Published : 09 Feb 2015 11:10 AM
Last Updated : 09 Feb 2015 11:10 AM

முதல் செலவு: உங்களுக்கு நேரடி பங்கு வர்த்தகம் சரிப்பட்டு வருமா?

“அடிமரத்துல ஒரே அடியா அடிச்சாப்புல மொத்த மும் சரிஞ்சுடுத்து…அவ்வளவுதான், அத்தோட விட்டுட்டேன், அதுக்கப்புறம் அந்தப் பக்கம் கூடப் போகலை”

சமீபத்தில் வைதீகக் காரியம் செய்து வைக்க வீட்டிற்கு ஒருவர் வந்திருந்தார். நான் என்ன செய்கிறேன் என்று கேட்ட போது நிதி ஆலோசகராக இருக்கிறேன் என்றேன். “அப்டின்னா ஸ்டாக் டிரேடிங் எல்லாம் பண்ணுவீங்களா?” என்றார். ஆமாம் என்றேன்.

சில வருடங்களுக்கு முன்னர் தாமும் பங்கு வர்த்தகத்தில் சில நாட்கள் முயற்சி செய்ததாகச் சொன்னார். மூன்றாவதாகவோ நான் காவதாகவோ வாங்கிய ஒரு பங்கு திடீரென கடுமையாக விழுந்து விட்டதாம். அதைப் பற்றி அவர் சொன்ன வாக்கியம் தான் நீங்கள் மேலே படித்தது.

இவரைப் போல நான் பலரைப் பார்த்திருக்கிறேன். பல கதைகளைக் கேட்டிருக்கிறேன்.

புரிதல் இல்லை

இப்படிப்பட்டவர்கள் அடிப்படையில் இரண்டு விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். முதலாவது, நேரடி பங்குச் சந்தை முதலீடு என்பது எப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதையும் அது தமக்கு கைகூடக் கூடியதா என்பதையும் சரிவர ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலிருப்பது. இரண்டாவது, நேரடியாக பங்குகளை வாங்கி விற்பதே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒரே வழி என்று நினைத்துக் கொண்டிருப்பது.

சுலபம் அல்ல…

இதில் முதலாவதைப் பார்ப்போம். நேரடி பங்குச் சந்தை முதலீடு என்பது சாதாரண முதலீட்டாளர்களுக்கும் சாத்தியம்தான்; ஆனால் சுலபமானது அல்ல. பங்குச் சந்தை இன்றைய நாட்களைப் போன்ற ஒரு ஏறுமுகத்தில் இருக்கும்போது, நமது நண்பர்கள் அல்லது உறவினர்கள் பலரும் தாம் இந்த கம்பெனியில் பணம் போட்டு இத்தனை லாபம் பார்த்தாகப் பிரஸ்தாபிப்பதை பலவாறு கேட்கலாம்.

இது போன்ற செவிவழிச் செய்திகளை நம்பியே பலரும் ‘நாமும் இதை முயன்று பார்க்கலாமே’ என்று துணிகிறார்கள். ஆனால், நம்மிடம் தமது வெற்றிகளைச் சொன்னவர்கள் அதன் கூடவே பெற்ற தோல்விகளை இழப்புகளை சொல்ல மாட்டார்கள். அதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?

பங்குகளை நேரடியாக வாங்க, விற்க நமக்கு ஓரளவுக்கு நிறுவனங் களையும் அதன் பொருளாதார ஆரோக்கியத்தையும் ஆராயத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு ஆதார வருவாய் மூலமென்ன, அதன் ஸ்திரத்தன்மை என்ன, வியாபார ஒழுங்கு முறைகள் என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் காணத் தெரிய வேண்டும். ஒரு நிறுவனம் அடிப்படையில் ‘நல்ல’ நிறுவனமா இல்லையா என்று கணிக்கத் தெரிய வேண்டும்.

கணிப்பில் தெளிவு

இதைக் கணிக்கத் தெரிந்தாலும், அந்த நிறுவனத்தின் பங்கு விலை தற்போது ஒரு நல்ல, வாங்கக் கூடிய விலையில் இருக்கிறதா என்று கண்டு பிடிக்கத் தெரிய வேண்டும். ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கினாலும், அதை ஓரளவுக்குக் குறைந்த விலையில் வாங்கினால் தான் நமக்கு லாபம் கிடைக்கும், இல்லையா?

இப்படி வாங்கப்பட்ட பங்குகளை எப்போது விற்க வேண்டும் என்பது பற்றி ஒரு தேர்ந்த உள்ளுணர்வோ அல்லது முன்னதாக தீர்மானித்த ஒழுங்கு முறையோ தேவை. உதாரணத்திற்கு, 200 ரூபாயில் வாங்கிய பங்கு இரண்டு மாதங்களில் இன்று 230 ரூபாய்க்குப் போய்க் கொண்டிருக்கிறதென்றால், அதை விற்பதா, கூடாதா? விற்றால் 30 ரூபாய் லாபம்.

விற்ற பின்னர் அது 300 ரூபாய்க்குச் சென்று விட்டால்? நமக்கு உண்டான லாபம் கிடைத்து விட்டதென்று சந்தோஷப்படுவேன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அடுத்த முறை இதே போல் ஒரு பங்கு லாபத்தில் இருக்கையில், நீங்கள் விற்கத் தயங்குவீர்கள். அது 220 ரூபாய்க்குக் குறையும், அப்போது அது மறுபடியும் 230 ரூபாய்க்குச் சென்றால் விற்கலாம் என்று நினைப்பீர்கள்.

அப்படி நினைத்துக் கொண்டிருக்கையில் அது 160 ரூபாய்க்குச் சரியும். சரி பட்டது போதும் என்று நீங்கள் நஷ்டத்தில் விற்ற பின்னர் அது மீண்டும் மேலே போகத் துவங்கும்.

உணர்ச்சிகளுக்கு இடமில்லை

முடிந்த வரை உணர்ச்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும். நண்பர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டும் ஒன்றைச் செய்யக் கூடாது. ஆனால், அனுபவம் உள்ள நண்பர்களின் கருத்து களுக்குச் செவிமடுக்க வேண்டும்.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையம், சமூக ஊட கங்கள் எனப் பல திசைகளிலிருந்தும் வரும் உள்ளீடுகளை பகுத்தாராய்ந்து ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ வேண்டும். இவற்றிற்கு அப்பால் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்.

இவையெல்லாம் உங்களுக்குச் சாத்தியமென்றால், ஒரு டீமேட் கணக்கு, ஒரு வர்த்தக முறைமை (டிரேடிங்) கணக்கு ஆகியவற்றைத் தொடங்கி ஜமாயுங்கள். சிரமமென்றால் அடுத்த பத்தியைப் படியுங்கள். பங்குச் சந்தை முதலீடு குறித்த இரண்டாவது புரிதலின்மை என்னவென்றால், நேரடி யாக பங்குகளை வாங்கி விற்பது மட்டுமே இந்தச் சந்தையில் முதலீடு செய்யச் சரியான வழி என்று நினைப்பது.

மாற்று வழி

பரஸ்பர நிதிகளின் மூலம் முதலீடு செய்யும் போது, மேற்கூறிய அத்தனைத் தலைவலிகளையும் நாம் ஒரு நிதி மேலாளரிடம் ஒப்படைத்து விடுகிறோம்.

ஒரு சிறிய வருடாந்திரக் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு பரவலான முறையில் நமது பணத்தை சந்தையில் முதலீடு செய்வது தான் அவர் வேலை. இவற்றைப் பற்றி நாம் மேற்கொண்டு வரும் கட்டுரைகளில் தொடர்ந்து பார்ப்போம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடி பங்குச் சந்தை முதலீடு குறித்து உங்களை பயமுறுத்துவதோ, உங்கள் நம்பிக்கையைக் குறைப்பதோ இல்லை. அதில் இருக்கும் உள்ளார்ந்த சிக்கல்களைப் புரிய வைத்து, அதற்கு மாற்று ஒன்று இருக்கிறது என்பதைத் தெரிய வைப்பதே. உழைத்து சம்பாதித்த பணத்தை உணர்ந்து முதலீடு செய்வது தானே சரி?

பங்குகளை நேரடியாக வாங்க, விற்க நமக்கு ஓரளவுக்கு நிறுவனங்களையும் அதன் பொருளாதார ஆரோக்கியத்தையும் ஆராயத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு ஆதார வருவாய் மூலமென்ன, அதன் ஸ்திரத்தன்மை என்ன, வியாபார ஒழுங்கு முறைகள் என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் காண தெரிய வேண்டும்.

ஸ்ரீகாந்த் மீனாட்சி

srikanth@fundsindia.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x