Last Updated : 22 Dec, 2014 12:13 PM

 

Published : 22 Dec 2014 12:13 PM
Last Updated : 22 Dec 2014 12:13 PM

ஐடியாவை தொழிலாக மாற்றுவது எப்படி?

உங்களுக்குத் தோன்றிய ஐடியாவை தொழிலாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்குங்கள். அது முன்பு தொழில் தொடங்கியவர்கள் பின்பற்றிய சிந்தனையாக இருக்கலாம், அதன் வழித்தோன்றலாக அதை நீங்கள் பின்பற்றக்கூடும். 1990-ம் ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்குவது அதிகமாக இருந்தது.

2000-வது ஆண்டுகளில் சமூக வலைதளங்கள் மற்றும் ஐ போன் ஆப்ஸ் மேம்பாடு செய்யும் தொழில் பெரும்பாலான தொழில் முனைவோரின் தேர்வாக இருந்தது. இதுபோல ஒருவரைப் பின்பற்றி தொடங்கிய தொழில்களின் ஆயுள்காலம் மிகக் குறைவு. இவை வெகு விரைவிலேயே மூடுவிழா கண்டுவிடும்.

முந்தைய டிரென்ட் அடிப்படையில் தொழில் ஆரம்பித்தால் அது நீடிக்காது. மேலும் உங்களைப் போல பலரும் இதே போன்ற தொழிலைத் தொடங்கியிருப்பார்கள். இந்த டிரென்ட் மாறும்போது உங்களது தொழிலும் சரிவைச் சந்திக்கும். எனது அனுபவத்தில் இப்போதைய சூழலில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் தொழிலை உருவாக்குவது மிகவும் கடினமானது. உங்களது தொழிலுக்கு வளமான வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே சந்தையில் நிலைத்திருக்க முடியும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் வாடிக்கையாளருக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும். அதேபோல வாடிக்கையாளருக்கு விரும்பும் சேவையை உங்களது தொழில் மூலம் அளிப்பதாக இருக்க வேண்டும். என்னிடம் ஆலோசனை பெற்ற பலருக்கும் சிறிய அளவில் தொழில் தொடங்க கூறிய ஆலோசனை பெரும்பாலும் கல்வி, பொழுதுபோக்கு, உணவு, ரியல் எஸ்டேட் சார்ந்த தொழிலாக இருப்பது சரி. இவை அனைத்தும் சாகா வரம்பெற்ற தொழில்களாகும். இவை அனைத்தும் நவீன டிரென்ட்டுக்கு ஏற்ப மாற்றக் கூடியவை. எந்தக் காலத்திலும் தொய்வு காணாதவை.

வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் தயாரிப்பாக உங்களுடையது இருக்க வேண்டும். உங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதன் பலன்களை வாடிக்கையாளர்கள் நன்கு அறிந்திருக்கும் வகையில் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதற்கு அதிக பணமும், நேரமும் செலவாகும்.

பொதுவாக தங்களது ஐடியாவை செயல்படுத்துவதில் தொழில்முனைவோர் மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள். இதனால் சந்தை விலை நிலவரம், அதை தயாரிப்பதற்கான செலவு உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொள்ளாமல் விலை நிர்ணயிப்பர். இதில் முக்கியமாக வாடிக்கையாளரின் வாங்கும் சக்தியையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் எத்தகைய வாடிக்கையாளருக்காக தாங்கள் பொருள் தயாரிக்கிறோம், அந்தப் பிரிவினரின் வாங்கும் சக்தியை நன்கு கணித்த பிறகு பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும்.

பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பெருமளவு செலவு செய்துவிட்டு பிறகு பொருள் தயாரிப்பில் கோட்டை விட்டவர்கள் பலர். எனவே நீண்ட கால அடிப்படையில் சந்தைப்படுத்தல் நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் உங்களது தயாரிப்புகள் இருக்க வேண்டும். உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் முன்பாக நீங்கள் நடத்திய விழிப்புணர்வு காரணமாக உங்கள் பொருள்களை சந்தைப்படுத்துவது விற்பனையாளருக்குச் சிரமமாக இருக்காது.

உங்களில் பலருக்கு www.youronlinematrimony.com என்ற இணையதளம் பற்றி தெரிந்திருக்கும். இந்த இணையதளம் 1990களில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் அளிக்கும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு விவரிக்கவே அதிக நேரம் செலவிட்டது. இந்த இணையதளம் செயல்பட்டு வருவாய் வருவதற்கு முன்பாகவே நிதி நெருக்கடி காரணமாக இந்த இணையதளத்தை மூடிவிட்டனர்.

எனவே எத்தகைய ஐடியாவை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேர்வு செய்வதில் புத்திசாலித்தனம் தேவை. புதிதாக, வித்தியாசமாக ஏதேனும் செய்ய ஆசைப்பட்டால் அதற்கு முன்பு அதை சந்தைப்படுத்த வேண்டும். அப்போதுதான் பொருள் சந்தைக்கு வரும்போது உங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருப்பர்.

நீங்கள் தொடங்கப் போகும் தொழில் வித்தியாசமானதாக இருக்கலாம், புதிதாக இருக்கலாம். அதில் உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை, ஆர்வம் இருக்கலாம். அதிகபட்ச அனுபவம் இருக்கலாம். ஆனால் தொடங்குவதற்கு முன்பு அந்தத் தொழிலை மதிப்பீடு செய்வது நல்லது.

உதாரணத்துக்கு உங்களுக்கு கர்நாடக சங்கீதத்தில் அதீத ஈடுபாடு இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் நகரம் முழுவதும் சங்கிலித் தொடர் சங்கீத பயிற்சி மையத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் நகர மக்களுக்கு கர்நாடக சங்கீதத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது என வைத்துக் கொள்வோம். அப்படியெனில் உங்களது பயிற்சி வகுப்புகளுக்கு வரவேற்பு கிடைக்குமா?

நிச்சயமாக இருக்காது. இதைப்போலத்தான் எந்த ஒரு தொழில் தொடங்கும் முன்பும் அதை மதிப்பீடு செய்வது அவசியமாகும். இதற்கு கள ஆய்வு முக்கியமாகும். எந்தப் பகுதியிலிருந்து தொழில் செய்யப் போகிறீர்கள். உங்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள். வாடிக்கையாளரின் ஷாப்பிங் பாணி, அவர்கள் செலவு செய்யும் விதம் ஆகியவை உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா என்று ஆராய வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் உங்களுடைய தயாரிப்பு அல்லது சேவை உள்ளதா என்பதை கணிக்க வேண்டும். ஒட்டுமொத்த சந்தையின் தேவையை உங்கள் தயாரிப்பு பூர்த்தி செய்யுமா எனபார்க்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கான பொருள் என்பதை அறிந்து அந்தப் பிரிவை கண்டு அதற்கேற்ற பொருளை, சேவையை அளித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

தொழில் தொடங்கும் பயணத்தில் ஐடியா என்பது 2 சதவீதம்தான். ஐடியா வெற்றி பெற்றால் 100 கிலோமீட்டர் பயணத்தில் 2 கிலோ மீட்டர் பயணத்தை வெற்றி கரமாக கடந்துள்ளீர்கள் எனலாம். உங்கள் ஐடியாவிலிருந்து வெற்றிகரமான தொழிலை உருவாக்குவது எப்படி? என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

- aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x