Published : 26 Aug 2019 11:32 AM
Last Updated : 26 Aug 2019 11:32 AM

யுடரன் 34: கிரைஸ்லர் எங்கே என் மீட்பர்?

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஒன்ஸ் அப்பான் எ டைம், லாங் லாங் எகோ, நோபடி நோஸ் ஹெள லாங் எகோ, ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா. அவருக்கு ஒரே மகள். இளவரசி அழகில் பளிச். பழகும் இனிமையில் வெல்லக்கட்டி. இதனால், ராஜாவுக்கு அவள் செல்லக்குட்டி. ஒரு நாள். ராட்சசன் ஒருவன் வந்தான். இளவரசியைக் கடத்திக்கொண்டு போனான். ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு மர்மக்குகையில் ஒளித்துவைத்தான். மன்னர் தன் வீரர்களைப் பல நாடுகளுக்கும் அனுப்பித் தேடினார். மகள் கிடைக்கவில்லை. இளவரசியை மீட்டு வருபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு தருவதாக அறிவித்தார். ஒரு இளைஞன் வந்தான்.

அழகன், அறிவாளி, மாவீரன். தன் தாயை வணங்கிப் புறப்பட்டான். இளவரசியோடு வெற்றிகரமாகத் திரும்பினான். ராஜா ஆயிரம் பொற்காசுகள் தந்ததோடு, இளைஞனுக்கு மகளையும் திருமணம் செய்துவைத்தார்.
யு டர்ன்களும் இப்படி வீர சாகசக் கதைதான். சாதாரணமாக யு டர்னில் என்ன நடக்கும்? வெற்றிகரமாக ஓடிய கம்பெனி நஷ்டத்தில் மூழ்கும். வருவார் ஒரு ஹீரோ. பள்ளத்தில் விழுந்த நிறுவனத்தை மேலே தூக்குவார், லாபப் பாதைக்குத் திருப்பிவிடுவார். கிரைஸ்லர் யு டர்ன் இப்படியல்ல. முழுக்க முழுக்க வித்தியாசமானது. வாழ்க்கையில் தோற்றுப்போன ஒருவர், தோற்றுப்போன கம்பெனியை மேலே தூக்கிவிட்ட கதை.

பதினைந்தாம் நூற்றாண்டு வரை, உலகில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும்தான். மிருக சக்தியில்லாமல், எந்திர சக்தியால் இயங்கும் வாகனங்களைக் கனவு கண்டவர், லியனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) என்னும் இத்தாலி நாட்டுப் பல்துறை மேதை. தற்போதைய பெட்ரோல் / டீசல் சக்தியால் ஓடும் வாகனத்தை முதலில் உருவாக்கியவர் கார்ல் பென்ஸ் (Karl Benz) என்னும் ஜெர்மன் நாட்டுக்காரர். ஆண்டு 1886. அமெரிக்காவின் முதல் பெட்ரோல் கார் 1893 –ல் வந்தது.

லேட்டாக வந்தாலும், ஐரோப்பாவை விட அமெரிக்காவில் தான் கார்த்தொழில் அதிவேகமாக வளர்ந்தது. 1899–ல் 2,500 கார்கள் உற்பத்தி. அடுத்த 10 ஆண்டுகளில் 485 கார் தயாரிப்பாளர்கள். அவர்களுள் மூவர் பிரம்மாண்டமானார்கள்: 1903 –ல் வந்த ஹென்றி ஃபோர்ட், 1904 – ம் ஆண்டில் பிறந்த ``மாக்ஸ்வெல் – பிரிஸ்க்கோ கம்பெனி” (Maxwell – Briscoe Company), 1907 – ல் உருவான ஜெனரல் மோட்டார்ஸ்.

1921. மாக்ஸ்வெல் – பிரிஸ்க்கோ கம்பெனிக்குப் பல பிரச்சினைகள். விற்பனை மந்தம், தலைக்கு மேல் கடன். கார் தொழிலில் பழுத்த அனுபவசாலியான வால்ட்டர் கிரைஸ்லர் (Walter Chrysler) கம்பெனியை வாங்கினார். ``கிரைஸ்லர் கார்ப்பரேஷன்” என்று பெயர் மாற்றினார். எஞ்சினீரிங்கிலும், வடிவமைப்பிலும் தலை சிறந்தவர்களைத் தன் உதவியாளர்களாக்கிக் கொண்டார். செலவுகளைக் குறைத்தார்.

பல புதிய மாடல் கார்கள் அறிமுகம் செய்தார். ஆறே வருடங்களில், அமெரிக்கக் கார்த் தயாரிப்பில் ஒன்பதாம் இடம். கிரைஸ்லர் வானத்தை வளைக்கும் கனவுகள் காண்பவர். அதற்காக ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர். 1928 –ல்
``டாட்ஜ்” என்னும் கார் கம்பெனி விலைக்கு வந்தது. வாங்கினார்.

இப்போது, ஜெனரல் மோட்டார்ஸுக்கும், ஃபோர்ட் கம்பெனிக்கும் அடுத்த மூன்றாம் இடம். ``பிளைமவுத்” (Plymouth) என்னும் காரை அறிமுகம் செய்தார். மாபெரும் வெற்றி கண்டது. (நடிகர் திலகம் சிவாஜியிடமும் இந்தக் கார் இருந்தது.) 1929 –ல் அமெரிக்காவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. கார்கள் விற்பனை சரிந்தது. பிளைமவுத் தயவால், கிரைஸ்லர் மட்டுமே தாக்குப் பிடித்த ஒரே கம்பெனி. 1934. ``ஏர்ஃப்லோ” (Airflow) என்னும் கார் களத்துக்கு வந்தது. படுதோல்வி. கம்பெனியை வேகமாக ரிவர்ஸ் கியரில் இழுத்தது.

அடுத்த பல ஆண்டுகளுக்குச் சனி திசை. 1939–ல் ஆரம்பித்து, 1945 வரை நீடித்த இரண்டாம் உலகப் போர் உதவிக்கரமாக அமைந்தது. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம், அனைத்துக் கார் கம்பெனிகளையும், வாகனங்கள் தயாரிப்பை நிறுத்தச் சொன்னார்கள். துப்பாக்கிகள், ஆயுதங்கள், டாங்கிகள், ஜீப்கள், டிரக்குகள், போர் விமானப் பாகங்கள் தயாரிக்கும் கான்ட்ராக்ட் தந்தார்கள். கம்பெனி உயிர் பிழைத்தது இந்தப் பிராணவாயுவால்தான். ஆனால், இதைப் பார்க்க கிரைஸ்லர் இருக்கவில்லை. 1940–ல், தன் 65- ம் வயதில் உயிர் நீத்தார். அவர் சகா. கெல்லர் (Keller) கம்பெனித் தலைவரானார்.

கிரைஸ்லர் தொழிற்சாலையில், எஞ்சினீரிங்கிலும், உற்பத்தியிலும், அபாரத் திறமைசாலிகள் இருந்தார்கள். ராணுவத்துக்கு அற்புதத் தயாரிப்புகள் தந்தார்கள். குறிப்பாக, அவர்களின் டாங்கி-கள் தரத்தின் உச்சம். ஆகவே, யுத்தம் முடிந்து அமைதி திரும்பிய பிறகும், ராணுவ ஆர்டர்கள் தொடர்ந்தன. கார்கள் விற்பனையும் முன்புபோல். 30 வருடங்கள் தொடர் வளர்ச்சி. மூன்றாம் இடம். இதுவரை, சிறிய, மத்திம விலையிலான கார்கள் மட்டுமே தயாரித்த நிறுவனம் 1970 -ல் பிரம்மாண்ட, ஆடம்பரக் கார்கள் தயாரிக்க முடிவெடுத்தார்கள்.

எக்கச்சக்க முதலீடு. எந்த சுபயோக சுபதினத்தில் முடிவெடுத்தார்களோ? 1973–ல் அரேபிய நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கு மிடையே போர். அரபு நாடுகள் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினார்கள். அமெரிக்காவில் பெரிய கார்களுக்கான மார்க்கெட் விழுந்தது. ஜப்பானியச் சிறு கார்கள் அந்த இடத்தைப் பிடித்தன. கிரைஸ்லர் உள்ளிட்ட அத்தனை அமெரிக்கக் கார்த் தயாரிப்பாளர்களுக்கும் பெரும் பாதிப்பு – சமீபத்திய பெரும் முதலீட்டால், கிரைஸ்லருக்கு இன்னும் அதிகமாக.

மறுபடியும் ராணுவத்தின் உதவிக்கரம். 1949 – ல் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் யார் பலசாலி என்னும் கடும் போட்டி. அமெரிக்காவும், 11 நாடுகளும் சேர்ந்து, ``வட அட்லான்ட்டிக் ஒப்பந்த அமைப்பு” (North Atlantic Treaty Organisation – சுருக்கமாக NATO) உருவாக்கினார்கள். இவர்களின் பாதுகாப்புக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்பது உடன்பாடு. இதன்படி, 1977–ல், இந்த நாடுகளுக்கு, M 1 என்னும் புதுவகை டாங்கிகள் தரும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. இந்த முழுப்பணியும் கிரைஸ்லர் கம்பெனிக்கு. ஆனால், இது கேன்சர் நோய்க்குக் கஷாயம் தருவது மாதிரி. 1978 முதல் நோய் முற்றியது.

கம்பெனி தயாரித்த பெரிய கார்கள் விற்கவேயில்லை. ஷோரூம்களில் தூசி படியத் தூங்கின. ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை 54 லட்சம் கார்கள்; ஃபோர்ட் 26 லட்சம்: கிரைஸ்லர் 12 லட்சம். சிறிய கார்கள் தயாரிக்கக் கணிசமான முதலீடு தேவை. அத்தனை பணம் கஜானாவில் இல்லை. நஷ்டத்தில் ஓடியதால், வங்கிகள் கடன் தருவதை நிறுத்தினார்கள். 150 கோடி டாலர்கள் (அன்றைய மதிப்பில் சுமார் 1,200 கோடி ரூபாய்) அவசரத் தேவை. கிடைக்காவிட்டால், 54 வருடக் கம்பெனி மூடும் நிலை. 3,60,000 தொழிலாளிகள் வேலை இழப்பார்கள். பல ஆயிரம் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்களுக்கு கிரைஸ்லர் பண பாக்கி. கம்பெனி திவால் ஆனால், இவர்களும் கடைகளை மூட வேண்டியது தான்.

கிரைஸ்லர் அரசாங்கத்திடம் கையேந்த முடிவு செய்தார்கள். அவர்கள் எடுத்துவைக்க முடிவு செய்த வாதங்கள்;

* மூன்றாம் இடத்தில் இருக்கும் கிரைஸ்லர் மூடினால், ஜப்பானிய டொயோட்டா, நிசான் ஆகியோருக்கு உற்சாக டானிக். அமெரிக்கக் கார் கம்பெனிகளுக்குத் தலை குனிவு. அமெரிக்க மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்
கள்.
* வேலை இழப்புகள். இவை அனைத்துக்கும் மேலாக, M 1 என்னும் டாங்கிகள் தயாரிப்பு தீவிரமாகப் பாதிக்கப்படும். வேறு உற்பத்தியாளரைத் தயாராக்கப் பல வருடங்களாகும்.

ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க அதிபராக இருந்தார். 1980 –ல் அடுத்த தேர்தல். மறுபடி போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். இந்த வேளையில், மக்கள் அபிமானத்தைக் கெடுக்கும் எந்த முடிவையும் அவர் எடுக்கத் தயங்குவார். ஆகவே, அரசின் அனுகூல முடிவு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். ஒரே ஒரு பிரச்சினைதான்.

அரசாங்கம் உதவினால், அதைப் பயன்படுத்தும் திறமை கிரைஸ்லரில் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும். அதற்கு, அபாரமான நிர்வாகத் திறமையும், கார்த் தொழிலில் பழுத்த அனுபவமும் கொண்ட சி.இ.ஓ. தேவை.

யார் அவர்?

லீ அயக்கோக்கா (Lee Iacocca)!

(புதிய பாதை போடுவோம்!)

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x