Published : 03 Sep 2018 11:40 AM
Last Updated : 03 Sep 2018 11:40 AM
இந்திய ராணுவத்துக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்துக்குமான இணைப்பு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்கது. சுமார் 65 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் பிரிக்க முடியாத செயலாற்றி வருகிறது. இதை பொதுமக்களும் உணரும் வகையில் கிளாசிக் சிக்னல் 350 மாடல் மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
கிளாசிக் சிக்னல் 350 மோட்டார் சைக்கிள்கள் குறைந்த எண்ணிக்கையில் (ஸ்பெஷல் எடிஷன்) தயாரிக்கப்பட்டு விற்கப்பட உள்ளன. சென்னையில் இதன் விற்பனையக விலை ரூ. 1.62 லட்சமாகும். கிளாசிக் மோட்டார் சைக்கிளை விட இது ரூ. 15 ஆயிரம் விலை அதிகமாகும். பொதுவாக ஸ்பெஷல் எடிசன் என்றாலே குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து அத்துடன் உற்பத்தியை நிறுத்திவிடும். ஆனால் இம்முறை தேவையின் அடிப்படையில் தொடர்ந்து தயாரித்து அளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வழக்கமான கிளாசிக் மோட்டார் சைக்கிளின் மாடலைப் போன்றே இது உள்ளது. ஆனால் இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் பிரத்யேக சீரியல் எண் அதன் பெட்ரோல் டேங்க் மீது எழுதப்பட்டிருக்கும். என்ஜின், சக்கர ரிம், சைலென்ஸர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் கறுப்பு வண்ணத்தில் இருக்கும். முகப்பு விளக்கின் சுற்றுப்பகுதி கறுப்பு பட்டையைக் கொண்டிருக்கும்.
ஏர்போர்ன் புளூ மற்றும் ஸ்டோர்ம் ரைடர் சாண்ட் ஆகிய இரண்டு வண்ணங்களில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்ஜினிலும் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. கிளாசிக் 350 சிசி மோட்டார் சைக்கிளில் உள்ளதைப் போன்றே இதிலும் 346 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் உள்ளது.
இது 19 பிஹெச்பி திறனையும் 28 நியூட்டன் மீட்டர் டார்க் சக்தியையும் வெளிப்படுத்தக் கூடியது. இதிலும் 5 கியர்கள் உள்ளன. என்ஜினின் செயல் திறனில் மாற்றங்கள் செய்யப்படாததால் கிளாசிக் மோட்டார் சைக்கிளின் செயல்திறனைப் போன்றே இதுவும் இருக்கும். ஆனால் இந்த மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக ஏபிஎஸ் (ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம்) இடம்பெற்றுள்ளது.
அதேபோல முன்புறம் மற்றும் பின்புறங்களில் டிஸ்க் பிரேக் இருப்பது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது. சிக்னல் வாகனத்துடன் தனித்துவம் மிக்க 40 உதிரி பாகங்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பேனியர், ஸ்டீல் என்ஜின் கார்டு, டூரிங் சீட், 3 டி மெஷ், வின்ட்ஷீல்ட் கிட், அலுமினிய சக்கரம் உள்ளிட்ட பல உதிரி பாகங்கள் இதில் அடங்கும். என்பீல்டு தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில் சிக்னல் தயாரிப்புகளும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவது நிச்சயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT