Published : 02 Feb 2015 12:18 PM
Last Updated : 02 Feb 2015 12:18 PM
சிறந்த தொழில்முனைவோராக வாழ்க் கையைத் தொடங்கி வெற்றி பெறுவதற்கு 6 விதமான திறமைகள் அவசியம். இத்தகைய தொழில்முனைவு திறமை இருந்தால் மட்டுமே தொழிலில் வெற்றி பெற முடியும்.
1. புதிய பொருள், புதுமை படைப்புத் திறன் (creativity and innovation), 2. நிர்வாக மேம்பாடு (organizational development), 3. நிர்வாகத்திறன் மற்றும் மனிதவள மேம்பாடு (management and people development), 4. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் திறன் (sales and marketing), 5. நிதி மேலாண்மை (money management), 6. செயல்பாடு மற்றும் பொருள் மேம்பாடு (operations and systems development).
1.புதிய பொருள், புதுமை படைப்புத் திறன்
புதிய பொருள்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாவதே ஒரு திறமைதான். அது தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டும். அதேபோல தனித்துவமான நிறுவனத்தை உருவாக்குவதற்கான கற்பனைத் திறன் இருக்க வேண்டும். இத்தகைய தனித்துவமான தொழில் சந்தையில் போட்டிகளை தவிர்த்து முன்னேற வழியேற்படுத்தும்.
புதிய பொருள்களை உருவாக்கும் திறன் தொடர்ந்து உங்களிடம் இருக்க வேண்டும். இது உங்களது ஒவ்வொரு பொருள் தயாரிப்பிலும் உங்கள் சேவையிலும் வெளிப்பட வேண்டும். இவைதான் உங்களை சந்தையில் நிலைநிறுத்த உதவும்.
2. நிர்வாக மேம்பாடு
மிகவும் அவசியமாக இருக்க வேண்டிய மற்றொரு திறமை, நிகழ்ச்சிகளை உங்கள் நிறுவனம் சார்ந்து நடத்தும் திறன் இருக்க வேண்டும். அதற்குரிய நபர்களை அவர்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் உரிய பொறுப்புகளை அளிக்க வேண்டும்.
அதாவது ஒரு கார் சாலையில் ஓடுவதற்கு அதன் அனைத்து உதிரிபாகங்களும் ஒழுங்காக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அதுமாதிரி அனைவரின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும்.
3. நிர்வாகத்திறன் மற்றும் மனிதவள மேம்பாடு
மற்றொரு முக்கியமான திறமையாகக் கருதப்படுவது மற்றவர்களைக் கவருவது, உரிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது, பயிற்சி அளிப்பது மற்றும் அவர்களில் திறமையானவர்களைக் கண்டறிந்து உங்கள் நிறுவனத்தில் தக்க வைத்துக் கொள்வதாகும். ஒருவரால் தொடங்கப்பட்டு இன்று பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்த நிறுவனங்களிலும் இத்தகைய திறமைதான் காணப்பட்டுள்ளது.
பெரும்பாலான தொழில்முனைவோர் முதலில் ஒற்றை ஆளாகத் தொடங்கி அதை எவ்விதம் விரிவாக்கம் செய்வது எனத் தெரியாமல் சிறிய தொழிலாகவே நின்றுவிடுகின்றனர்.
4. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் திறன்
எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலானவர்களுக்கு பொருள்களை விற்பதிலும், அதை மேம்படுத்துவதிலும் தயக்கம் காணப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தாங்கள் அளிக்கும் சேவைக்கு பணம் வேண்டும் என்று கேட்பதற்கு தயங்குகின்றனர்.
இத்தகையோர் ஒரு விஷயத்தை முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டும், விற்பனையும் சந்தைப்படுத்தலும் சரியாக செய்யாவிடில் வெற்றிகரமான தொழிலதிபராகவே முடியாது. பொருள் விற்பனை, சந்தைப்படுத்தலில் வெற்றிகரமாக செயல்படாத எந்த நிறுவனமுமே வெற்றி பெற்றது கிடையாது. பிராண்டிங் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம்தான் போட்டிகளை எதிர்கொள்ள முடியும்.
ஐபிஎம் உலகின் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் நிறுவனமாக அறியப்படுவதற்கு முக்கியக் காரணம் அதன் நிறுவனர் டாம் வாட்சன். இவர் சிறந்த விற்பனைப் பிரதிநிதி, இவரிடம் மிகச் சிறந்த விற்பனை குழு இருந்தது. இதேபோல மெக்டொனால்ட் நிறுவனம் ருசியான பர்கரை தயாரித்தது கிடையாது.
ஆனால் அது பர்கர் கிங் நிறுவனத்தின் விற்பனையை மிஞ்சியதற்கு அதன் நிறுவனர் ரே குரோக் காரணம். அவர் சூப்பர் விற்பனை பிரதிநிதி. தனது திறமையை குழுவினருக்கும் கற்றுத் தந்தார்.
5. நிதி மேலாண்மை
நிதியை நிர்வகிப்பதுதான் ஐந்தாவது திறமை. நான் அறிந்தவரை பெரும்பாலான தொழில்முனைவோர் இந்த விஷயத்தை மிகவும் அசௌகர்யமாகத்தான் அணுகினர். தங்களை அழித்துவிடும் நிதி மேலாண்மை திறமையை அவர்கள் வளர்த்துக் கொள்ளத் தவறிவிட்டனர். இது அவர்களது தொழிலை பாதியிலேயே கைவிட வழிவகுத்துவிடும்.
சொந்தமாக தொழில் தொடங்கிவிட்டால், பணத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலோர் ஆசைக்காக, ஆத்ம திருப்திக்காக தொழில் தொடங்குகின்றனர். இத்தகையோர் பிறகு ஏற்படும் இழப்புகளுக்காக வருந்துகின்றனர்.
6. செயல்பாடு மற்றும் பொருள் மேம்பாடு
வெற்றிகரமாக நீங்கள் தொடங்கி தொழில் வளர்ச்சியடைந்துவிட்டது என்றால் அடுத்தகட்டமாக அது பிராந்திய அளவுக்கோ அல்லது சர்வதேச அளவுக்கோ விரிவுபடுத்த வேண்டும். முதலில் உங்களது தொழிலை அல்லது தயாரிப்பை அல்லது நீங்கள் வழங்கும் சேவை தொடர்ந்து சிறப்பாக இருக்க வேண்டும்.
சிறந்த தொழிலதிபராக இருந்து வெற்றிகரமான தொழிலை நடத்த அதற்கான சூத்திரத்தை, பொருள் மேம்பாட்டை வடிவமைக்க வேண்டும். அதேபோல உங்கள் தொழிலை பிராந்திய அளவிலிருந்து சர்வதேச அளவுக்கு விரிவுபடுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் இல்லாது போனாலும் அவை செயல்பட வேண்டும். உங்களது பணியாளர்கள் விடுமுறையில் சென்றாலும் பொருள்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றிகரமான தொழிலாக, சேவையாக அமையும்.
அஸ்பயர் கே.சுவாமிநாதன்
aspireswaminathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT