Published : 11 May 2015 11:37 AM
Last Updated : 11 May 2015 11:37 AM

ஆப்கி பார் மோடி சர்க்கார்

காங்கிரஸ் அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக கடந்த வருடம் மோடி வகுத்த வியூகங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

‘ஆப் கி பார் மோடி சர்க்கார்’ (இந்த முறை, மோடி அரசு) என்னும் வாசகத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றார். பத்திரிகை, டிவி, சோஷியல் மீடியா, பொதுக்கூட்டம் என கிடைத்த அனைத்து தளங்களிலும் தன்னுடைய விளம்பர வித்தையைக் காண்பித்தார்.

தவிர, 3 லட்சம் கிலோமீட்டர் பயணம், 5,827 பொதுக்கூட்டம், 25 மாநிலங்களுக்கு பயணம் செய்து பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார். இம்மாதம் 26-ம் தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது மோடி அரசு. முதல் வருட கொண்டாட்டத்தை வாரணாசியில் வைத்துக்கொள்ளலாம் என்று மோடி யோசிக்கட்டும். அரசு செய்தது என்ன, அவரது சாதனைகள் என்ன, அவர் பற்றிய தொழில் துறையினரின் கருத்து என்ன என்பதை நாம் பார்ப்போம்.

குமார் மங்கலம் பிர்லா, தலைவர் ஆதித்யா பிர்லா குழுமம்

ஒரே வருடத்தில் அனைத்து மாற்றங்களும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு நிறுவனத்தை மாற்றுவதற்கே சில வருடங்கள் ஆகும். இந்த நிலையில் சிக்கலான இந்தியாவை சீரமைக்க ஒரு வருடம் போதாது. ஒரு வருடத்தில் செய்ய வேண்டியதைச் சிறப்பாக செய்திருக்கிறார். இப்போது செய்த மாற்றங்களின் பலன் கிடைக்க இன்னும் ஒரு வருடம் ஆகும்.

கே.வி. காமத், தலைவர் ஐசிஐசிஐ வங்கி

இந்திய தொழில் துறையில் தவறான காரணங்களுக்காக மோடியை விமர்சிக்கிறார்கள். அரசாங்கம் செய்ததை நாம் மறந்துவிடுகிறோம்.ஒரு வருடத்துக்கு முன்பு இருந்த நிலைமையை விட, இப்போது சூழல் மேம்பட்டிருக்கிறது. ஆனால் செல்ல வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

மார்க் பேபர், சர்வதேச முதலீட்டாளர்.

சில சீர்திருத்தங்கள் கொண்டு வந்திருந்தாலும், அவை மெதுவாகவே நடப்பதால் முதலீட்டாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஹரிஷ் மரிவாலா, தலைவர் மாரிகோ.

மோடி அளித்த வாக்குறுதிகளின் பளபளப்பு குறைந்துகொண்டே வருகிறது. இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.

அருண் ஷோரி, முன்னாள் பங்கு விலக்கல் துறை அமைச்சர் (வாஜ்பாய் தலைமையிலான அரசு)

மோடி அரசு இலக்கில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. வெளிநாட்டு கொள்கைகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உள்நாட்டு பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை மோடி செய்யவில்லை.

தீபக் பரேக், ஹெச்டிஎப்சி

மோடி மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நம்பிக்கை இன்னும் செயலாக, வருமானமாக மாறவில்லை. தொழில் துறையினரின் பொறுமை குறைந்துகொண்டே வருகிறது. தொழில் புரிவதற்கான சூழல் இன்னும் எளிமையாகவில்லை.

ஜிம் ரோஜர்ஸ், சர்வதேச முதலீட்டாளர்

மே 26, 2014: இந்தியாவில் முதலீடு செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அக் 7, 2014: இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை நரேந்திர மோடி மாற்றுவார் என மக்கள் காத்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 23, 2015: இதுவரை மோடி பேசுவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. பேச்சு செயலாக மாறவில்லை.

ஒரு வருடத்தில் நடந்த முக்கிய நடவடிக்கைகள்

$ ஜிஎஸ்டி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

$ காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு மசோதா நிறைவேற்றம்.

$ பாதுகாப்பு, ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்தது.

$ சந்தை விலைக்கு ஏற்ப டீசல் விலை நிர்ணயம்.

$ திட்டக் கமிஷனை கலைத்து நிதி ஆயோக் உருவாக்கியது.

$ ஜன் தன் யோஜனா மூலமாக 15 கோடி வங்கி கணக்குகளை தொடங்கியது.

$ உற்பத்தித் துறையை ஊக்குவிக்க மேக் இன் இந்தியா, சமையல் எரிவாயு நேரடி மானிய வசதியை கொண்டு வந்தது.

ஒரு வருடத்தில் பயணம் செய்த நாடுகள்

அமெரிக்கா, பூடான், பிரேசில், நேபாளம், ஜப்பான், மியான்மார், ஆஸ்திரேலியா, பிஜி, மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், செஷல்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா.

அடுத்து வரும் பயணங்கள்

சீனா, மங்கோலியா, தென் கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர், துருக்கி.

ஒரு வருடத்தில் இந்தியாவுக்கு வந்த முக்கிய வெளிநாட்டு தலைவர்கள்

பராக் ஒபாமா, அதிபர் - அமெரிக்கா

ஜி ஜின்பிங், அதிபர் சீனா

டோனி அபோட், பிரதமர் ஆஸ்திரேலியா

2014-15-ம் நிதி ஆண்டுக்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.9 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ( நன்றி: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி)

மார்ச் மாத பணவீக்கம் (சிபிஐ) 5.17 சதவீதம்.

2014-ம் ஆண்டில் சென்செக்ஸ் 29% உயர்ந்தது. ஆனால் மோடி அரசின் மீதான நம்பிக்கை, குறைந்தபட்ச மாற்று வரி காரணமாக 2015-ம் பங்குச் சந்தை சரிவை சந்திருக்கிறது.

2015-ம் ஆண்டில் இதுவரை இந்திய சந்தை கொடுத்த லாபம் 0.64%. சீனா 24% லாபம் கொடுத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x