூடியதாக இருப்பதுதான்.
அதாவது வீட்டு கணினியில் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் செய்துகொண்டிருந்த வேலையை, அப்படியே லேப்டாப் அல்லது டேப்லட், போன் என தொடரலாம். அதுபோல செல்போனில் தொடங்கிய வேலையை, வீட்டுக் கணினி அல்லது லேப்டாப், டேப்லட் என தொடர முடியும். அதாவது அனைத்து சாதனங்களையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வருகிறது.
இதன் மூலம்தான் செல்போன் உலகையும் விண்டோஸ் பிடிக்குள் கொண்டுவர முடியும் என மைக்ரோசாப்ட் நம்புகிறது.
அப்ளிகேஷன்கள்
விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் பல வசதிகளையும் மைக்ரோசாப்ட் தர உள்ளது. எக்ஸ்பாக்ஸ், ஹோலோ லென்ஸ் (HoloLens) மற்றும் அது சார்ந்த அப்ளிகேஷன்களும் வழங்க உள்ளது. ஹோலோ கிராபிக் கம்ப்யூட்டிங் மூலம் பயனாளிகள் முப்பரிமாண ஹோலோ கிராம்களை அமைத்துக் கொள்ளலாம். இது பொழுதுபோக்கு, மருத்துவம் என பல வகைகளில் பயனுடையதாக இருக்கவல்லது.
பிரவுசர் ’எட்ஜ்’
விண்டோஸ் 10 இயங்குதளத்தோடு மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரையும் கொடுக்கிறது. இதற்கான எதிர்பார்ப்பும் எகிறிக் கிடக்கிறது, இதுவரை கூகுள் குரோம் பிரவுசர்தான் அதிக வேகத்தில் இயங்குவதாக இருக்கிறது. இதைவிடவும் 112 சதவீதம் அதிக வேகத்தில் இயங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக கூகுள் சபாரி உள்ளிட்ட பல பிரவுசர்களுடன் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
இலவசம்
விண்டோஸ்-10 இயங்குதளத்தை இலவசமாக வழங்க உள்ளது. மைக்ரோ சாப்ட் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8, 8.1 பயன்படுத்து பவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது. தவிர பழைய இயங்கு தளங்களை மேம்படுத்த வேண்டும் என்பவர்கள் விண்டோஸ்-10 தளத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.
கனவு பலிக்குமா
தனக்கு வருமானம் தராத எந்த தொழில்களையும் ஏறக்கட்டுவதுதான் பெரிய நிறுவனங்களின் இயல்பு. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது தொழில்களை ஏறக்கட்டியுள்ளது. இண்டர்நெட் எக்ஸ்புளோர் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மொபைல் பிரிவுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு கட்டாது என நம்பலாம்.
அதே சமயத்தில் இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல விண்டோஸ் இயங்குதளத்திலேயே பயன்படுத்துவதும் புத்திசாலித்தனமே என்கின்றனர்.
பெரும்பாலும் வீட்டு கணினி மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் 90% விண்டோஸ் இயங்குதளமே உள்ளது. இதை அப்படியே பயனாளிகளின் இதர பயன்பாட்டுக்கும் விரிவுபடுத்து வதன் மூலம் விண்டோஸ்10 புரட்சி படைக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பு.
ஆனால் மைக்ரோசாப்டின் இந்த அவதாரம் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT