Published : 06 May 2019 11:23 AM
Last Updated : 06 May 2019 11:23 AM

வெனிசுலாவும் மாம்பழமும்...

தலைப்பைப் பார்த்தவுடன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதைப் போலிருக்கும். ஆனால், பஞ்சம், பட்டினி போன்ற நரக வேதனையில் தவிக்கும் வெனிசுலா மக்களுக்கும், முக்கனிகளில் முதல் கனியாகத் திகழும் மாம்பழத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

பொருளாதார வீழ்ச்சியால் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் திண்டாடும் நிலையில்தான் லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா வாழ் மக்கள் உள்ளனர். ஏறக்குறைய 9 ஆண்டுகளாக அந்நாட்டில் பொருளாதாரம் மோசமாக உள்ளது.

இன்னும் நிலைமை சீரடையவில்லை. எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் உணவுப் பற்றாக்குறை தாண்டவமாடுகிறது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 3.20 கோடி.

அதாவது தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதி அளவுதான். ஆனால், 90 சதவீதம் பேர் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உணவுப் பற்றாக்குறையால் 75 சதவீதம் பேர் 8 கிலோ எடை குறைந்துள்ளனர். 50 சதவீதம் பேர் உணவுக்காக பிச்சையெடுக்கின்றனர்.

இவர்களுக்கு இப்போது மிகப் பெரும் நிவாரணமாக இருப்பது மாம்பழம்தான். இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் தினசரி மாம்பழத்தை சாப்பிட்டுத்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

இவர்கள் மாம்பழத்தை ”கூச்சல் குறைப்பான்’’ என்று அழைக்கின்றனர். ஆம், பசிக் கொடுமையால் போராட்டத்தில் இறங்குபவர்களுக்கு பசியாற உதவுபவை மாம்பழங்களே. மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் மாம்பழங்கள் பலரது பசியைப் போக்க உதவுவதாக கல்லூரி பேராசிரியர் மாராசைபோ என்பவர் தெரிவிக்கிறார்.

கல்லூரியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், கீழே விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்துச் செல்ல அனுமதி கேட்கும்போது, அவர்களை எப்படி அனுமதிக்காமலிருக்க முடியும். பல நாட்கள் தனக்கே மாம்பழம்தான் காலை உணவாக, சில சமயங்களில் நாள் முழுவதற்கும் மாம்பழமே உணவாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

மக்களின் பசியைப் போக்குவதால் இப்போதெல்லாம் மாம்பழம் வெனிசுலா மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. இங்குள்ள அறக்கட்டளை 600 குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இலவச உணவுகளை வழங்குகிறது. பல சமயங்களில் அவர்களுக்கு மாம்பழமும் உணவாக அளிப்பதாக அறக்கட்டளை நிர்வாகி மாரிட்ஸா டே ஜிமெனெஸ் தெரிவிக்கிறார்.

உணவு கிடைக்காத சமயங்களில் குழந்தைகளுக்கு மாம்பழங்களைத்தான் உணவாக அளித்து அவர்களின் பசியைப் போக்குவதாக அவர் தெரிவித்தார். வெனிசுலாவில் பொது இடங்களில் மாமரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து விழும் பழங்களை மக்கள் பயன்படுத்த தடை கிடையாது.

இதனால் பல சமயங்களில் மக்களின் பசியைப் போக்க இவை உதவுகின்றன. தனியார் நிலங்களில் உள்ள மாமரங்களில் கிடைக்கும் பழங்களையும் உரிமையாளர்கள் காசாக்க விரும்புவதில்லை. அவற்றையும் மக்கள் எடுத்து சாப்பிட அனுமதிக்கின்றனர்.

ரமோன் அரேனஸ் மொரேல்ஸ் எனும் 81 வயது முதியவர் தனது வீட்டு தோட்டத்தில் பழுத்த மாம்பழங்களை தினசரி ஒரு பையில் சேகரித்து அதை தனது வீட்டு வாசலில் தொங்க விடுகிறார். அவ்வழியாக செல்வோர், பள்ளிக் குழந்தைகள் அவற்றை எடுத்து சாப்பிடும் வகையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

பசி, பட்டினி, வறுமை, பொருளாதார வீழ்ச்சி என பல கொடுமைகள் தொடர்ந்தாலும் இன்னமும் மனித நேயம் அங்கு மக்களிடையே இருப்பதையே இது உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x