Published : 27 May 2019 11:13 AM
Last Updated : 27 May 2019 11:13 AM
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ‘பாகுபலி’ போல பிரமாண்டமாகக் களம் இறங்கியிருக்கிறது எம்ஜி ஹெக்டார். மிட் சைஸ் எஸ்யுவி செக்மன்ட்டில் சந்தையிலேயே முதன்முறையாகப் பல புதிய அம்சங்களுடன் வந்திருப்பது போட்டி நிறுவனங்களையெல்லாம் மிரட்டுகிறது.
முக்கியமாக ஹெக்டாரின் டிசைன் இந்தியக் கார் சந்தைக்கே சவால் விடக் கூடியதாக உள்ளது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் கனெக்டட் காராகவும் வந்துள்ளது எம்ஜி ஹெக்டார்.
ஹெக்டாரின் ஒவ்வொரு அங்குலமும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டதுபோல் உள்ளது. எக்ஸ்டீரியரைப் பொருத்தவரை ஸ்கேலிங்கில் அப்படியொரு யுனிஃபார்மிட்டி தெரிகிறது.
ஒவ்வொரு கார்னரும், ஒவ்வொரு லைனிங்கும் அப்படியொரு ஃபினிஷிங். மெட்டீரியல் பயன்படுத்தப்பட்ட விதம்தான் காருக்கு கம்பீரத்தைக் கூட்டுகிறது. இதன் வடிவமைப்பு F35 போர் விமானத்திலிருந்து இன்ஸ்பயர் ஆகி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளைவு நெளிவுகள் இல்லாமல் முகப்பிலிருந்து பக்கவாட்டு கண்ணாடிகள் அனைத்தும் காரின் இறுதி முனை வரை ஒரே நேர்க்கோட்டில் உள்ளது முற்றிலும் புதிது. காரின் செங்குத்தான முன்பகுதியில் உள்ள அழகான குரோம் ஃபினிஷ் காஸ்கேட் கிரில் அமைப்பும், அதில் எம்பார்ஸ் செய்யப்பட்ட எம்ஜி லோகோ பேட்ஜ் சில்வர் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டிருப்பது காருக்கு கம்பீரத்தைக் கொடுக்கிறது.
எஸ்யுவிகளில் பரவலாகப் பின்பற்றப்படும் பம்பர் லைனுக்கு சற்றுகீழே அமைக்கப்படும் ஹெட்லைட் இந்த ஹெக்டாரில் மிக அழகாகப் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு மேலே எல்இடி டிஆர்எல், இண்டிகேட்டர் லைட்டாகவும் மாற்றப்பட்டுள்ளது. இண்டிகேட்டர் லைட்டிங் ஃப்ளோட்டிங் ஆவதுபோல் ஒளிரும் விதமும் அழகு.
டைமண்ட் கட் அலாய் வீல் காரின் தோற்றத்துக்கு ஏற்ப இல்லாமல் அளவில் சிறியதாக இருப்பது காரின் தோற்றத்தை மேலும் அழகாக்கும் வகையில் உள்ளது. டயருக்கு மேலே உள்ள ஓவர்ஹாங் அமைப்பு பெரிதாக, அதே சமயம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
காரின் உட்புறத்தைப் பொருத்தவரை ஃபைபர் மற்றும் லெதர் கலவையில் உள்ளது. ஃபைபர் முழுக்க பக்கா மேட் ஃபினிஷிங்கில் லெதருக்கு நிகரான லுக் தருகிறது.
இருக்கைகள் அனைத்துமே அல்டிமேட் கம்ஃபோர்ட்டுடன் உள்ளன. ஓட்டுநர் இருக்கையில் பவர் அட்ஜஸ்ட்டபிள் வசதி இருப்பதால் எளிதில் அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். உள்ளே அமர்ந்து பார்க்கும்போது அதிக அளவிலான கிளாஸ் ஏரியாவை உணர முடிகிறது. இதனால் சாலையை மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
கூரையில் தரப்பட்டுள்ள பானரோமா சன்ரூஃப் எல்லா இருக்கையில் இருப்போருக்கும் ரம்யமான பயண அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது. இதுபோக உட்புறத்தில் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், எட்டு வகையான வண்ணங்களில் ஒளிரும் மூட் லைட்டிங்ஸ் ஆகியவையும் உள்ளன. பக்கவாட்டு கதவு, சென்ட்ரல் கன்சோல், போன்றவையும் நன்றாகவே யுடிலைஸ் செய்யப்பட்டுள்ளன.
கேபினில் ஆச்சரியப்படத்தக்க ஒரு விஷயம் டேஷ்போர்ட். இன்றைய தலைமுறைக்கு நடக்கும்போது உட்காரும்போது ஓடும்போது ஏன் வாகனம் ஓட்டும்போதுகூட இன்டர்நெட் கேட்கிறார்கள். ஹெக்டாரில் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது எனலாம்.
இதன் i-smart next gen இன்டர்நெட் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் 5ஜி ரெடி அம்சத்துடன் உள்ளது. இதில் ஒய்ஃபை மற்றும் இன்பில்ட் சிம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் அழகாகப் பொருத்தப்பட்டுள்ள 10.4 அங்குல பெரிய தொடுதிரையின் மூலம், மியூசிக், வீடியோ, வானிலை, ஜிபிஎஸ் நேவிகேஷன், காலிங் வசதி மற்றும் இணையதள வசதி என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் கனெக்டிவிட்டி மூலம் மொபைல் மூலமாகவே வாகனத்தின் ஏசி கன்ட்ரோல், டோர் லாக் மற்றும் அன்லாக் உள்ளிட்டவற்றை இயக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேல் இந்த செயல்பாடுகள் அனைத்தையும் வாய்ஸ் ரெக்கக்னிஷன் மூலம் செயல்படுத்தும் வசதியையும் இந்த i-smart next gen கனெக்டிவிட்டி வழங்குகிறது.
ஹெக்டாரின் அளவு 4655 மிமீ நீளம், 2750 மிமீ அகலம். மிட் சைஸ் எஸ்யுவி செக்மன்ட்டில் அதிக வீல் பேஸ் கொண்டதாக எம்ஜிஹெக்டார் இருப்பதால் காரின் உட்புறத்தில் மிக தாராளமான இடவசதியை அனுபவிக்க முடிகிறது. எந்த இருக்கையில் அமர்ந்தாலும் சுகானுபவமான பயணத்துக்குக் குறைவிருக்காது.
இந்த விஷயத்தில் உயரமோ, பருமனோ பெரிதாக வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை. பூட் ஸ்பேஸும் இந்த செக்மன்ட்டில் ஹெக்டாரில்தான் (587 லிட்டர்) அதிகம் என்று சொல்லலாம். பின்பக்க இருக்கையை 60:40 என்ற அளவில் எளிதில் மடிக்கும் வசதியையும் கொடுத்துள்ளது. பின்பக்க டிக்கி கதவை இயக்க பவர் வசதி தரப்பட்டுள்ளது.
இன்ஜினைப் பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், ஃபியட்டின் 2 லிட்டர் டர்போ டீசல் என இரண்டு வேரியன்ட்களில் ஹெக்டார் வரவுள்ளது. பெட்ரோல் வேரியன்ட் 143 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
டீசல் வேரியன்ட் 170 பிஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே. இரண்டுமே பிஎஸ் IV தர இன்ஜின்கள்தான். அதேசமயம், பெட்ரோல் மாடலில் 48V மைல்ட் ஹைபிரிட் எஸ்யூவி வேரியன்ட்டும் எதிர்காலத்தில் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பைப் பொருத்தவரை ஏபிஎஸ் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், பின்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், 360 டிகிரி கேமரா, ஹீட்டட் மிரர், டயர் காற்றழுத்தத்தை அளவிடும் மானிட்டர் எனப் பல்வேறு அம்சங்கள் ஹெக்டாரில் உள்ளன. மேலும் எல்லா இருக்கைகளுக்கும் 3 பாய்ன்ட் சீட் பெல்ட்டுகள் தரப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேல் எம்ஜி ஹெக்டார் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு மாடலாக, 5 நிறங்களில் ஜூன் மாதம் முதல் சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த காரின் விலை ரூ.15-20 லட்சம் என்ற வரம்பில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT