Published : 11 May 2015 12:09 PM
Last Updated : 11 May 2015 12:09 PM

டேர்ம் இன்ஷூரன்ஸ் முகவரா? ஆன்லைனா?

ஆயுள் காப்பீடு எவ்வளவு அவசியம் என்பது கடந்த காலங்களைவிட இப்போது அதிகமாகவே உணரப்பட் டிருக்கிறது. காப்பீடு எடுப்பவர்கள் அதிகரித்துள்ளதும், காப்பீடு நிறுவனங்களின் வளர்ச்சியுமே இதற்கு ஆதாரம். ஆனால் முதலீடு செய்யும்போது ஏற்படும் குழப்பங் களைப் போலவே காப்பீடு எடுப் பதிலும் ஏகப்பட்ட குழப்பங்களைக் கொண்டுள்ளனர் மக்கள்.

ஆயுள் காப்பீடு சார்ந்த திட்டங்களில் இப்போதுதான் வளர்ந்துவரும் பாலிசியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. குறைவான பிரீமியம் செலுத்தினால் போதும் அதிக கவரேஜ் கிடைக்கும் அதுதான் இந்த பாலிசியின் சிறப்பு. ஆனால் பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே கிளைம் செய்து கொள்ள முடியும். மேலும் அப்படி எதுவும் நடக்க வில்லை என்றால் பாலிசி முடிவில் முதிர்வு தொகை எதுவும் கிடைக்காது. அதாவது பாலிசிக்கு கட்டிய பிரீமியம் தொகை திரும்பக் கிடைக்காது.

பொதுவாக ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 15 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கி றார்கள் காப்பீடு ஆலோசகர்கள். வருமானம் அதிகரிக்கும்போது கவரேஜ் தொகையையும் உயர்த்திக் கொள்ள முடியும். இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களை சமீப காலங்களில் ஆன்லைன் மூலமாக எடுப்பது அதிகரித்து வருகிறது. எனவே ஆன்லைன் மூலம் வாங்கும் வசதி மற்றும் முகவரிடம் நேரடியாக வாங்குவது இவற்றின் வாய்ப்புகளை மற்றும் சாதக பாதகங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பிரீமியம் குறைவு

முகவர் மூலம் எடுக்கப்படும் பாலிசியைவிட ஆன்லைன் மூலம் எடுக்கப் படும் பாலிசிக்கான பிரீமியம் கணிசமாகக் குறைகிறது. அதே சமயத்தில் சேவையில் எந்த வித்தியாசமும் இருக்காது. முகவர் மூலம் எடுக்கப்படும்போது அவருக்கான கமிஷன் பிடிக் கப்படும் என்பதால் ஆன்லைன் விண்ணப்பதாரருக்கு இந்த வகையில் பிரீமியத்தொகை குறையும்.

விண்ணப்பம்

ஆன்லைனில் பாலிசி வாங்குவது மிகவும் எளிதானது. ஆனால் சில நேரங்களில் சிக்கலானதாக மாறலாம். முகவரிடம் நேரடியாக விளக்கிச் சொல்லும் விஷயங்களை ஆன்லைனில் விளக்க முடியாது. ஆன்லைன் பாலிசி விண்ணப்பத்தை நாம் நிரப்பும்போது தவறுகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. சில உண்மைகளை மறைக்கவோ அல்லது தெரியாமலேயேகூட விட்டு விடலாம். பாலிசி எடுக்கும்போது நம்மைப் பற்றிய விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டால்தான் கிளைம் செய்வதில் சிக்கல் இருக்காது.

மருத்துவப் பரிசோதனை

காப்பீடு பாலிசி எடுக்கும்போது சில நேரங்களில் மருத்துவப் பரிசோதனைகள் அவசியமாக இருக்கும். முகவர் மூலம் எடுக்கும்போது உங்களுக்கு மருத்துவ பரிசோதனை தேவையா என்பதை சொல்லிவிடுவார். ஆன்லைன் மூலம் பாலிசி எடுக்கும்போது இந்த விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு குறைவு.

மேலும் மருத்துவப் பரிசோதனை தேவையாக இருந்தால் எந்த மருத்துவமனையில் எப்போது பரிசோதனை என்பது போன்ற விவரங் களை திரும்பவும் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் முகவர் மூலம் எடுக்கிற போது இந்த தகவல்கள் எளிதாக கிடைத்து விடும்.

பிரீமியம் அதிகரிக்கலாம்

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து, பாலிசிக்குரிய பிரீமியம் கட்டி விடுவோம். பிறகு மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் அதன் அடிப்படையில் பிரீமியம் அதிகரிக்கப்படலாம். குறிப்பாக நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தற்போது உள்ள மருத்துவ அறிக்கை அடிப்படையில் ஆன்லைன் பாலிசி எடுத்திருப்போம். பிறகு அவர்களது மருத்துவ அறிக்கை அடிப்படையில் பிரீமியம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

ஆபத்தான பணி

அதிக கவனம் தேவைப்படும் பணியில் இருப்பவர்கள் மற்றும் ஆபத்தான பணியில் இருப்பவர்களுக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். அதுபோல விளையாட்டு மற்றும் சாகச வீரர் களுக்கு பிரீமியம் அதிகம். இதனால் இந்த நடவடிக்கைகளை மறைத்து விண்ணப்பம் செய்வோம். இதுவும் கிளைம் செய்வதில் சிக்கல் ஏற்படுத்தும். புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புகள் உள்ளது என்கிற அடிப்படையில் பிரீமியம் அதிகமாக இருக்கும். ஆன்லைன் விண்ணப்பத்தில் இதை மறைக்கக்கூடாது.

புது பாலிசி

பிரீமியத்தை குறைக்க பொய் சொன்னால் பின்னால் கிளைம் செய்யும் போது சிக்கல் வந்துவிடும் அதே நேரத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்த பிறகு இடையில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு பிரீமியம் அதிகரிக்காது என்றாலும், கவரேஜ் அதிகரிக்கப்பதற்காக புதிதாக பாலிசி எடுக்கும்போது பிரீமியம் அதிகரிக்கும். ஆனால், எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவ னங்களும் இதற்கு ஒரே மாதிரியான அளவுகோல்களை பின்பற்றுவதில்லை.

வேலைச் சூழல்

அடிக்கடி பணியை மாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு பிரீமியம் அதிகரிக்கும். அதாவது சீரான வருமானம் இல்லாதவர்களுக்கு பிரீ மியம் அதிகமாக வசூலிக்கப்படும். முகவர் மூலமாக பாலிசி எடுக்கும்போது விண்ணப்பதாரரின் தற்போதைய நிலையைக் கொண்டு பாலிசி அளவை நிர்ணயிப்பார். ஆனால் ஆன்லைன் மூலம் நாமே விண்ணப்பிக்கும்போது நமது எண்ணத்தின் அடிப்படையில் விண்ணப்பம் செய்வோம்.

ஊனம்

உடல் ஊனமுற்றவர்களுக்கான பாலிசி எடுக்கிறபோதும் கவனம் தேவை. பிறவி ஊனம் அல்லாமல் இடையில் ஊனம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு ஊனத் தின் தன்மை அடிப்படையில் அதிக பிரீமியத் தொகை நிர்ணயிக்கப்படும்.முகவர் மூலம் எடுக்கப்படும் பாலிசிகளுக்கு இதில் தெளிவான வரையறை இருக்கும். அதுபோல ரெய்டர் பாலிசிகள் என்கிற பாதிப்பின் தன்மைக்கேற்ற பாலிசிகள் ஆன்லைனில் கிடைப்பதில்லை.

நோயின் தன்மை

மரணம் ஏற்படுத்தக்கூடிய நோய் பாதிப்புகள் அல்லது தீவிர நோய்த் தன்மை கொண்டவர்கள் ஆன்லைன் மூலம் பாலிசி விண்ணப்பம் செய்வது சரியானதல்ல. நோயின் தீவிரத்திற்கு ஏற்ப பிரீமியத் தொகை நிர்ணயிக் கப்படும்.

மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே இவர்களுக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப் படும். இதய அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், பக்கவாதம், புற்றுநோய் சிகிச்சை எடுப்பவர்களுக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். இவர்கள் முகவர் மூலமாக பாலிசி எடுத்துக் கொள்கிறபோது கிளைமை செய்வதில் சிக்கல்கள் இருக்காது.

பொதுவாக, 35 40 வயதுக்குள் 20 லட்சம் வரையிலான கவரேஜ் எடுக்க எந்த மருத்துவ பரிசோதனைகளும் தேவையில்லை.

அதற்கு அதிகமான வயது, பிரீமியம் மற்றும் மேற்சொன்ன காரணங்கள் அடிப்படையில் ஆன்லைன் அல்லது முகவர் மூலம் எடுப்பது குறித்து பரிசீலிக்கலாம். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பாலிசிக்கு எவ்வளவு பிரீமியம் வாங்குகிறது, என்னென்ன வசதி செய்து தருகிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆன்லைன் மூலமாகவோ அல்லது முகவர் மூலமோ எந்தச் சூழலிலும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு உண்மை யான தகவல்களை மறைக்கக் கூடாது என்பதும் ஞாபகம் இருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x