Published : 03 Jun 2019 10:46 AM
Last Updated : 03 Jun 2019 10:46 AM

ஜான் கூப்பர் வொர்க்ஸ் ‘மினி’ சொர்க்கம்

மினி பிராண்ட் கார்களில் ‘மினி’ சொர்க்கத்தை உணரலாம் என்றால் அது மிகையல்ல. மினி பிராண்ட் கார்களின் சிறப்பே இதன் அட்டகாசமான டிசைன்.

மிகச்சிறிய ஹேட்ச் கார்களாக இவை இருந்தாலும் இவற்றின் செயல்திறன், வசதிகள், ஸ்டைல் என அனைத்துமே தனித்துவமான கான்செப்ட்களைக் கொண்டிருப்பதே இவற்றின் சிறப்பு. சமீபத்தில் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் ஹேட்ச் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மினி கார்களைப் பொருத்தவரை எந்த வகையான சாலைகளாக இருந்தாலும் சரி கவலையே இல்லை. இந்தியா போன்ற நெருக்கடியான சாலைகளிலும் சிறப்பான டிரைவிங் அனுபவத்துக்கு உத்தரவாதம் இவற்றில் உண்டு.

மினி பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் சமீபத்தில் இணைந்துள்ளது ஜான் கூப்பர் வொர்க்ஸ். இதில் அமர்ந்து ஸ்டியரிங்கை பிடித்தால் அது உங்களை ஒரு ரேஸராகவே மாற்றிவிடும் அளவுக்கு அதன் ஆற்றல் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.  

இது சில்லி ரெட், எலக்ட்ரிக் ப்ளூ, எமரால்டு கிரே, மெல்ட்டிங் சில்வர், மிட்நைட் பிளாக், பெப்பர் ஒயிட், சோலாரிஸ் ஆரஞ்ச், ஸ்டார்லைட் ப்ளூ, தண்டர் கிரே மற்றும் ஒயிட் சில்வர் மற்றும் கிளாசிக் பிரிட்டிஷ் ரேசிங் க்ரீன் உள்ளிட்ட வண்ணங்களின் கலவையில் நவீன தோற்றத்துடன் கிடைக்கிறது.

இதில் 2.0 லிட்டர் ட்வின் பவர் டர்போசார்ஜ்டு நான்கு சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இது 231 ஹெச்பி பவரையும், 320 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 6.1 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை அடையக்கூடியது.

மேலும் இதன் ஷிஃப்ட் பெடல்களுடன் கூடிய 8 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ் ஸ்டெப்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இன்னும் மிருதுவான ஸ்போர்ட்டியான டிரைவை வழங்குகிறது.

கூப்பர் எஸ் மாடலைக் காட்டிலும் இதில் ரியர் வியூ கேமரா, ஹெட் அப் டிஸ்பிளே, ஹர்மான் கார்டன் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ ஹெட்லைட் மற்றும் வைப்பர், ஸ்போர்ட்ஸ் கியர்பாக்ஸ், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகள் கூடுதலாகக் கிடைக்கின்றன. இதன் ஸ்போர்ட்டியான 17 அங்குல ஸ்போக் லைட் அலாய் வீல்கள் டைனமிக் டிரைவிங் அனுபவத்தை உறுதி செய்வதாக உள்ளது.

இதன் பிரேக்கிங் சிஸ்டம், வேகத்தை மிக விரைவாக மாற்றும் போதும், மிக நெருக்கமான வளைவுகளில் திரும்பும் போதும் அதிகபட்ச பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேர்த்தியாக செயலாற்றுகின்றன.

ஜான் கூப்பர் வொர்க்ஸ் ஹேட்ச் மாடலில் ஆப்ஷனலாக பனோரமா கிளாஸ் ரூஃப் அம்சமும் வழங்கப்படுகிறது. இதன் விற்பனையக விலை ரூ.43.50 லட்சம். இது கூப்பர் எஸ் மாடலைக் காட்டிலும் ரூ.9.30 லட்சம் அதிக விலை ஆகும். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x