Published : 08 Dec 2014 12:46 PM
Last Updated : 08 Dec 2014 12:46 PM
இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் உள்ளன.
பகுதிசார் பொருள்களின் விளைச் சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பிராந்தியம் இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன.
காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் தட்டு, திருப்பதி லட்டு என்றும், மதுரை என்றால் குண்டு மல்லியும், சேலம் என்றால் மாம்பழமும் நமது பகுதி சார்ந்த உற்பத்திகள் என்று புரிந்து கொள்ளலாம். இப்படியான பகுதி சார்ந்த அடையாளத்தைத்தான் புவி சார் குறியீடு என்கிறோம்.
பொருள்களுக்கான புவிசார் குறியீடுகள் சட்டம் ( பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999) 1999 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.
வேறு ஊர்களில் உற்பத்தி செய்த பட்டுப் புடவையை காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்று விற்க முடியாது. மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் விலையும் குண்டுமல்லியை மட்டுமே மதுரை மல்லி என்று உரிமையோடு விற்பனை செய்ய முடியும். கோலாபூரி செருப்புகளின் மாடலைப் போல வேறு ஊர்களில் தயாரித்து கோலாப்பூரி செருப்பு என்று விற்பனை செய்தால் சட்டரீதியாக் குற்றம் என்கிறது புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்.
பயன்கள்
# முதலில் இதற்கு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கிறது.
# புவிசார் குறியீடு வாங்கப்பட்ட பொருட்களை தவறான வழிகளில் விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.
# ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப் பதும் உற்பத்தியாளர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது.
# சர்வதேச அளவிலான சுதந்திர வர்த்தகத்தில் புவிசார் குறியீடுகள் நமக்கான சட்ட பாதுகாப்பினை உறுதி செய்கிறது.
தனி ஒருவருக்கு சொந்தமாகுமா?
# புவிசார் குறியீட்டை தனி ஒருவர் வாங்க முடியாது. சட்டரீதியான அல்லது சட்டத்துக்கு உட்பட்ட அமைப்புகள், அந்த பகுதி சார்ந்த அமைப்புகளே வாங்க முடியும்.
# உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் சட்டரீதியாக அனுமதி வாங்கிய விண்ணப்பதாரர் இதற்கு விண்ணப் பிக்கலாம்.
# புவிசார் குறியீடு பதிவுக்கு விண்ணப் பிக்கும் நபர்/அமைப்பு உற்பத்தியா ளர்களின் நலன்களை பாதுகாக்கும் பொதுநலன் கொண்டவராக இருக்க வேண்டும். சட்ட ரீதியாக அனுமதி வாங்கிய பின்னர் இவர்களே உரிமையாளர்களாக கருதப் படுவார்கள். இவர்கள் தவிர புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை தயாரிக்கும் பகுதி சார்ந்த பிற உற்பத்தியாளர்கள் தனித்தனியாக தங்களை இணைத்துக் கொள்ள தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
உற்பத்தியாளர்கள் யார்?
# உற்பத்தியாளர்களை புவிசார் குறியீடு மூன்று வகையாக பிரிக்கிறது. உற்பத்தி, பதப்படுத்துதல், வர்த்தக தொடர்புடைய வேளண்மைப் பொருட்கள்.
# இயற்கை வளத்தை உழைத்து பயன் படுத்துதல், வர்த்தகம் தொடர்புடைய இயற்கை உற்பத்தி பொருட்கள்.
# உருவாக்குதல், தயாரித்தல், வர்த்தக தொடர்புடைய கைவினைப் அல்லது தொழில் உற்பத்திப் பொருட்கள்.
இந்த அடிப்படையில் புவிசார் குறியீட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.
பதிவு செய்வது கட்டாயமா?
இதை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமில்லை என்றாலும், வர்த்தக வரம்பு மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கும். அங்கீகரிக்கபட்ட பகுதிசார் உரிமையாளர்கள் மட்டுமே இந்த குறியீடுகளை பயன்படுத்த முடியும். அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும் தனியுரிமையுடன் இதை பயன்படுத்த முடியும்.
குறிப்பிட்ட பொருளின் பகுதி பற்றி பொதுமக்களுக்கு தவறான குறிப்புகள் கொடுப்பது, உண்மையான இடத்துக்கு மாற்றாக வேறொரு நிலப்பகுதியை சேர்ந்தது என சொல்லி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இந்த குறியீடு பாதுகாப்பு மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
புவிசார் குறியீட்டுக்கான பதிவு பத்து ஆண்டுகளுக்கு செல்லும். அதற்கு பிறகு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதுப்பிக்கப்படவில்லை என்றால் அனுமதி ரத்து ஆகும்.
புவிசார் குறியீடுகளை இடமாற்றம் செய்து கொள்ள முடியுமா?
குறியீடு பதிவு செய்த பிறகு இடமாற்றம் செய்துகொள்ள முடியாது. இது பொருளின் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான பொது சொத்தாகக் கருதப்படும். சட்டபூர்மான உரிமை மாற்றம், இடமாற்றம், பிணையம், அடமானம் உள்ளிட்ட எந்த ஒரு ஒப்பந்தமும் இதை வைத்து மேற்கொள்ள முடியாது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர் இறந்து போனால் அவரது வாரிசுகள் உரிமை கோர முடியும்.
எங்கு பதிவு செய்வது?
புவிசார் குறியீட்டை பதிவு செய்வதற்கான மையம் சென்னையில் உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள புவிசார் குறியீடு கொண்ட அனைத்து பொருட்களுக்கும் இந்த மையமே அனுமதி வழங்குகிறது.
தொடர்புக்கு:Geographical Indications Registry,
Intellectual Property Office Building,
G.S.T Road, Guindy, Chennai 600 032. 044-22502091/92
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT