Published : 26 Jun 2017 11:24 AM
Last Updated : 26 Jun 2017 11:24 AM

தமிழ்நாட்டில் கூகுள்?

சர்வதேச அளவில் பணி புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் நிறுவனம் கூகுள். வழியைக் கண்டுபிடிப்பதற்கு கூகுள் மேப் உதவும். பிற தகவல்களை விரல் நுனியில் பெறுவதற்கு அனைவரும் நாடும் ஒரே இணையதளம் கூகுள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கூகுள் மையம் தமிழ்நாட்டில் தனது மையத்தைத் திறந்தால்...

கடந்த வாரம் சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தில் கூகுள் மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது பலருக்கு இனிப்பான செய்தி. சென்னையிலோ அல்லது மதுரையிலோ மிகப் பெரிய மையத்தை அமைப்பது தொடர்பாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார். இந்த பேச்சு வார்த்தை சாத்தியமானால் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய சாதனையாகத்தான் இருக்கும்.

கலிபோர்னியா மாகாணம் மவுன்டன் வியூவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் உலக அளவில் பணி புரிவதற்கு ஏற்ற நிறுவனமாகத் திகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது நிறுவன ஊழியர்களது சம்பளம். அதேபோல பணியாளர்களுக்கு வேலை மீதான திருப்தி, பணி புரிவதை அர்த்தமுள்ளதாக்குவது ஆகியன பிரதானமாக உள்ளன. இங்குள்ள பணியாளர்களில் 86 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சி அல்லது ஓரளவு மகிழ்ச்சியுடன் பணி புரிவதாகக் கூறுகின்றனர்.

பணியாளர்களுக்கு பணி புரிவதற்கேற்ற சூழலை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது இந்நிறுவனம். வேலையை மகிழ்ச்சியாக, சுலபமாக செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது.

இங்குள்ள 64 ஆயிரம் பணியாளர்களுக்கும் இலவச மருத்துவக்காப்பீடு, லாண்டரி வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பெற்றோரைக் கவனிக்க போதிய விடுப்பு, குழந்தைகளைப் பாதுகாக்க மிகச் சிறந்த காப்பகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்நிறுவனத்தில் உளளன.

ஊழியர்களின் முழுத் திறனை வெளிக் கொணர அவர்களுக்கு வசதியான நேரத்தில் பணி புரிய வாய்ப்பு ஆகியன இதில் சிறப்பம்சமாகும்.

ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாங்களும் தொழிலைக் கற்று சக பணியாளர்களுக்குக் கற்றுத் தரும் பயிற்சியாளராக மாறுகின்றனர். இதனால் பணிபுரியும் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. போட்டி நிறுவனங்களை விட இங்கு ஊதியம் அதிகம். இரண்டாண்டு பணி புரிந்த ஊழியரின் ஆண்டுசம்பளம் 1.4 லட்சம் டாலராகும். ஆரம்ப நிலை பணியாளரின் ஆண்டு சம்பளம் 93 ஆயிரம் டாலராகும்.

உலக அளவில் 50 நாடுகளில் 70 அலுவலகங்களை கூகுள் அமைத்துள்ளது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த மையம் அமைந்தால், அது மேலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்கும். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சுந்தர் பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழகத்தின் மீது கூடுதல் அக்கறை இருக்க வாய்ப்புண்டு.

அரசியல் ஆதாயத்துக்காக இல்லாவிட்டாலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த அத்தியாயம் தொடங்க கூகுளை தமிழகத்துக்கு அழைத்து வருவதன் மூலம், ஐடி துறையில் தமிழகம் பெங்களூருக்கு இணையாக வளர வழியேற்படுத்தும். அதிமுக அரசு செய்யுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x