Published : 13 Apr 2015 10:25 AM
Last Updated : 13 Apr 2015 10:25 AM

சர்க்கரை கசக்கும்!

என்ன இது முரண்பட்ட தகவலாக இருக்கிறதே. சர்க்கரை இனிக் கத்தானே செய்யும் என நினைப்பீர்கள். உண்மையில் கடை நிலை நுகர்வோராக இருக்கும் நமக்கு சர்க்கரை இனிக்கத்தான் செய்யும். ஆனால் அதன் உற்பத்தி மூலப்பொருளான கரும்பை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சர்க்கரை கசக்கும். ஆம், கரும்பை நட்டு, பராமரித்து, அறுவடை செய்யும் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது.

உலகிலேயே பிரேஸிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் கரும்பு அறுவடை சீசன் என்பது அக்டோபர் முதல் செப்டம்பர் வரையாகும்.

இந்தியாவில் மொத்தம் 453 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் கூட்டுறவு சங்கம் நிர்வகிப்பவை 252, தனியார் துறை வசம் 134, பொதுத்துறை வசம் 67 ஆலைகள் உள்ளன.

கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய நிலுவை ரூ. 19,243 கோடி. அப்புறம் கரும்பு விவசாயிகளுக்கு அது எப்படி இனிப்பாக இருக்கும். அறுவடை செய்த பொருளின் பலன் பணமாக கையில் வந்தால்தானே இனிக்கும்.

முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்

இந்திய மாநிலங்களின் பரப் பளவில் மிகப் பெரியதான உத்தரப் பிரதேச மாநிலம்தான் கரும்பு விவசாயிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் அதிகம் பாக்கி வைத்துள்ளது. இந்த மாநிலம் மட்டுமே ரூ. 9,716 கோடியை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையாக வைத்துள்ளது.

அதிக அளவிலான சர்க்கரை ஆலைகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை ரூ. 2,864 கோடி.

அண்டை மாநிலமான கர்நாடகமோ விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள தொகை ரூ. 2,402 கோடி.

சர்க்கரை விற்பனை விலையை விட உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதாக ஆலை அதிபர்கள் கூறுகின்றனர். ஆனால் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கரும்புக்கான விலை நிர்ணய விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு ஒரளவுக்குத்தான் இருக்க முடியும். இந்தப் பிரச்சினைக்கு மாநில அரசுகள்தான் தீர்வு காண முடியும். இருதரப்பினருக்கும் அதாவது விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு கட்டுபடி யாகும் விலையை (எப்ஆர்பி) விட அதிகமாக மாநில அரசுகள் கரும்புக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்கின்றன என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் ஆலை அதிபர்களோ கரும்பு கொள்முதல் விலை நிர்ணயிப்பதில் ரங்கராஜன் குழு அளித்த பரிந்துரையை அமல் செய்து அதன்படி ஒரே சீரான விலையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்துகின்றனர். இந்த கொள்முதல் பார்முலாவை மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் பின்பற்றுவதால் அங்கு நிலுவைத் தொகை குறைவாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எப்ஆர்வி விலையில் கரும்பு கொள்முதல் செய்து அதை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அதன் பின்னர் கரும்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட உப பொருள்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் 70 சதவீதத்தை பகிர்ந்து அளிக்கலாம் என பரிந்துரை செய்தது.

ஒரு குவிண்டால் சர்க்கரை ரூ. 2,550 முதல் ரூ. 2,600 விலையில் விற்பனையாகிறது. இதனால் தங்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுவதாக ஆலை அதிபர்கள் கூக்குரலிடுகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்த உள்ளார் பாஸ்வான். இந்த கூட்டம் இம்மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம், பிஹார், கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே கச்சா சர்க்கரை ஏற்றும திக்கு அளிக்கப்படும் சலுகையைப் போல சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கும் சலுகை அளிக்க வேண்டும் என ஆலை அதிபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் வாழ்க்கையில் விளை யாடும் அரசியல்வாதிகளும், தொழிலில் லாபமே பிரதானம் என நினைக்கும் ஆலை அதிபர்களும் மனமிறங்கி விவசாயிகளும் பிழைக்க வேண்டும், அவர்கள் வயலில் இறங்கி நட்டால்தான் தங்கள் ஆலைகளுக்கு கரும்பு வரும் என்று நினைக்க வேண்டும்.

அதிக சர்க்கரைச் சத்துள்ள கரும்பு சாகுபடியாக புதிய ஆராய்ச்சிகள் தேவை. அத்துடன் மொலாசஸ்ஸிலிருந்து எத்தனால் தயாரிப்பதையும் எத்தனாலை எரிபொருளுடன் கலந்து பயன்படுத்துவதையும் அரசு தீவிரமாக ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை ஆலைகளுக்கு வருவாய் அதிகரிக்கும். அரசின் கையிருப்பில் இருக்கும் சர்க்கரையின் அளவு, வெளிநாடுகளில் சர்க்கரைக்கு இருக்கும் தேவை, நம் நாட்டில் சர்க்கரைக்கு உள்ள தேவை போன்றவற்றைக் கணக்கில் எடுத்து ஆண்டுதோறும் கரும்பு சாகுபடிப் பரப்பை வரையறுப்பதும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

மாதம் 30 நாளும் உழைத்து மாதக் கடைசியில் வங்கிக் கணக்கில் சம்பளம் விழும்போதுதானே வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிச் செல்ல முடியும். கரும்பு பயிரிடும் விவசாயிகளும் இதைப் போல மாற்று வேலைகளைத் தேடினால், சர்க்கரை விலை நமக்கும் கசக்கும்.!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x