Published : 09 Mar 2015 10:39 AM
Last Updated : 09 Mar 2015 10:39 AM
நாட்டின் பொருளாதாரத்தை அடி யோடு மாற்றும் விஷயங்களில் முக்கியமானது தங்கம். இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதார மாற்றத்துக்கான ஒரு விதையை ஊன்றியுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. ஆம் அப்படித்தான் சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டுப் பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும், தங்க இறக்குமதிக்கான வரி குறைக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் எவரும் எதிர்பாராத திருப்பமாக தங்க டெபாசிட் திட்டம் ஒன்றை அறிவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் அருண் ஜேட்லி.
தங்க டெபாசிட் திட்டம்
நாட்டில் மக்களிடம் பயன்படுத்தப் படாமல் உள்ள நகைகளை வங்கியில் டெபாசிட் செய்வதுதான் இந்தத் திட்டம். இதற்கு வங்கி கால முறைப்படி வட்டி கொடுக்கும். தங்க நகைகளை அடமானம் வைத்தால் நீங்கள்தான் வங்கிக்கு வட்டி கட்ட வேண்டும். அதுபோல வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களில் பாதுகாப்பாக வைப்பது என்றாலும் லாக்கருக்கு நீங்கள்தான் கட்டணம் செலுத்த வேண்டும். இது இரண்டும் இல்லாமல் உபரி தங்கத்தை வங்கியில் பாதுகாப்பதன் மூலம் வருமானம் பெறும் வாய்ப்பை வழங்குகிறது.
நோக்கம்
மக்களிடையே பயன்படுத்தப்படாமல் உள்ள ஆபரண தங்கத்தை வெளிக் கொண்டு வருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் பயன்படுத்தப்படாத இந்த சொத்து பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களிடம் உள்ள நகைகளில் அதிகபட் சமாக 70 சதவீத ஆபரணங்கள்தான் பயன் படுத்துகின்றனர். மீதமுள்ள 30 சதவீத ஆபர ணங்கள் பல்வேறு காரணங்களால் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். இது பண மதிப்பும் பெறுவதில்லை. எனவே இந்த பயன்படுத்தாத தங்கத்தை நாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிறது அரசு. மறு சுழற்சி முறையில் கிடைக்கும் இந்த தங்கம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.
இறக்குமதி குறையும்
உலக அளவில் தங்க இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. 2012-13 ம் ஆண்டில் 1,014 டன் அளவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்த நாடு. அதற்கு முந்தைய ஆண்டில் 1078 டன் இறக்குமதி செய்துள்ளது.
தங்க இறக்குமதி அளவுக்கு ஏற்ப தங்கக் கடத்தலும் கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் பெரிய சிக்கல் ஏற்படும் என்று இறக்குமதி தங்கத்தின் மீதான வரியை 10 சதவீதமாக உயர்த்தியது அரசு.
மேலும் இறக்குமதி செய்யும் தங்கத்தில் இருந்து ஆபரணமாக குறைந்தபட்சம் 20 சதவீதம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு கட்டுப்பாடுகளாலும் ஓரளவு தங்க இறக்குமதி குறைந்தது. இந்த கட்டுப்பாட்டுக்கு பிறகு 2013-14 இறக்குமதி தங்கத்தின் அளவு 662 டன்னாகக் குறைந்தது. ஆனால் இறக்குமதி குறைந்ததே தவிர கடத்தல் குறையவில்லை என்கிறது புள்ளி விவரங்கள்.
உள்நாட்டு தங்க கையிருப்பு
இந்தியாவில் தற்போது 20 ஆயிரம் டன் தங்கம் மக்களிடம் முடங்கி உள்ளது. அதாவது உபரியாக உள்ள ஆபரண தங்கம். இதைத்தான் இப்போது அரசாங்கம் புழக்கத்தில் கொண்டு வர திட்டம் தீட்டுகிறது. எனவே உள்நாட்டு தங்கம் சுழற்சிக்கும் வருவதன் மூலம் இறக்குமதி வரி செலுத்த தேவையில்லை. இதனால் குறைந்தபட்சம் இறக்குமதியும் குறையும், மக்களுக்கு ஒரு சவரனுக்கு ரூ 2,000 வரை விலை குறையவும் வாய்ப்புள்ளது.
பயன் என்ன?
இந்த தங்க டெபாசிட்டுக்கு நிலை யான வட்டி கிடைக்கும் என்பதால் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்று நம்பலாம். இத்தனை சதவீதம் வட்டி கிடைக்கும் என்று தெளிவாக வரையறை இதுவரை வரவில்லை என்கிறார்கள் வங்கி துறையினர். ஆனால் 3 முதல் 5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி டெபாசிட் செய்வது?
இதற்கான நடைமுறை அறிவிப்பு இன்னும் முழுமையாக வங்கிகளுக்கு வரவில்லை. என்றாலும் வழக்கமான நிதி முதலீட்டு நடைமுறைதான். ஆனால் ஆபரண தங்கத்தை அப்படியே வைத்துக் கொள்வதா அல்லது அதை உருக்கி கட்டிகளாக மாற்றப்படுமா என்பது பற்றிய விவரமான அறிவிப்பு வரவில்லை என்கின்றனர் வங்கி துறையினர்.
மதிப்பீடு செய்யும் முறை
தங்கத்தின் தரத்தைப் பொறுத்து தற்போதைய சந்தை விலையைக் கொண்டே தீர்மானிக்கப்படும். ஹால் மார்க் முத்திரை சான்றிதழ் பெற்ற பிறகே டெபாசிட்டுக்கு ஏற்றுக்கொள் ளப்படும் என்கிற நடைமுறை வரலாம். தங்கத்தின் தரம் அறியாமல் வங்கிகள் மதிப்பிடாது.
எனவே இந்த நடை முறை கடைபிடிக்கப்படும். தற்போது மும்பையில்தான் தங்கத்தை உருக்கும் பணிகள் நடக்கின்றன. பொது மக்களிட மிருந்து வாங்கும் ஆபரணங்கள் உருக்கிய பின்னரே டெபாசிட்டுக்கு ஏற்கப்படும் என்கிற நடைமுறை வந்தால் அந்தந்த பகுதிகளிள் உருக்குவதற்கான சாத்தியங்கள் உருவாகும்.
அந்நிய செலாவணி
இந்த திட்டத்தின் மூலம் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும், வர்த்தக பற்றாக்குறையும் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது. மேலும் எதிர்காலத்தில் தங்கத்தின் காரணமாக பொருளாதாரத்தில் நிகழும் தாக்கங்களும் குறையும் என்கின்றனர் தொழில்துறையினர்.
தற்போதைய நிலையில் ஒரு டன் தங்கத்தின் விலை 260 கோடி என்றால் கையிருப்பு தங்கத்தை வெளியில் கொண்டு வருவதன் மூலம் இந்திய பொருளாதாரத்தையே மாற்ற முடியும் என்றால் அது மிகையல்ல.
இந்தியாவில் தற்போது 20 ஆயிரம் டன் தங்கம் மக்களிடம் முடங்கி உள்ளது. அதாவது உபரியாக உள்ள ஆபரண தங்கம். இதைத்தான் இப்போது அரசாங்கம் புழக்கத்தில் கொண்டு வர திட்டம் தீட்டுகிறது. எனவே உள்நாட்டு தங்கம் சுழற்சிக்கும் வருவதன் மூலம் இறக்குமதி வரி செலுத்த தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT