Published : 03 Jun 2019 10:39 AM
Last Updated : 03 Jun 2019 10:39 AM
உலகில் மிக அரிதான விலை உயர்ந்த வைரங்களில் கோஹினூர் வைரத்துக்கு அடுத்து இருப்பது கல்லினன் வைரம். அதனால்தானோ என்னவோ எத்தனையோ கார் நிறு
வனங்கள் பல வகையான எஸ்யுவிகள் சந்தையில் இருந்தாலும் வைரத்தைப் போல பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட, சொகுசு கார்களுக்கெல்லாம் ‘தாதா’வாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டிலிருந்து வரும் முதல் எஸ்யுவிக்கு கல்லினன் என்ற பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
இந்த கல்லினன் அனைத்துவிதமான டெரைன் சாலைகளுக்கும் ஏற்ற எஸ்யுவியாக உருவாக்கப்பட்டிருப்பதால், ஆஃப் ரோட் சாகசம் செய்ய முடியவில்லையே என்ற ரோல்ஸ் ராய்ஸ் பிரியர்களின் ஏக்கம் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது.
ஆஃப் ரோட் சாகசத்துக்கு கேபினின் சென்ட்ரல் கன்சோலில் உள்ள ‘எவ்ரிவேர்’ என்ற சிங்கிள் பட்டனை அழுத்தினால் போதும். அதேசமயம் சொகுசு மற்றும் வசதிகள் விஷயத்திலும் எஸ்யுவிகளிலேயே அல்டிமேட்டாக விளங்குகிறது.
இது ரோல்ஸ் ராய்ஸின் ‘ஆர்க்கிடெக்சர் ஆஃப் லக்சுரி’ அல்லது அலுமினியம் ஸ்பேஸ்பிரேம் என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றத்தைப் பொருத்தவரை ரோல்ஸ் ராய்ஸுக்கே உரிய கிரில், லோகோ மற்றும் ‘ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி’ ஹூட் ஆர்னமன்ட் போன்றவற்றின் பிளேஸ்மென்ட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.
அதேசமயம் எஸ்யுவி மாடலுக்காக ஹெட்லைட், ஏர் இன்டேக் மற்றும் பின்புற டெயில்லைட், ஸ்பாய்லர் மற்றும் எக்சாஸ்ட் போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெயில்லைட் வெர்டிகலாக அழகாக பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க பம்பர் காரின் தோற்றத்துக்கும் தாராளமான பூட் ஸ்பேஸுக்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு எக்சாஸ்ட் போர்ட்டும் டிஃபியூசரும் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் 12 சிலிண்டர் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 இன்ஜின் உள்ளது. இது வெறும் 1600 ஆர்பிஎம்மில் 563 ஹெச்பி பவரையும் 850 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இன்ஜின் எட்டு கியர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 5.2 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை அடையும். இது 5341 மிமீ நீளம் 2164 மிமீ அகலமும் கொண்டிருக்கிறது.
ரேஞ்ச் ரோவரைக் காட்டிலும் 150 மிமீ அதிக வீல் பேஸ் கொண்டது. இதன் 3295 மிமீ வீல் பேஸ் கல்லினனுக்கு கம்பீரத்தையும், அதிகபட்ச சொகுசையும் தருவதற்கு ஏற்ற வடிவமைப்புக்கு உதவியாக இருக்கிறது. சிக்னேச்சர் சூசைட் டோர், 22 அங்குல பெரிய டூயல் டோன் அலாய் வீல் ஆகியவை கல்லினன் அழகை மேலும் கூட்டுகிறது.
இன்டீரியரைப் பொறுத்தவரை டேஷ்போர்டு அந்த அளவுக்கு எந்த அளவுக்கு உபயோகப்படுத்த முடியுமோ உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கன்சோல் ஓட்டுநரின் வேலைகளை மிக எளிதாக்குகிறது. இருக்கைகள், டேஷ்போர்ட், கதவுகளின் பக்கவாட்டு அமைப்புகள் என அனைத்திலும் டூயல் டோன் லெதர் பினிஷிங் தரப்பட்டுள்ளது.
டேஷ்போர்டில் சில இடங்களில் மெட்டல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது டேஷ்போர்டுக்கு கூடுதல் பிரீமியம் லுக்கை தருகிறது. இருக்கைகள் பவர் அட்ஜஸ்ட்டட் வசதி மட்டுமல்லாமல் மசாஜ் ஆப்ஷனையும் கொண்டிருக்கின்றன.
ரம்மியமான சூழலில் இளைப்பாறவோ, சாப்பிடவோ வசதியாக பின்பக்க பூட் ஸ்பேஸில் எலெக்ட்ரிக் பவர் அட்ஜஸ்ட்டட் டெப்ளாயபிள் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நைட் விஷன் வசதி, பாதசாரிகள், விலங்குகளை எச்சரிக்கும் வசதி, 4 பானரோமிக் கேமரா வசதி, ஒய்ஃபை ஹாட்ஸ்பாட் வசதியுடன் ஹெட் அப் டிஸ்ப்ளே, 18 ஸ்பீக்கருடன் புதிய தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் இதில் உள்ளன.
பின் இருக்கைகள் பவர் அட்ஜஸ்ட்டட் என்பதால் முழுமையாக மடிப்பதன்மூலம் 560 லிட்டராக உள்ள பூட் ஸ்பேஸ் 1930 லிட்டராக அதிகரிக்கிறது. ஆல் வீல் டிரைவ், ஆல் வீல் ஸ்டியரிங் ஆகியவையும் இதில் இருக்கும் கூடுதல் அம்சங்களாகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.95 கோடி. ஆன் ரோட் விலை ரூ. 8 கோடியைத் தாண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT