Published : 10 Jun 2019 11:17 AM
Last Updated : 10 Jun 2019 11:17 AM

எல்லோர் வீட்டிலும் ஒரு ‘பப்பு’

பொதுத் தேர்தல் அரசியலைத் தாண்டிய ஒரு பாடத்தை நம் எல்லோருக்குமே கற்றுக்கொடுத்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. ராகுல் ஒரு முறை “என்னுடையது அரசியல் குடும்பம். இதனால் எனக்கு அரசியலில் நுழைவது எளிதாகிவிட்டது. இதுதான் இங்குள்ள பிரச்சினையே.

இந்தப் பிரச்சினையின் அடையாளமாகவே நான் என்னை பார்க்கிறேன்’ என்றார். காந்தி குடும்பத்தில் உச்சகட்ட செல்வமும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவருக்கு இந்த நாடு, இந்த மக்கள், இவர்களின் வாழ்க்கை, தன்னுடைய எதிரி யார், அவர் எப்படிப்பவர் என்பதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சோனியா காந்தியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் என்ன சொல்கிறார்களோ அதுவே அவருக்கு எல்லாம். அவருக்கு அரசியல் கைவராததற்கு இது ஒரு முக்கியக் காரணம். இன்னமும் சுயமாக எந்த ஒரு முடிவையும் அவரால் எடுக்க முடியவில்லை. (காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா முடிவு உட்பட). இதனால்தான் அவரை ‘பப்பு’ என்கிறார்கள்.

‘பப்பு’ ராகுல் காந்தியை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், யாரும் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அடிமட்டத்திலிருந்து, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் துயரத்தையும் வலிகளையும் தாங்கிக் கொண்டு எழுந்து நிற்கும் கதைகளைப் பின்னணியாகக் கொண்ட மோடி போன்றவர்களையே மக்கள் தலைவனாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். ஆனால், உண்மையில் தங்கள் பிள்ளைகளை மட்டும் ‘பப்பு’களாகவே உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

வீட்டை விட்டு வெளியே அருகில் உள்ள கடைக்குக் கூட தனியாக அனுப்புவதில்லை, எங்கு சென்றாலும் அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறோம்.

குழந்தைகளை தைரியமாக வளர்ப்பதைவிட அமைதியாக வளர்க்கவே இந்தச் சமூகம் அக்கறை காட்டுகிறது. பொருளாதாரத்துக்கும் குழந்தை வளர்ப்புக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. விஷயங்களை அணுகும் விதம், முடிவெடுக்கும் திறன் அனைத்துமே இன்றைய தலைமுறையினருக்கு புரியாத புதிராக இருக்கக் காரணம் அவர்கள் வளரும் விதம். இளைஞர்கள் பலரால் இன்று தங்களுக்கான படிப்பை, வேலையை, எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

திறமையை வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களுடைய உண்மையான திறமையை அறிந்துகொள்ளாமல் ஏதோ ஒன்றை அவர்கள் மீது திணிப்பதில்தான் அக்கறை காட்டுகிறோம். இதனால் பிள்ளைகளுக்கு பாதைகள் எளிதில் வசமாகிவிடுகின்றன. ஆனால், வெற்றி வசமாவதே இல்லை. காங்கிரஸின் கோட்டையான அமேதியில் ‘பப்பு’ கண்ட தோல்வியும் அத்தகையதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x