Published : 15 Dec 2014 04:07 PM
Last Updated : 15 Dec 2014 04:07 PM
மனித வாழ்வில் தப்பிக்க முடியாதவை இரண்டு - ஒன்று மரணம், இன்னொன்று வருமான வரி என்று சொன்னார் ஆங்கில அறிஞர் பெஞ்சமின் பிராங்ளின். மரணத்தைத் தவிர்க்க முடியாது, ஆனால் தள்ளிப் போடலாம். வருமான வரியைத் தவிர்க்க முடியாது, ஆனால் குறைத்துக் கொள்ளலாம்.
வருமான வரிச்சுமையைக் குறைப் பதற்கு அரசாங்கம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளதை நாம் அறிவோம். அவற்றில் சில செலவு சார்ந்த முறைகள் - வீட்டுக் கடன், சில கல்விச் செலவுகள், சில மருத்துவச் செலவுகள் ஆகியவை நமது வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன. இவற்றைத் தாண்டி சில முதலீட்டு முறைகளும் வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன. அதாவது, குறிப்பிட்ட சில இடங்களில், முறைகளில் நீங்கள் முதலீடு செய்தால், அந்தத் தொகைக்கு வரி செலுத்தாமல் விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் இந்தச் சலுகை.
இந்த முதலீட்டு முறைகள் வருமான வரி விதிகளின் 80-சி பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பிரிவின் கீழ் சென்ற ஆண்டு வரை ஒரு லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடிந்தது. இந்த வருடம், இந்த உச்ச வரம்பு ஒரு லட்சத்து ஐம்பதாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒருவர் கூடுதலாக ரூ 15,000 வரை தனது வரிச்சுமையைக் குறைத்துக் கொள்ள முடியும்.
இந்தப் பிரிவின் கீழ் வரும் முதலீட்டு முறைகள் பல இருந்தாலும், ELSS எனப்படும் மியூச்சுவல் பண்ட் சார்ந்த முறையே இவற்றுள் சிறந்தது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த முதலீட்டு முறை மட்டுமே பங்குச் சந்தை சார்ந்த மார்க்கெட் முதலீட்டு முறை. இருப்பவற்றுள் இதில் தான் அதிக லாப சாத்தியம் உள்ளது. மேலும், மற்ற முறைகள் (பிராவிடண்ட் ஃபண்ட், ஐந்து வருட வங்கி வைப்பு நிதி) போன்றவை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் முடக்கி வைக்கப்பட வேண்டியவை. ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் சார்ந்த வரி சேமிப்பு முதலீடுகள் மூன்று வருடங்கள் மட்டுமே பூட்டி வைக்கப்பட வேண்டும்.
இந்த முறையில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதைக் கணிப்பது சுலபம். இந்த வருமான வரிப் பிரிவின் கீழ் முதலீடு தவிர இன்ன பிற விஷயங்களும் வருகின்றன. அவற்றில் முக்கியமானவை ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகையும், வீடு வாங்க எடுக்கப்பட்டக் கடனின் மூலத்தவணைத் தொகையும் ஆகும். இவற்றிற்காகும் செலவுகள் தவிர்க்க முடியாதவை அல்லது தவிர்க்கப்படக் கூடாதவை (குறிப்பாக குடும்பப் பாதுகாப்பிற்கான டெர்ம் இன்ஷூரன்ஸ் தொகை). இவை போக ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தில் மீதமிருக்கும் தொகையில் எவ்வளவு முடிகிறதோ அதை அப்படியே வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.
பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகளில், குறிப்பாக பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில், முதலீடு செய்வதை மாதத் தவணைகளில் செய்ய வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். ஆனால் வரி சேமிப்பு ஃபண்டுகள் இதற்கு ஒரு விதி விலக்கு. எப்படியுமே மூன்று வருடங்கள் பணத்தைத் தொட முடியாது என்னும்போது, இத்தகைய தவணை முறைகளில் ‘பரப்பிய’ முதலீடு செய்யத் தேவையில்லை. மேலும் ஒவ்வொரு தவணையும் தனித் தனியாக மூன்று வருடங்கள் பூட்டப்படும் என்பதால், பின்னர் இதை நிர்வகிப்பது கடினமாகி விடும். ஆகையால், வரி சேமிப்பு ஃபண்டுகளில் மொத்தத் தொகையாக முதலீடு செய்வதில் தவறில்லை, வசதியானதும் கூட.
இத்தகைய ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது ‘க்ரோத்’ எனப்படும் வளர்ச்சி-சார் முறையைத் தேர்ந்தெடுத்தல் சரி. டிவிடெண்ட் முறையைத் தேர்ந்தெடுத்தால், டிவிடெண்ட் பே-அவுட் முறையைத் தேர்வு செய்ய வேண்டும். கண்டிப்பாக டிவிடெண்ட் மறு முதலீட்டு (ரீ-இன்வெஸ்ட்மெண்ட்) முறையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஏனெனில், ஒவ்வொரு டிவிடெண்டும் மீண்டும் மூன்று வருடங்களுக்கு பூட்டப்படும்.
இந்தத் திட்டத்தில் ஏறக்குறைய எல்லா ஃபண்டு நிறுவனங்களுமே ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றன. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகளைக் கண்டெடுக்கப் பயன்படும் முறைகளே இவற்றிற்கும் பொருந்தும். கடந்த பல வருடங்களில் அவை எப்படி வளர்ந்திருக்கின்றன என்பதை வைத்துப் பார்த்தால், மூன்று ஃபண்டுகளைப் பரிந்துரைக்கலாம்.
அவை - ஐசிஐசிஐ புரூடென்ஷியல் டாக்ஸ் சேவர் பிளான், ஆக்ஸிஸ் லாங் டெர்ம் ஈக்விடி பிளான் மற்றும் கனரா ரொபெகோ ஈக்விடி டாக்ஸ் சேவர் பிளான். இவற்றுள் முதல் இரு ஃபண்டுகள் (ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ்) கொஞ்சம் ரிஸ்க் அதிகம் எடுக்கும் ஃபண்டுகள். ரிஸ்க் அதிகம் எடுத்தாலும் அதற்கேற்ப லாபமும் ஈட்டியிருக்கின்றன. ரிஸ்க் இருந்தால் என்ன, லாபம்தான் முக்கியம் என்று எண்ணுபவர்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இல்லை, எனக்கு ரிஸ்க் குறைவாக இருத்தல் முக்கியம் என்று நினைப்பவர்கள் கனரா ரொபேகோ ஃபண்டினைத் தேர்வு செய்யலாம்.
இந்த ஃபண்டுகள் கடந்த மூன்று வருடங்களில் மிகச் சிறப்பாக லாபம் ஈட்டியிருக்கின்றன. ஆக்ஸிஸ் ஃபண்டு இவற்றில் மிக அதிகமாக வருடத்திற்கு 34.32% ஈட்டியிருக்கிறது. ஐசிஐசிஐ ஃபண்டு இதே சமயத்தில் 28.77 சதவிகிதமும், கனரா ரொபேகோ ஃபண்டு 23.83 சதவிகிதமும் லாபம் கொடுத்திருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த கால லாபங்கள் எதிர்காலத்தை உத்திரவாதமாகக் குறிப்பவை இல்லையென்றாலும், இந்த வளர்ச்சி விகிதங்கள், இவ்வகை ஃபண்டுகளின் சாத்தியங்களைக் கணிக்க உதவும்.
இவற்றில் எதைத் தேர்வு செய்தாலும் நல்லதே. முக்கியமான விஷயம் ஒன்று தான் - வரிச்சுமையைக் குறைத்து வளர்ச்சியையும் அடைய வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் தாம் சிறந்த வழி என்பதை உணர்ந்து முதலீடு செய்தால், வரியும் குறையும், வளமும் பெருகும்.
வீட்டுக் கடன், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நமது வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன. இவற்றைத் தாண்டி சில முதலீட்டு முறைகளும் வரிச்சுமையைக் குறைக்க உதவுகின்றன.
- ஸ்ரீகாந்த் மீனாட்சி
srikanth@fundsindia.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT