Published : 17 Jun 2019 10:56 AM
Last Updated : 17 Jun 2019 10:56 AM

ஆயுள்தண்டனைக்கு ஆளான தொழிலதிபர்

ஒரு விநாடியில் ஏற்பட்ட தவறான மன ஓட்டம், ஒரு தொழிலதிபரை ஆயுட்கால சிறைவாசத்துக்கு இட்டுச் சென்றுவிட்டது, அதுவும் சாகும் வரை சிறைத்தண்டனை என்றால் நம்ப முடிகிறதா?

தங்க நகை வர்த்தகத்தில் பாரம்பரியமான குடும்பம். அப்பா ஆரம்பித்து வைத்த நகைக் கடை அதுவும் மும்பையின் பிரதான வர்த்தக பகுதியான ஜவேரி பஜாரில். கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம், வழக்கம்போல படிப்பு முடிந்த பிறகு தொழிலில் இறங்கியவுடன் திருமணம்.

தங்க நகை வர்த்தகம் தவிர்த்து தனியாக ரியல் எஸ்டேட் தொழில். அதிலும் பெரிய நெருக்கடி கிடையாது. அமைதியான, செழிப்பான குடும்பம். இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த பிர்ஜு கிஷோர் சல்லா-வுக்கு என்ன நேர்ந்தது?

விமான கடத்தலைத் தடுக்க 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்கீழ் கைதாகி, வாழ்நாள் சிறைதண்டனையை பெற்ற முதலாமவர் என்ற பட்டம்தான் இப்போது பிர்ஜு-வுக்கு சொந்தம்.

டெல்லிக்கும், மும்பைக்கும் தொழில் நிமித்தமாக பயணம். அடிக்கடி உயர் வகுப்பில் பயணிக்கும் தங்கள் நிறுவன வாடிக்கையாளர் என்ற அந்தஸ்தை இவருக்கு வழங்கியிருந்தது ஜெட் ஏர்வேஸ். 2017-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மும்பையிலிருந்து, டெல்லிக்கு பயணம்.

அந்த பயணம்தான் இவரது வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியமைத்துவிட்டது. விமான நிலையத்துக்குள் நுழைந்தவுடன், ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 2 பேர் இவரை மரியாதையோடு அழைத்துச் சென்றனர். இவருக்கு அன்றைய பயணத்தில் ஒதுக்கப்பட்டிருந்ததோ 1-டி இருக்கை.

உள்ளே அமர்ந்தவுடன் ஊழியரிடம் போர்வை கேட்கிறார். அதை எடுக்கச் செல்கிறார் ஷிவானி மல்ஹோத்ரா என்ற பெண் ஊழியர். அதற்குள்ளாக கழிப்பறைக்கு சென்று திரும்புகிறார் பிர்ஜு. இருக்கையில் பிர்ஜு இல்லாததால் போர்வையை அங்கேயே வைத்துவிட்டு சென்று விடுகிறார் ஷிவானி.

கழிப்பறையில் இருந்த பிர்ஜு, அங்கிருந்த டிஷ்யூ பாக்ஸில் ஒரு பேப்பரை சொருகிவிட்டு இருக்கைக்கு திரும்புகிறார். பின்னர் மற்றொரு பெண் ஊழியரான நிகிதா ஜொனேஜாவிடம் மேலும் ஒரு போர்வையைக் கேட்கிறார் பிர்ஜு. பிறகு மீண்டும் கழிப்பறைக்கு சென்று அங்கிருந்து வெளியே வந்த பிர்ஜு, டிஷ்யூ பாக்ஸிலிருந்து பேப்பர் வரவில்லை என கூறுகிறார்.

இதைக் கேட்ட ஊழியர் ஜொனேஜா உள்ளே சென்று மற்றொரு பாக்ஸை எடுத்துத் தருகிறார். கழிப்பறையில் உள்ள பெட்டியை எடுத்துச் சென்று பார்த்தபோது அதில் ஒரு கடிதம் இருந்ததைப் பார்க்கிறார்.

அதில் விமானத்தை கடத்தப் போவதாகவும் 12 கடத்தல் காரர்கள் விமானத்தில் பயணிப்பதாகவும், விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு செலுத்த வேண்டும் என்றும், தவறினால் விமான சரக்குப் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருப்பதாகவும், அதை வெடிக்கச் செய்யப் போவதாகவும் எழுதப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து பதட்டமடைந்த அவர், அந்தக் கடிதத்தை விமான பைலட்டிடம் காட்டுகிறார். விமான பைலட்டோ, பயணிகளிடம் சில தொழில்நுட்ப காரணங்களுக்காக அகமதாபாத்தில் தரையிறக்கப் போவதாகக் கூறி விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார்.

விமானம் தரையிறங்கியபிறகுதான் விமானத்திலிருந்த கடத்தல் நாடகம் பயணிகளுக்கு தெரிய வந்தது. விமானத்தை சோதித்துப் பார்த்ததில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை. இந்த வழக்கை போலீஸார் தேசிய பாதுகாப்பு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைத்துவிட்டனர்.

கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது யார் என என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்ததில் அது வேறு யாருமல்ல, நகை அதிபர் பிர்ஜு குமார் கிஷோர் என்பது தெரியவந்தது. இவரைக் காட்டிக் கொடுத்தது, அந்த கடிதம் மட்டுமே. ஏ4 தாளில் தெளிவாக அச்சிடப்பட்ட அந்தக் கடிதம் இவரது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, இவர் அலுவலக பிரின்டரில் பிரதி எடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டது.

சரி, ஏன் இப்படி செய்தார் பிர்ஜு. வேறு ஒன்றும் அல்ல, ஜெட் ஏர்வேஸில் பணியாற்றும் அவரது பெண் நண்பர் டெல்லி கிளையில் பணியாற்றுகிறார். ஜெட் ஏர்வேஸ் டெல்லி அலுவலகத்தை மூடிவிட்டால் அவர் மும்பைக்கு மாற்றப்பட்டுவிடுவார் என்பதால் இதைச் செய்தாராம்.

அதை அவரே விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு கண நேர ஓட்டம், சிறிய சபலம், ஒரு தொழிலதிபரின் வாழ்க்கையை எப்படி மாற்றிவிட்டது பார்த்தீர்களா? எவ்வளவு பணம் இருந்து என்ன பயன். குணம் மாறியதால், எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது. நற் சிந்தனைகள், நல்ல போதனைகள் அருகி வருவதன் வெளிப்பாடுதான் வசதி படைத்தவர்களையும் இப்படி குரூரமாக சிந்திக்கத் தூண்டுகிறது என்பதற்கு பிர்ஜு கிஷோர் சல்லா ஒரு உதாரணம்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x