Published : 04 May 2015 11:19 AM
Last Updated : 04 May 2015 11:19 AM
செய்யும் தொழிலை ஆழ்ந்து நேசித்தால் வெற்றிப்படிகளை எட்டிப் பிடிக்கலாம் என்பதற்கு புதுக்கோட்டை சீனு.சின்னப்பா நிகழ் உதாரணம்.
புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் `பேக்கரி மஹராஜ்’. முப்பது வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் சின்னப்பா ஆரம்பித்த பேக்கரி மஹராஜ் இன்றைக்கு 15 கிளைகளை பரப்பி நிற்கிறது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?
``திருத்துறைப்பூண்டியில எங்க தாத்தா சின்னதாக ஒரு ரொட்டிக் கடை வைச்சிருந்தாரு. அவருக்குப் பின்னால அதை நடத்த முடியல. ஐம்பது வருசத்துக்கு முந்தி எங்க குடும்பத்தோட பொருளாதாரச் சூழல் ரொம்ப மோசமா இருந்துச்சு. அதனால, என்னால எட்டாம் வகுப்புக்கு மேல படிக்க முடியல.
வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். தாத்தா வழியில் நானும் பேக்கரி தொழிலை கத்துக்கிறதுக்காக திருத் துறைப்பூண்டியில ஒரு பேக்கரியில் 300 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். அங்க தொழிலை கத்துக்கிட்டு வீட்டுலயே சின்னதா ஒரு அடுப்பைக் கட்டி ரெண்டு மூணு ரொட்டி அயிட்டம் போட ஆரம்பிச்சேன்.
அப்ப எனக்கு 19 வயசு. பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை ஏரியா கடைகளுக்கு சரக்குப் போடுறதுக்காக தினமும் 35 கிலோ மீட்டர் சைக்கிள் மிதிப்பேன். தினசரி அம்பது அறுபது ரூபாய் வருமானம் கிடைக்கும். அன்னைக்கு அது பெரிய சம்பாத்தியம். அதுக்கப்புறம் தொழில் நுணுக்கங்களைக் கத்துக்குறதுக்காக காரைக்குடியில் ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்தேன். கிட்டத்தட்ட 15 வருசம் அங்க வேலை பார்த்தேன். அறந்தாங்கி, புதுக்கோட்டை, தேவகோட்டை பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு போய் வித்துட்டு வருவேன்.
வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வாரச் சந்தையில் எங்களோட பகோடா பிஸ்கட்டுக்காக ஒரு ரசிகர் கூட்டமே காத்திருக்கும். அப்படி வரப் போக இருந் தப்பத்தான் புதுக்கோட்டையிலயே நம்ம ஏன் ஒரு பேக்கரியை ஆரம்பிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. மார்க்கெட் பகுதியில் ஒரு கடையை பிடிச்சு 40 ஆயிரம் ரூபாய் செலவழிச்சு பேக்கரி மஹராஜை திறந்தேன்’’ என்கிறார் சின்னப்பா. முதலில் தொடங்கிய பேக்கரி வாய்க்கும் கைக்கும் இழுத்ததால் நட்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தவர், பேருந்து நிலையம் அருகில் இன்னொரு கடையை திறந்தார். அந்த லாபத்தில் முதல் கடையில் ஏற்பட்ட இழப்பைச் சரிக்கட்டினார். அத்துடன் அடுத்தடுத்த வருடங்களில் பல கிளைகளை திறந்தார்.
இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டோம் என்பதற்காக சின்னப்பா முதலாளி தோரணையில் குளுகுளு அறைக்குள் உட்கார்ந்திருக்கவில்லை. தனது பேக்கரி தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாய் வேலை செய்து கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட சில வகை
‘கேக்’குகளை இவரே தயார் செய்து பூக்கள் வரைகிறார். இதற்காக தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கம்பெனிக்கு வந்து விடுகிறார் 62 வயதை கடந்து கொண்டிருக்கும் சின்னப்பா.
‘‘யாரா இருந்தாலும் தொழிலையும் தொழிலாளியையும் மதிக்கக் கத்துக்கணும். பணத்தைப் போட்டுட்டா மட்டும் ஜெயிச்சுட முடியாது. இவ்வளவு சம்பாதிச்ச பின்னாடி இந்த வயசுல நான் அதிகாலையில எந்திரிச்சு பேக்கரிக்கு வர்றேன்னா அதுக்குக் காரணம் தொழிலை நேர்த்தியா பண்ணணும், மக்கள் நம்ம மேல வைச்சிருக்கிற நம்பிக்கையை இழந்துடக் கூடாதுன்ற பயம்தான். இந்த பயம் எல்லா முதலாளிகளுக்கும் எந்த நேரத்திலும் இருக்கணும். இன்னும் இங்கே நான் ஒரு தொழிலாளி தான்.
அதேமாதிரி, தொழிலாளிகளையும் பாதுகாக்கணும். எங்கக்கிட்ட 45 பேர் வேலை செய்யுறாங்க. இதுவரை இங்க வந்த யாருமே வேலையை விட்டுப் போனதில்லை. என்னோட தொழிலாளி ஒருத்தரோட பையன் டாக்டருக்குப் படிக்கிறான். இன்னும் சிலரோட புள்ளைங்க இன்ஜினீயரிங் படிக்கிறாங்க.
அவங்க படிப் புக்கான அத்தனை உதவிகளையும் நான் செய்யுறேன். 36 பேருக்கு நாங்க பி.எஃப் பணம் கட்டிட்டு வர்றது அவங்களுக்கே தெரியாது. அவங்களோட சுக துக்கங்கள் அனைத்திலும் நானும் முதல் மனுசனா நிக்கிறேன். அவங்க நல்லா இருக்காங்க; என்னையும் நல்லா வைச்சிருக்காங்க. நல்லா வாழ்ந்துட்டோம்கிற திருப்தியோட இருக்கேன்’’ தனது வெற்றிக்கான சூட்சு மத்தைச் சொல்லி வியக்க வைக்கிறார் சின்னப்பா.
shanmughasundaram.kl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT