Published : 23 Feb 2015 12:02 PM
Last Updated : 23 Feb 2015 12:02 PM
பொருள் தயாரிப்பு, விற்பனை, சந்தைப்படுத்துவது, விற்பனை யாளரின் திறமை இவற்றை கடந்த வாரங்களில் பார்த்தோம். கடந்த 3 மாதங்களாக வரும் இந்தத் தொடரைப் படித்து தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான இ-மெயில்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதில் பெரும்பாலானோர் எந்தத் தொழில் செய்வது, சிறந்த விற்பனையாளராவது என்றால் எதைப்படிக்க வேண்டும் என்றே கேள்வியெழுப்பியிருந்தனர். இவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக புதிதாக உருவெடுத்துள்ள ஒரு பெண் தொழில்முனைவோரைப் பற்றி இந்த வாரம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
மகளிர் சுய உதவிக் குழுவினரை ஊக்குவிக்கும் பயிற்சி வகுப்பில் என்னை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. நானும் பெண்களுக்கு எத்தகைய தொழில் வாய்ப்புகள் உள்ளன, அதில் உள்ள சவால்கள், பிரச்சினைகளை விளக்கினேன்.
கடந்த மாதம் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஒரு பெண்மணி என்னைச் சந்தித்தார். தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்டார், உள்ளபடியே அவரை நினைவில் இல்லை என்பதை ஒப்புக் கொண்டேன். அவர் சொன்ன பிறகுதான் 6 மாதம் முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் எனது கருத்தை கேட்டவரில் அவரும் ஒருவர் என்பது புரிந்தது.
தொழில் முனைவோராக துணிந்து தொழில் தொடங்கிய அலமேலுவின் படிப்பு 5-ம் வகுப்புதான். ஆனால் அவர் வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தினார்.
கடந்த மாதம் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஒரு பெண்மணி என்னைச் சந்தித்தார். தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்டார், உள்ளபடியே அவரை நினைவில் இல்லை என்பதை ஒப்புக் கொண்டேன். அவர் சொன்ன பிறகுதான் 6 மாதம் முன்பு மகளிர் சுய உதவிக் குழுவில் எனது கருத்தை கேட்டவரில் அவரும் ஒருவர் என்பது புரிந்தது.
வந்திருந்த பெண்மணியின் பெயர் அலமேலு. இவர் நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஆட்டோ டிரைவர். 2 பெண் குழந்தைகள். கணவரின் வருமானம் போதவில்லை. குழந்தைகளின் படிப்புச் செலவை ஈடுகட்ட வேலைக்குப் போக முடிவு செய்தார்.
ஆனால் அவர் படித்திருந்ததோ வெறும் 5-ம் வகுப்புதான். இதனால் சுயமாக தொழில் செய்ய முடிவு செய்துள்ளார். மகளிர் சுய உதவிக் குழுவும் இதற்கு உதவியுள்ளது.
நாமக்கலில் கல்லூரி மாணவிகளுக்கு தேவையான சுடிதார் உள்ளிட்ட நவநாகரிக உடைகள் விற்பனை செய்யலாம் என முடிவு செய்துள்ளார். நாமக்கல்லில் உள்ளவர்கள் கோவையிலிருந்து கொள்முதல் செய்வதும், கோவையிலிருப்பவர்கள் சென்னையிலிருந்து கொள்முதல் செய்வதும் தெரிந்தது. சென்னைக்கே மும்பை, சூரத்திலிருந்து ஆடைகள் வருவதையும் தெரிந்து கொண்டார்.
இப்போது அவர் நாமக்கல் மட்டுமின்றி கோவை நகரில் உள்ள வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான நவ நாகரிக சுடிதார் உள்ளிட்ட ஆயத்த ஆடைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறாராம். தனக்கு மாதம் ரூ. 35 ஆயிரம் வருமானம் கிடைப்பதாகக் கூறியவுடன் எனது வியப்பு மேலோங்கியது.
எப்படி இந்த யோசனை ஏற்பட்டது என்ற எனது கேள்விக்கு, கோவை நகரில் பணிபுரியும் பெண்களுக்கான நவநாகரிக உடைகள் சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருவதைத் தெரிந்து கொண்டு, முதலில் சென்னையிலிருந்து வாங்கி விற்பனை செய்தாராம். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லையாம். மும்பை, சூரத் போன்ற பகுதிகளில் தயாராகும் ஆடைகள் தங்களுக்குத் தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.
ஹிந்தி தெரியாதபோதிலும் பக்கத்து வீட்டிலுள்ள ஹிந்தி தெரிந்த பெண்ணுடன் சூரத் நகருக்குச் சென்று அங்கிருந்து உடைகளை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கியதாகக் கூறினார். மாதம் ஒரு முறை அங்கு சென்று உடைகள் வாங்கி வந்தது போக இப்போது 15 நாளைக்கு ஒரு முறை சென்று வாங்கி வருவதாகக் கூறினார்.
அங்குள்ள விற்பனையாளர்களும் இப்போது கடனுக்கு உடைகள் தரத் தொடங்கி விட்டனராம். விற்பனை செய்த பிறகு பணம் செலுத்துவதாகக் கூறினார்.
அடுத்ததாக அவர் கூறிய விஷயம் என்னை மேலும் ஆச்சரியப்பட வைத்தது. இவரது பக்கத்து வீட்டு ஹிந்தி பேசும் பெண்மணி இவருடன் கூட்டு சேர்ந்துவிட்டார். இருவரும் சூரத், மும்பை சென்று ஆடைகளை பார்வையிடும்போது, அதை வாட்ஸ் அப் மூலம் தனது வாடிக்கையாளருக்கு அனுப்பிவிடுவார்களாம்.
இங்கிருந்து வாடிக்கையாளர்கள் ஆடைகளை தேர்வு செய்வதோடு வங்கிக் கணக்கில் பணமும் செலுத்தி விடுகிறார்களாம். இதனால் பிரச்சினையே இல்லாமல் வியாபாரம் நடக்கிறது என்றார்.
தொழில் முனைவோராக துணிந்து தொழில் தொடங்கிய அலமேலுவின் படிப்பு 5-ம் வகுப்புதான். ஆனால் அவர் வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தினார். நவீன தொழில்நுட்ப கருவிகளான வாட்ஸ் அப், இன்டர்நெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதும் இவரது வெற்றிக்கு காரணமாகியுள்ளது.
இதைப் போல வாடிக்கையாளரின் தேவை அறிந்து, அதற்கான தேவையை உருவாக்கும் எந்தத் தொழிலும் வெற்றி பெறும் என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்.
aspireswaminathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT