Published : 30 Mar 2015 12:09 PM
Last Updated : 30 Mar 2015 12:09 PM
சமீபத்தில் வாணியம்பாடியில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவருக்கு நடந்த சம்பவம் இது. அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியி லிருந்து பேசுகிறோம் என்று தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. எடுத்து பேசியவரிடம் உங்கள் வங்கிக் கணக்கிற்கான டெபிட் கார்டு புதுப்பித்துத் தரவேண்டும். புது கார்டு வீட்டிற்கு வந்ததும் பழைய கார்டைப் பயன்படுத்த முடியாது. எனவே அதன் விவரங்களைக் கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். அவரும் நம்பி கொடுத்திருக்கிறார்.
சில நாட்கள் கழித்து அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதில் அவரது கணக்கிலிருந்தும், அவரது மனைவி கணக்கிலிருந்தும் சுமார் ஒரு லட்சம் வரைக்கும் பொருட்கள் வாங்கியுள்ளதாக விவரம் வருகிறது. என்ன ஏதென்று வங்கியில் விசாரித்தால் மும்பையில் ஒரு கடையில் பொருட்கள் வாங்கியுள்ளதாக சொல்கிறார்கள். இனி என்ன காவல்துறைக்கும் வங்கிக்குமாக அவர் அலைந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக வங்கிக்கணக்குகள், முதலீட்டு விவரங்கள், கிரெடிட் கார்டு போன்றவற்றின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். மூன்றாவது நபர்களுக்குத் தெரியக்கூடாது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் மிக நூதனமாக மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
சமீபத்தில் ரிசர்வ் வங்கியிடமிருந்து வந்த அறிவிப்பை போல ஒரு மெயில் வந்திருந்தது. ரிசர்வ் வங்கி முத்திரையுடன் பக்காவாக இருந்தது அந்தக் கடிதம். வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்துள்ள பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும். இந்திய பணமாக மாற்ற ரிசர்வ் வங்கியின் அனுமதி உள்ளது.
எனவே இதற்கான முதற்கட்ட பரிவர்த்தனைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பி வையுங்கள் என்று அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியப் பணமாக மாற்றப்பட்ட பிறகு உங்களுக்கு கணிசமான தொகை கொடுக்கப்படும் என்றும் அதில் கூறியிருந்தனர். இதை ரிசர்வ் வங்கியின் சம்பந்தபட்ட பிரிவுக்கு அனுப்பி விசாரித்தோம்.
ரிசர்வ் வங்கி எந்த ஒரு தனிநபருக்கும் இப்படியான அத்தாட்சிக் கடிதமோ , மெயில் மூலமாக உறுதிமொழியோ கொடுப்பது கிடையாது. வெளிநாட்டில் செய்துள்ள முதலீட்டை இந்தியப் பணமாக மாற்ற வேண்டுமெனில் அரசு அனுமதித்துள்ள சட்ட வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளலாம். எனவே இது போன்ற மோசடி மெயில்களை நம்ப வேண்டாம் என்று கூறினர்.
இது போன்ற இணையதள நிதி மோசடிகள் தொடர் பாக விழிப்புணர்வு செய்திகளை தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்கின்றனர் ரிசர்வ் வங்கி அதிகாரிகள்.
இது போன்ற நிதி மோசடிகள் சைபர் குற்றம் என்கிற காவல்துறை. ஆனால் இந்த குற்றங்கள் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்படுவதால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது மற்றும் தண்டிப்பது என்பது நீண்டகால நடைமுறை.
ஆனால் முறையான வழியில் அரசு அனுமதிக்கும் முதலீடு திட்டங்களில் நமது பணத்தை சேமிப்பதுதான் பாதுகாப்பானது என்கிறது காவல்துறை.
பொதுமக்களிடமிருந்து முதலீடு திரட்டு வதை செபி, ஐஆர்டிஏ, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் கட்டுப்படுத்துவது மற்றும் கண்காணிப்பு வேலைகளைச் செய் கின்றன. நமது இந்திய கட்டுப்பாட்டு அமைப்புகள் பலம் வாய்ந்த பின்னணி கொண்டவை. இதனால் மோசடி செய்பவர்கள் பல்வேறு வகை களில் இந்த கட்டுப்பாட்டு அமைப்பு களில் பெயர்களை பயன்படுத்தி மக்களை நம்ப வைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.
பணவீக்கத்துக்கும் அதிகமாக சம்பாதித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கும் எந்த முதலீட்டு திட்டமாக இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள். முதலீட்டு திட்டங்கள் மட்டுமல்ல ஆன்லைன், இமெயில், போன் மூலம் என எந்த வழியாக இருந்தாலும் நிதி மோசடிகள் குறித்த எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். ஏனென்றால் புதிய புதிய வழிகளில் மோசடி மன்னர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT