Published : 15 Jun 2015 11:17 AM
Last Updated : 15 Jun 2015 11:17 AM
புராண காலத்தில் குருநாதர் துரோணாச்சாரியாரின் சிலையை மானசீகமாக நினைத்து வில்வித்தை பயின்றான் ஏகலைவன். குருகுல கல்வி முடிந்து பாடசாலைக் கல்வி வந்துவிட்டது. நவீன காலத்தில் கணினி மூலமான படிப்பு சாத்தியமாகிவிட்டது.
இருந்தாலும் தொழில்துறையில் ஆலோசகர், வழிகாட்டி, குரு என எவராவது ஒருவர் இருந்துகொண்டேதான் இருக்கிறார். மென்டார் என்னும் வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் `குரு’ என்பதுதான் சாலப் பொருத்தம். தொழில்துறை முன்னோடிகளின் குரு யார் என்பதைப் பார்க்கலாம்.
பெஞ்சமின் கிரஹாம். (1894- 1976):
லண்டனில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய மிகச் சிறந்த பொருளாதார அறிஞர். கொலம்பியா பல்கலையில் பட்டம் பெற்றவுடன் பேராசிரியர் வாய்ப்பு கிடைத்தபோதிலும் வால் ஸ்டிரீட் பங்குச் சந்தையில் கிடைத்த பணிக்கு சேர்ந்தார். சிறந்த தொழில்முறை முதலீட்டாளரும்கூட. 1928-ம் ஆண்டிலிருந்து கொலம்பியா வணிகவியல் கல்வி மையத் தில் பேராசிரியராக பணியாற்றினார்.
இவரிடமிருந்துதான் மிகச் சிறந்த முதலீட்டா ளராக வாரன் பஃபெட் உருவாகியுள்ளார். தனது தந்தைக்குப் பிறகு தனது வாழ்வில் மிக முக்கிய பங்கு கிரஹாமுக்கு உண்டு என்று பஃபெட் கூறுவதிலிருந்தே இவரது பங்களிப்பு புலனாகும். யுசிஎல்ஏ ஆண்டர்சன் நிர்வாகவியல் கல்வி மையத்திலும் சில காலம் முதலீடுகள் குறித்து பாடம் நடத்தியுள்ளார் பெஞ்சமின் கிரஹாம்.
டாக்டர் ஹென்றி எட்வர்ட் ராபர்ட்ஸ் (1941 2010):
வீட்டு உபயோக கம்ப்யூட்டரை முதலில் உருவாக்கியவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸின் குரு இவர்தான். அமெரிக்க பொறியாளரான இவர் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். பர்சனல் கம்ப்யூட்டரின் தந்தை என்றழைக்கப்படுபவர். எம்ஐடிஎஸ் எனும் நிறுவனத்தை 1967-ல் உருவாக்கியவர்.
அந்த நிறுவனம் கால்குலேட்டர்களை தயாரித்தது. 1975-ல் இன்டெல் நிறுவனத்தின் பிராசஸர் கொண்ட ஆல்ட்ஏர் 8800 எனும் பர்சனல் கம்ப்யூட்டரை இவர் உருவாக்கினார். அது பெரும் வெற்றியைப் பெற்றது. இவரது நிறுவனத்தில் பில்கேட்ஸ், பால் ஆலன் ஆகியோர் சேர்ந்து கம்ப்யூட்டருக்கு சாஃப்ட்வேர் எழுதினர். அதுதான் மைக்ரோசாப்டின் முதலாவது சாஃப்ட்வேராகும்.
1977-ல் எம்ஐடிஎஸ் நிறு வனத்தை இவர் விற்றுவிட்டு ஜார்ஜியா சென்று மருத்துவம் படித்து பட்டம் பெற்று சிறிதுகாலம் மருத்துவ ராக பணியாற்றினார்.
டொனால்டு இ கிரஹாம்:
கிரஹாம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலை மைச் செயல் அதிகாரி. 70 வயதாகும் இவர்தான் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கின் குரு. இவர் ஃபேஸ்புக் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத இயக்குநராக உள்ளார். ஹார்வர்டு கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் ராணுவத்தில் சில காலம் பணியாற்றியவர் 1967 மற்றும் 1968-ம் ஆண்டுகளில் வியட்நாம் போரின்போது இவர் ராணுவத் தில் பணியாற்றினார்.
ராணுவத்தில் தகவல்கள் அளிக்கும் பிரிவில் சிறப்பாக செயலாற்றியவர். 1969 மற்றும் 1970-ஆம் ஆண்டுகளில் வாஷிங்டன் நகர காவல்துறையில் பணியாற்றியுள்ளார். 1971-ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் நிருபராக பணியாற்றியுள்ளார். 1976-ல் இந்த பத்திரிகையின் பொது மேலாளராக பொறுப்பேற்றார். 1979-ல் பத்திரிகையின் பதிப் பாளரானார்.
ஆண்ட்ரூ கர்னெகி (1835-1919):
ஸ்காட்லாந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய தொழிலதிபர். அமெரிக்காவில் உருக்கு ஆலை உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் அமெரிக்க தொழிலதிபர் சார்லஸ் ஷ்வாபின் குரு. ஸ்காட்லாந்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். தந்தி பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கி, அமெரிக்க நிறுவன பங்குகளை ஐரோப்பிய நாடுகளில் விற்கும் அளவுக்கு உயர்ந்தார்.
பிட்ஸ்பர்க்கில் கர்னெகி ஸ்டீல் நிறுவனத்தை உருவாக்கினார். கர்னெகி கார்ப்பரேஷன் எனும் நிறுவனம், சர்வதேச அமைதிக்கான கர்னெகி அறக்கட்டளை, கர்னெகி அறிவியல் மையம், ஸ்காட்லாந்தில் கர் னெகி பல்கலைக் கழகம், கர்னெகி ஹீரோ ஃபண்ட், கர்னெகி மெலன் பல்கலை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியுள்ளார்.
லாரி பேஜ், செர்கி பிரின்:
அமெரிக் காவைச் சேர்ந்த இளம் கம்ப்யூட்டர் அறிவியலாளர்கள். இருவரும் கூட்டாக கூகுள் நிறுவனத்தை உருவாக்கினர். 42 வயதாகும் லாரி பேஜ் தற்போது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ). 40 நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தில் 55,600 பணியாளர்கள் பணிபுரி கின்றனர். செர்கி பிரின், ரஷியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய கம்ப்யூட்டர் நிபுணர்.
நண்பர் லாரி பேஜுடன் உருவாக்கிய கூகுள் நிறுவனம்தான் இன்று அதிக லாபம் ஈட்டும் நிறு வனமாகும். உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள இவர்களிருவரும் யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாரிஸா மேயரின் மென்ட ராகக் கருதப்படுகிறார்.
லாரன்ஸ் சம்மர்ஸ்:
அமெரிக்காவின் பொருளாதார நிபுணர். சார்லஸ் டபிள்யூ எலியட் பல்கலைக் கழகம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் வருகை பேராசிரியர். ஃபேஸ்புக் தலைமை செயல் பாட்டு அதிகாரி (சிஓஓ) ஷெரில் சாண்ட் பெர்கின் குரு.
உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை பணியாற்றினார். கிளிண்டன் அதிபராக இருந்தபோது கருவூலத்தின் துணை செயலராக பணியாற்றியவர். 2009-ல் ஒபாமா அதிபரான போது ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியை தீர்ப்பதற்காக அமெரிக்க பொருளாதார கவுன்சிலில் இவர் இடம்பெற்றிருந்தார். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு செய்திப் பத்திரிகை யில் சிறப்பு கட்டுரைகளை எழுதி வருகிறார்.
பிரடெரிக் டெர்மான் (1900 1982):
அமெரிக்காவின் மிகச் சிறந்த பேராசிரியர்களில் இவரும் ஒருவர். சிலிக்கான் பள்ளத்தாக்கின் தந்தை என்றழைக்கப்பட்டவர். வேதியியலில் இளங்கலைப் பட்டமும், மின் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1925-ம் ஆண்டு முதல் ஸ்டான்போர்டு பல்கலையில் பேராசிரி யராகப் பணியாற்றியவர். கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹியூலெட் பக்கார்ட் நிறு வனத்தை உருவாக்கிய வில்லியம் ஹியூலெட் மற்றும் டேவிட் பக் கார்டின் குரு.
வாரன் பஃபெட்:
அமெரிக்க தொழிலதிபர், மிகச் சிறந்த முதலீட்டாளர். சிறந்த நன்கொடையாளரும் கூட. பங்குச் சந்தை முதலீட்டில் 20-ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த நிபுணர் என்று பெயரெடுத்தவர். 84 வயதாகும் இவரது சொத்து மதிப்பு 7,230 கோடி டாலராகும். இவரது குரு பெஞ்சமின் கிரஹாம்.
பில்கேட்ஸ்
(மைக்ரோசாப்ட் நிறுவனர்): அமெரிக்க தொழிலதிபர், சிறந்த நன்கொடையாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், முதலீட்டாளர் என பன்முகம் கொண்டவர். 59 வயதாகும் இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 7,910 கோடி டாலராகும்.
சார்லஸ் ஆர். ஷ்வாப்:
ஸ்டான்போர்டு பல்கலையில் முதுகலை நிர்வாகவியல் பட்டம் பெற்றவர். அமெரிக்க தொழிலதிபர். சிறந்த நன்கொடையாளர். சார்லஸ் ஷ்வாப் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர். இவரது சொத்து மதிப்பு 640 கோடி டாலராகும்.
மார்க் ஜுகர்பெர்க்:
ஃபேஸ்புக் நிறுவனத்தை உருவாக்கிய 5 நிறுவனர்களில் இவரும் ஒருவர். நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3,480 கோடி டாலராகும்.
மாரிசா மேயர்:
யாகூ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக 2012-ம் ஆண்டிலிருந்து இப்பொறுப்பை வகிக்கிறார். உலகின் மிகச் சிறந்த பெண் தொழிலதிபர்களில் ஒருவரான இவருக்கு ஆலோசகராக, உத்வேகம் அளித்தவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின்தான்.
டேவிட் பக்கார்டு (1912-1996)
1939ல் ஹியூலெட் நிறுவனத்தை உருவாக்கிய இவர், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை துணை அமைச்சராக அதிபர் நிக்சன் காலத்தில் பணியாற்றியவர்.
வில்லியம் ரெடிங்டன் ஹியூலெட் (1913-2001)
அமெரிக்க பொறியியல் நிபுணர். ஸ்டான்போர்டு பல்கலையில் இளங்கலைப் பட்டமும், மாசசூசெட்ஸ் பல்கலையில் முதுகலையில் பொறியியல் பட்டமும் பெற்றவர்.
ஷெரில் சாண்ட்பெர்க்:
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. 46 வயதாகும் இவரது சொத்து மதிப்பு 106 கோடி டாலராகும். ஹார்வர்ட் பல்கலையில் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
வில்லியம் ஹியூலெட், டேவிட் பக்கார்டு:
ஹெச்பி என்றழைக்கப்படும் ஹியூலெட் பக்கார்டு கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர்கள். லாரி பேஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT