Published : 26 Jun 2017 11:09 AM
Last Updated : 26 Jun 2017 11:09 AM

அலசல்: இதுதான் நிறுவன கலாசாரமா?

கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளில் ஒன்று உபெர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிராவிஸ் கலாநிக் ராஜினாமா செய்தது. அவர் தாமாக ராஜினாமா செய்யவில்லை. நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக நிறுவனத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளே இதற்கு காரணமாகும். சூசன் பிளவர் என்னும் பெண் பணியாளர் நிறுவனத்தில் நடக்கும் விஷயங்களை பொதுவெளியில் வெளியிட்டபோதுதான் நிறுவனத்துக்குள் நடக்கும் விஷயங்கள் தெரியவந்தது. பயிற்சி முடிந்த பிறகு, பணியில் சூசன் சேர்ந்திருக்கிறார். அவரது குழு மேலாளரால் தொந்தரவு (சாட் மூலம்) செய்யப்பட்டிருக்கிறார். ஹெச் ஆர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய பிறகும் கூட நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தன்னுடைய வலைபதிவில் தெரிவித்திருக்கிறார். பல பெண் பணியாளர்களும் இதேபோல பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தன்னுடைய வலைபதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இவர் பணியில் சேர்ந்த சமயத்தில் 25 சதவீதம் பெண் பணியாளர்கள் இருந்திருக்கிறார்கள். படிப்படியாக குறைந்து 6 சதவீதத்துக்கு வந்துவிட்டது.

இது தவிர பாலியல் பாகுபாடு, மோசடி, நாசவேலை, பணியாளர்களை மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சூசன் தெரிவித்திருக்கிறார். இதனால் பல மூத்த அதிகாரிகள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டனர். நிறுவனத்தின் நம்பிக்கை பொதுவெளியில் சரிந்தது. அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனமான லிப்ட் நோக்கி சென்றனர். இவை அனைத்தும் நான்கு மாதங்களில் நடந்தது. சந்தையை இழந்த பிறகு இயக்குநர் குழு நிறுவனத்தின் தோற்றத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

இதேபோல இந்திய நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் தன்மை குறித்து வெளிவரும் தகவல்களும் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பணியாளர் ஒருவர் கூறுகையில், ஸ்நாப்டீலில் சர்வாதிகார போக்கு அதிகமாக இருக்கிறது. ஜனநாயகம் என்னும் பேச்சுக்கே இடமில்லை. முக்கிய முடிவுகளை நிறுவனர்கள் மட்டுமே எடுப்பதால் உயரதிகாரிகள் யாரும் நீண்டநாள் நிலைப்பதில்லை என தெரிவித்திருக்கிறார்.

நிறுவனத்தை வளர்த்தெடுப்பதில் பணியாளர்களின் பங்கு முக்கியமானது. அவர்களுக்கு பாதுகாப்பு, வளர்ச்சி, ஊக்கம் இருக்கும்பட்சத்தில் மன உறுதி அதிகரிக்கும், அவை செயல்பாடுகளில் பிரதிபலிக்கும். ஹெச்சிஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி விநீத் நய்யார் எம்பிளாயி பர்ஸ்ட், கஸ்டமர் செகன்ட் என புத்தகமே எழுதியிருக்கிறார்.

நிறுவனத்தை உருவாக்குவது, முதலீடு திரட்டுவது, விரிவடைய செய்வதில் கவனம் செலுத்தும் நிறுவனர்கள் நிறுவனத்துகென பிரத்யேக கலாசாரத்தை உருவாக்க தவறிவிடுகின்றனர். சரியான கலாசாரம் இல்லை எனும் பட்சத்தில் நிறுவனத்தை பெரிதாக வளர்க்க முடியாது. ஒருவேளை வளர்த்தாலும் பிரச்சினையில் சிக்க வேண்டும். சிக்கலில் இருக்கும் நிறுவனங்கள் மீண்டு வரலாம். ஆனால் சரியான கலாசாரத்தை உருவாக்கி கடைபிடிக்கவில்லை காலகாலத்துக்குமான நிறுவனமாக இருக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x