Published : 08 Jun 2015 10:58 AM
Last Updated : 08 Jun 2015 10:58 AM
கடந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் கடகடவென சரிந்ததை முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்துடனேயே கவனித்து வந்தனர். இதை ஒட்டி இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலைமையை சந்திக்கும் என்கிற கருத்தும் நிலவியது.
சர்வதேச சந்தை நிலவரங்களும், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை காரணமாகவும் சந்தை சரிந்தது என்றாலும், தென்மேற்கு பருவமழை குறித்த இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்பும் சந்தை சரிவுக்கு காரணமாக இருந்ததாக வல்லுனர்கள் குறிப்பிட்டனர்.
நடப்பு ஆண்டில் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக இருக்கும். இதனால் நாட்டின் சில பகுதிகளில் வறட்சி ஏற்படும் என மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக மத்திய புவி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டிருந்தார்.
விவசாயம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்ட மத்திய அரசு தொழில்துறை சார்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பருவ மழையால் பொருளாதாரம் பாதிக்கும் என்றால், இந்திய பொருளாதாரத்தை தாங்கி நிற்பது விவசாய துறைதான் என்பதுதான் தெளிவாகிறது. பருவமழை குறைவு விவசாய உற்பத்தியை பாதிக்கும்.
இதன் மூலம் உணவுதானிய பற்றாக்குறை ஏற்படும். உணவுதானிய பற்றாக்குறை ஏற்பட்டால் விலைவாசி அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். முன்னேறிய நாடுகள் கூட உணவுதானிய உற்பத்திக்கு முன்னு ரிமை கொடுக்கின்றன. உணவுதானிய உற்பத்தி குறைகிறபோது அது நுகர்வோர் பணவீக்கத்துக்கு வழி வகுக்கும். எனவேதான் பருவமழை கணிப்புகள் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது
பற்றாக்குறை மழை
திருத்தப்பட்ட வானிலை அறிவிப்பின்படி நெடுநாள் சராசரி மழைப்பொழிவு (எல்பிஏ) இந்தியாவில் 88 சதவீதமாக உள்ளது. ஏப்ரல் மாதம் இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மேற்கு பருவமழையின் சராசரி பொழிவு 93 சதவீதமாக இருக்கும் எனக் கணித்தது. இது சராசரியைவிட குறைவு என்கிற பிரிவில் வருகிறது. அதேசமயம் தற்போது திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 88 சதவீதம் பொழியும் என கணித்துள்ளது. இது பற்றாக்குறை என்கிற பிரிவில் வருகிறது.
இந்த பற்றாக்குறை மழை அளவு காரணமாக டெல்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் வடமேற்குப் மாநிலங்களின் சராசரி மழைப் பொழிவில் 85 சதவீதமே பெய்யும்.
பொருளாதாரம்
இந்தியாவில் நுகர்வோர் பணவீக்க அளவை 2016 ஆம் ஆண்டுக்குள் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உணவு தானிய பற்றாக்குறை காரணமாக விலைவாசி அதிகரித்தால், பணவீக் கத்தை ரிசர்வ் வங்கி திட்டமிட்டபடி கட்டுப்படுத்த முடியாது. இது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என்கின்றனர்.
ஆனால் மத்திய அரசு முன்னெச் சரிக்கையாக 600 மாவட்டங்களில் மழை குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க திட்டம் வகுத்துள்ளது. இதன் மூலம் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் விலை உயர்வதைக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசு உறுதியாகக் கருதுகிறது. குறுகிய கால விதைகள் அளிக்க மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது. மேலும் வறட்சியைத் தாங்கி நிற்கும் பயிர் வகைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நீர் தேக்கங்களில் பாசனத்துக்கு தேவைப்படும் நீரை தொடர்ந்து கண்காணிக்க மத்திய நீர் ஆதார அமைச்சகம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் காலத்தில் கூடுதலாக எரிவாயு விநியோகம் மூலம் 14 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய மின் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விவசாயத்துக்கு மின் தட்டுப்பாடு இல்லாத சூழலை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்துவதில் அவகாசம் அளிக்கவும் நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வேளாண் உற்பத்தி குறையும்பட்சத்தில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய தொகுப்பிலிருந்து கோதுமை, அரிசியை விடுவிக்க உணவு மற்றும் நுகர்வோர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை 100 நாள் களுக்கும் மேலாக அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், பொரு ளாதார வளர்ச்சியும் பருவமழை பொழிவை சார்ந்தும் இருக்கின்றன. ஒரு பருவத்தில் மழை பற்றாக்குறை ஏற்பட்டால் அது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். தொடர்ச்சியாக இரண்டு மூன்று பருவகாலங்களில் பற்றாகுறை மழை அளவு இருப்பின் பொருளாதாரம் மோசமாக பாதிப்படையும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
பருவமழை பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் திட்டமிட்டபடி பங்கு விலக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்கிற சந்தேகமும் மத்திய அரசுக்கு எழுந்துள்ளதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதற்கு தீர்க்கமாக பதில் அளித்துவிட்டார். பருவமழை குறைவாக இருந்தாலும் திட்டமிட்டபடி பங்கு விற்பனை நடக்கும். உணவுதானிய கையிருப்பு உள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் தலைவிதியை தீர்மானிப்பது தென்மேற்கு பருவமழைதான். ஒரு நல்ல பருவ மழைதான் விவசாயியை உற்சாகம் கொள்ள வைக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தென்மேற்குப் பருவமழையை நம்பி விவசாயம் செய்து வரும் நிலையில், அதைச் சார்ந்து பொருளாதார வளர்ச்சியும் இருக்கிறது என்கிற உண்மையை மறுக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT