Published : 01 Jul 2019 10:51 AM
Last Updated : 01 Jul 2019 10:51 AM

பிஎம்டபிள்யுவின் ஆல் நியூ சூப்பர் பைக்

பிஎம்டபிள்யு மோட்டாராட் நிறுவனம் பிரீமியம் சூப்பர் பைக்குகளைத் தயாரித்துவருகிறது. 2009-ல் சூப்பர் பைக் சேம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும்போது அறிமுகப்படுத்தப்பட்ட எஸ் 1000 ஆர் ஆர் என்ற மாடல் பத்து ஆண்டுகள் கழித்து பல்வேறு கூடுதல் அம்சங்கள் தொழில்நுட்பங்கள் சேர்த்து மூன்றாம் தலைமுறை மாடலாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆல் நியூ எஸ் 1000 ஆர் ஆர் பைக்கில் தோற்றமும், இன்ஜினும் முற்றிலும் புதியவை. ஸ்டைலுக்கான மெனக்கெடல்கள் பைக்கைப் பார்க்கும்போதே தெரிகிறது. எல்இடி ஹெட்லைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடையும் பல விதங்களில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய ட்வின் ஸ்பார் அலுமினியம் ஃபிரேம் மற்றும் ட்ரெல்லிஸ் சப் ஃப்ரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால் எடை குறைவாக உள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள புத்தம் புது இன்ஜின் 998 சிசி திறன் கொண்ட நான்கு சிலிண்டர் இன்ஜின் ஆகும். இது 204 பிஹெச்பி திறனையும் 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. ஆனால், எடை முந்தைய மாடலில் உள்ள இன்ஜினைக் காட்டிலும் 4 கிலோ குறைவுதான். எக்சாஸ்ட்டும் 1.3 கிலோ முந்தைய மாடலைவிட குறைவு. இதனால் புதிய மாடலின் மொத்த எடை முந்தைய மாடலைக் காட்டிலும் 11 கிலோ குறைவாக உள்ளது.

இன்ஜின் 6 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பிஎம்டபிள்யு மோட்டாராடின் ஷிஃப்ட்கேம் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வால்வ் டைமிங் மற்றும் இன்டேக் ஸ்ட்ரோக்கை மிகவும் சிறப்பாக செயல்பட வைக்கிறது. இதனால் சிறப்பான பெர்பாமென்ஸை உணர முடியும்.

இந்த புதிய எஸ் 1000 ஆர்ஆர் சூப்பர் பைக்கில் ரோடு, மழை, டைனமிக் மற்றும் ரேஸ் என நான்கு விதமான ட்ரைவ் மோடுகளும் ஸ்டேண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. டாப் வேரியன்ட்டில் கூடுதலாக லான்ச் கன்ட்ரோல், பிட் லேன் ஸ்பீட் லிமிட் ஆகிய வசதிகள் உள்ள மூன்று மோடுகள் வழங்கப்படுகின்றன.

மேலும் பாதுகாப்பு அம்சமாக இதில் ஆக்சிஸ் சென்சார் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ஏபிஎஸ், டைனமிக் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல் மற்றும் இன்ஜின் பிரேக்கிங் கன்ட்ரோல் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

கூடுதலாக இதில் 6.5 அங்குல டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று வேரியன்ட்களில் வந்துள்ள பிஎம்டபிள்யு எஸ் 1000 ஆர் ஆர் ஆரம்ப விலை ரூ.18.50 லட்சம். டாப் வேரியன்ட் ரூ.22.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரேஸ் பைக் விரும்பிகளுக்குப் பொருத்தமான பைக்காக இது திகழும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x