Published : 04 May 2015 12:45 PM
Last Updated : 04 May 2015 12:45 PM

சூரிய மின்சாரம்

நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே வரும் சூழ்நிலையில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத மரபு சாரா எரிசக்தி மீது உலகத்தின் கவனம் திரும்பியுள்ளது. சூரியன் தன் மொத்த பலத்தைக் காண்பிக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இதில் கவனம் செலுத்தி வருகின்றன. அனல் மின்சாரத்தை விட அதிகம் செலவானாலும், உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறையும். சூரிய மின்சாரம் பற்றிய சில தகவல்கள்.

இந்தியாவில் சூரிய சக்தி மூலம் 3,002 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குஜராத் முதல் இடத்தில் இருக்கிறது.

சர்வதேச அளிவில் சூரிய மின் உற்பத்தியில் ஜெர்மனி முதல் இடத்தில் உள்ளது. ஜெர்மனி 38.2 ஜிகாவாட், சீனா 28.2 ஜிகாவாட், இத்தாலி 18.5 ஜிகாவாட், அமெரிக்கா 18.2 ஜிகாவாட் அளவுக்கு சூரிய மின் உற்பத்தி செய்கிறது.

ஜெர்மனி தன்னுடைய மொத்த தேவையில் 50 சதவீதத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்கிறது.

2022-ம் ஆண்டு ஒரு லட்சம் மெகாவாட் (100 ஜிகாவாட்) சூரிய மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்ற சவாலான இலக்கினை மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 6.5 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்.

இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் ஆண்டுக்கு 15000 மெகா வாட் அளவுக்கு உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும். ஆண்டுக்கு 15,000 மெகாவாட் அளவுக்கு எந்த நாடும் மின் உற்பத்தியை உயர்த்தவில்லை. சீனா 2012-ம் ஆண்டு 12,000 மெகாவாட் அளவுக்கு தன்னுடைய திறனை உயர்த்தியது.

ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பூங்கா குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் (சரங்கா கிராமத்தில்) அமைந்துள்ளது. 4,900 ஏக்கரில் இந்த பூங்கா அமைக்கப்பட் டுள்ளது. இங்கு சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய மின்சக்தியை மட்டும் பயன்படுத்தி 500 மெகாவாட் உற்பத்தி செய்யமுடியும்.

17 சோலார் பூங்காங்களுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 12500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

சூரிய சக்தியை வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் வீடுகள்/அலுவலகங்களில் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும் இப்போது அதிகம் பயன்படுத் தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருக்கும் முருகன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் முழுவதும் சூரிய சக்தியில் செயல்படும் முதல் பவர்லூம் நிறுவனமாகும். நிறுவனத்தின் மேற்கூரையை பயன்படுத்தி, தங்களுக்கு தேவையான 2 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்கிறது.

குஜராத்தில் நர்மதா ஆற்றின் கால்வாய் மேலே சோலார் பேனல்களை அமைத்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தண்ணீரும் ஆவியாகாது. மின்சாரமும் கிடைக்கும். சர்வதேச அளவில் கால்வாய் மூலம் சூரிய சக்தி உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டது இங்குதான் முதல் முறை. 17.50 கோடி செலவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x