Published : 01 Apr 2019 11:22 AM
Last Updated : 01 Apr 2019 11:22 AM

ஹாரியருக்கு அடுத்து டாடா பஸ்ஸார்டு

டாடா மோட்டார்ஸ் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு கார் பிரியர்களைத் திக்குமுக்காட செய்துவருகிறது. கடந்த சில மாதங்களில் தொடர்ந்து புதிய கார்களின் அணிவகுப்புகளால் டாடா நிறுவனம் ஆட்டோமொபைல் சந்தையில் தீவிரமாக இருப்பதை உறுதி செய்துள்ளது. ஜெனீவா மோட்டார் ஷோவில் நான்கு புதிய கான்செப்ட் கார்களுடன் கலக்கிய டாடா விரைவில் அவற்றை சந்தைக்குக் கொண்டுவருவதிலும் தீவிரமாக உள்ளது.

ஹெச் 5 எக்ஸ் மாடலை ஹாரியர் என்ற பெயரில் ஏற்கெனவே சந்தையில் அறிமுகப்படுத்திவிட்டது. இந்த எஸ்யுவி மாடலுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. ஹாரியரைத் தொடர்ந்து ஆல்ட்ரோஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து டாடாவின் ஹெச் 7 எக்ஸ் கான்செப்ட் காரின் பெயரையும் வெளியிட்டது.

சமீபத்தில் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட பிரீமியம் எஸ்யூவி ஆன டாடா பஸ்ஸார்டு இந்தியாவிலும் இதே பெயரில் அறிமுகமாகுமா என்பது தெளிவில்லாமல் உள்ளது. ஆனால், இந்த எஸ்யுவியை டாடாவின் கார்களிலேயே விலை அதிகமான காராக உருவாக்கப்பட உள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும் ஹாரியர் காரைப் போலவே பிரபலமான ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்பட உள்ளது.

பஸ்ஸார்டுக்கும் ஹாரியருக்கும் வீல்பேஸ் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஏழு பேர் அமரக்கூடிய வகையில் ஹாரியரை விட பஸ்ஸார்டு சற்று பெரிய காராகவே இருக்கும். இதன் அளவுகள் 4,661 மிமீ நீளம்/ 1,894 மிமீ அகலம்/1,786 மிமீ உயரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பஸ்ஸார்டிலும், ஹாரியர் காரில் உள்ள அதே 2.0 லிட்டர் கிரையோடெக் டர்போ டீசில் இன்ஜின்  தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது. 

2019 இறுதிக்குள் டாடாவின் ஆல்ட்ரோஸ் காரும், அதைத் தொடர்ந்து சில மாதங்களில் டாடா பஸ்ஸார்டும் இந்தியச் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த டாடா பஸ்ஸார்டு எம்ஜி ஹெக்டார், மஹிந்திரா எக்ஸ்யுவி 500 ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x