Published : 01 Dec 2014 10:06 AM
Last Updated : 01 Dec 2014 10:06 AM
1990-களில் பிரபலமாக இருந்த கிஸான் விகாஸ் பத்திரம் கடந்த 2011-ம் ஆண்டு நீக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஷியாமளா கோபிநாத் கமிட்டியின் பரிந்துரையின் (கருப்பு பணத்தை பதுக்க இந்த பத்திரங்கள் பயன்படுவதாக அந்த கமிட்டி கூறியது) பேரில் அப்போதைய மத்திய அரசு நீக்கியது. தற்போது மோடி தலைமையிலான அரசு அந்த பத்திரத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
எப்படி வாங்கலாம்?
தற்போது தபால் நிலையங்களில் இந்த பத்திரத்தை வாங்க முடியும். பணம், காசோலை, வரைவோலை ஆகியவற்றை கொடுத்து இந்த பத்திரத்தை வாங்க முடியும்.
இதில் குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய். அதிகபட்ச முதலீட்டுக்கு எல்லை கிடையாது. ரூ.1,000, ரூ 5,000, 10,000 மற்றும் 50,000 ரூபாய் பத்திரங்களாக பெற்றுக்கொள்ளலாம். இதில் முதலீடு செய்வதற்கு பான் கார்டு தேவையில்லை. ஆனால் ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். நிறுவனங்களோ, வெளிநாட்டு இந்தியர்களோ இந்த பத்திரத்தில் முதலீடு செய்ய முடியாது.
வருமானம் எவ்வளவு?
இந்த பத்திரத்தில் முதலீடு செய்யும் தொகை 100 மாதங்களில் முதிர்வடையும். அப்போது முதலீடு செய்த தொகை இரு மடங்காகும். அதாவது 8 வருடம் 4 மாதங்களில் முதலீடு செய்யப்படும் தொகை இரு மடங்காகும். ஆண்டுக்கு 8.7 சதவீதம் வட்டி கிடைக்கும். மேலும் முதல் 30 மாதங்களுக்கு இதில் முதலீடு செய்யப்படும் தொகையை வெளியே எடுக்க முடியாது. அதன் பிறகு செய்துள்ள முதலீட்டை 6 பகுதிகளாக எடுத்துக்கொள்ள முடியும்.
வரிச்சலுகை?
இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரிவிலக்கு கிடையாது. அதே சமயம் இந்த முதலீட்டில் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் வருமான வரிக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். மேலும் இதில் கிடைக்கும் வருமானத்தில் 10 சதவீத டிடிஸ் பிடிப்பார்கள்.
இதில் முதலீடு செய்வதற்கும் காரணங்கள் இருக்கின்றன. இந்த முதலீடு வேண்டாம் என்று சொல்வதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
ஏன் முதலீடு செய்ய வேண்டும்
மிக எளிதாக இதில் முதலீடு செய்யலாம். ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தாலும் போதும். 1,000 ரூபாயை கூட இந்த பத்திரத்தில் முதலீடு செய்யமுடியும். தேவைப்பட்டால் இதை வைத்து கடன் பெற்றுக்கொள்ள முடியும். வங்கியுடன் ஒப்பிடும் போது வட்டி குறைவு என்றாலும், வங்கிகளின் இந்த வட்டி விகிதம் குறுகிய காலத்துக்குதான். நீண்ட காலத்தில் 8.7 சதவீதம் என்பது போதும் என்பவர்கள் இதை நாடலாம்.
ஏன் கூடாது?
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கும் வரிச்சலுகை கிடையாது. கிடைக்கும் வருமானத்துக்கும் வரி செலுத்த வேண்டி இருக்கும். பிபிஎப் மற்றும் விபிஎப் முதலீடு இதே அளவுக்கு வருமானத்தை கொடுத்தாலும், அதில் முதலீடு செய்யும்போதும் வரிச்சலுகை கிடைக்கும்.
குறிப்பாக அதிக வருமான வரி செலுத்த வேண்டிய நபருக்கும் இந்த முதலீடு ஏற்றதல்ல. 10 சதவீத வருமான வரி செலுத்துபவருக்கு கிடைக்கும் வருமானம் 7.8 சதவீதம் மட்டுமே. அதேபோல 20 சதவீத வருமான வரி செலுத்துவோருக்கு இந்த முதலீட்டில் 6.88 சதவீத வருமானம் மட்டுமே கிடைக்கும். அதேபோல 30 சதவீத வரம்புக்குள் இருப்ப்பவர்களுக்கு 6 சதவீத வருமானம் மட்டுமே கிடைக்கும்.
அதனால் அதிக வருமான வரி வரம்புக்குள் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றதல்ல என்பதே பெரும் பாலான நிதி ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT