Published : 06 Jul 2015 12:11 PM
Last Updated : 06 Jul 2015 12:11 PM
கிரிக்கெட்டை வைத்து பலர் தொழில் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது ஒரு கிரிக்கெட் வீரரே கார்ப்பரேட் களத்தில் குதித்திருக்கிறார். யூவீகேன் வென்ச்சர்ஸ் என்னும் ( >www.youwecanventures.com) வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தைத் தொடங்கி இருக் கிறார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.
கிட்டத்தட்ட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் சூழ்நிலையில் இருக்கும் யுவராஜ் சிங் தனது இரண்டாவது இன்னிங்சை துணிகர முதலீட்டு நிறுவனம் மூலம் தொடங்கி இருக்கிறார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த வென்ச்சர் கேபிடல் நிறுவனம் மூலம் ஆன்லைன் நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
புதிய நிறுவனத்தில் ரூ. 50 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் 80 சதவீதம் இவருடைய பங்கும், 20 சதவீதம் நண்பரும் இணை நிறுவனருமான நிஷாந்த் சிங்காலின் பங்கும் உள்ளது. நிஷாந்த் சிங்கால் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியும் கூட. கடந்த இரண்டு வருடங்களாகவே பல புதிய நிறுவனங்கள் முதலீடு கோரி யுவராஜை அணுகி இருக்கிறார்கள்.
சாதாரணமாக முதலீடு செய்வதை விட, தொழில் முறையில் (புரபஷனலாக) செய்தால் என்ன என்கிற யோசனையில் உருவானதுதான் வென்ச்சர் கேபிடல் நிறுவனம். தற்போது 50 கோடி ரூபாய் முதலீடு உள்ளது. தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் 300 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட யுவராஜ் சிங் முடிவு செய்திருக்கிறார்.
ஐபில் போட்டிகளில் அதிகம் ஏலம் எடுக்கப்பட்ட நபர் இவர்தான். 16 கோடி ரூபாய் இவரது ஆண்டு சம்பளம்.
தவிர பூமா, ரிபோக், ஹீரோ மோட்டோ கார்ப், பேர் அண்ட் ஹேண்ட்சம் உள்ளிட்ட பல பிராண்ட்களுக்கு விளம்பர தூதராக இருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு கோடிக்கும் மேலான பாலோயர்கள் இருப்பதால் இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த நிறுவனத்தைத் தொடங்கி இருக் கிறார்.
அதேபோல அடுத்த கட்டத்துக்கு வளரும் நிறுவனங்களாக பார்த்து முதலீடு செய்ய யுவராஜ் திட்டமிட்டிருக்கிறார். மேலும் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்போவதாகவும், ஒவ்வொரு நிறுவனத்திலும் அதிகபட்சம் ரூ.1 கோடி முதல் 1.5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்போவதாகவும் அந்த நிறுவனங்களில் 12 சதவீதம் முதல் 15 சதவீத பங்குகளை வாங்கவும் திட்டம் வைத்திருக்கிறார்கள். ஹெல்த்கேர், விளையாட்டு, கல்வி, சுற்றுலா, பேஷன் உள்ளிட்ட துறைகளில் இவரது நிறுவனம் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.
இதுவரை edukart.com, moovo.in, vyomo.com மற்றும் healthians.com உள்ளிட்ட நிறுவனங்களில் இவரது நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.
விளையாட்டு வீரர்கள் தொழிலில் தடம் பதிப்பது புதிதல்ல. ஆனால் துணிகர முதலீட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ள யுவராஜின் முயற்சி வரவேற்கத்தக்கதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT