Published : 03 Sep 2018 11:41 AM
Last Updated : 03 Sep 2018 11:41 AM

தவறான பாதையா பணமதிப்பு நீக்கம்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை முடிவடைந்துவிட்டது. அரசின் நோக்கம் நிறைவேறிவிட்டது என நிதியமைச்சர் அருண்ஜேட்லி சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். நிச்சயமாக அரசின் நடவடிக்கை முடிவடைந்து விட்டதுதான். ஆனால் நோக்கம் நிறைவேறியதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அந்த நடவடிக்கையின் நம்பகத்தன்மையை தலைகீழாக மாற்றியுள்ளது ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கை. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 99.3 சதவீத ரொக்கம் வங்கிகளுக்கே திரும்பிவிட்டது என அறிவித்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்றுதான் முதலில் அரசு  அறிவித்தது.  ஆனால் மதிப்பிழந்த பழைய ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் திரும்ப வந்து விட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு 15.40 லட்சம் கோடி ரூபாய் வரை பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், அதில் 15.28 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. அப்படியானால் கறுப்புப் பணம் என கருதப்படும் ஊழல் பணம் என்ன ஆனது என்கிற கேள்வி எழுகிறது.

இந்த நடவடிக்கையின் தோல்வி குறித்து கேள்வி எழும்போதெல்லாம்  மற்றொரு காரணத்தை சொல்வதை மத்திய அரசு வழக்கமாக்கியுள்ளது. இப்போது நிதியமைச்சர் கூறுகையில்,  வருமான வரி வரம்புக்குள் பலர் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்கிறார். ஆனால் கடந்த ஆண்டு வெளியான மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், 10,600 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டது.

தவிர நாட்டில் வருமான வரி செலுத்தும் வருவாய் பிரிவினரை அறிவதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை தேவையில்லை என தணிக்கையாளர்கள் சங்கம் விரிவான புள்ளிவிவரங்களையும் வெளியிட்டது.

ரொக்கமில்லா பரிமாற்றம் உயரும் என்றும் மத்திய அரசு கூறிவந்தது. அதற்கான புள்ளிவிவரங்களும் அரசுக்கு சாதகமாக இல்லை. பணமதிப்பு  நீக்க நடவடிக்கையின் போது ரொக்கப் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தற்காலிக நிகழ்வாக பலரும் ஆன்லைன் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால், அதன் பின் நிலைமை  மாறி விட்டது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி இந்தியர்களின் ரொக்க சேமிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால், பணமதிப்பு நீக்கத்துக்காக பொதுமக்களும், வர்த்தகர்களும் கொடுத்த விலை அதிகம். நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் தவிர்த்தவர்கள் பலர், உயிரை விட்டவர்கள் சிலர். பல லட்சம் கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்குவது சாதாரண காரியமல்ல, வங்கி ஊழியர்கள் பெரும் உழைப்பை செலுத்தினர். 

மாதக்கணக்கில் இந்த சிக்கல் நீடித்தது. புதிய நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவு, புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை செய்ய செலவு, பிஓஎஸ் இயந்திரங்கள் என இந்த நடவடிக்கையை ஒட்டி மிகப் பெரும் கட்டமைப்பு செலவுகளும் வங்கிகளுக்கு கூடுதல் சுமையாக இருந்தன.

இந்தியா போன்ற கிராமப்புறங்கள் நிறைந்த, பல தரப்பு மக்கள் வாழும் நாட்டில்  ஒரே நாளில் பணத்தை செல்லாது என அறிவிக்க என்ன அவசரம் என்பதும் இப்போதும் புரியவில்லை. ஒட்டுமொத்தமாக பணமதிப்பு நீக்கத்துக்காக அரசு முன்வைத்த அனைத்து காரணங்களும் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை. அரசு தனது நடவடிக்கைகளை எப்போதுமே நியாயப்படுத்திக் கொள்ளக் கூடாது. தவறான பாதையில் விடாப்பிடியாய் செல்வது வளர்ச்சிக்கு நல்லதல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x