Published : 04 Mar 2019 11:14 AM
Last Updated : 04 Mar 2019 11:14 AM
உலகமே எதிர்பார்க்கும் கண்காட்சிகளில் ஒன்று ஜெனீவா மோட்டார் கண்காட்சி. இந்தக் கண்காட்சியில் உலகம் முழுவதுமுள்ள ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய தொழில்நுட்பங்கள், வடிவமைப்புகளுடனான அட்டகாசமான கார்கள் அணிவகுத்து நிற்கும். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ள கார்களின் கான்செப்டுகளும் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு வரும் மார்ச் 5-ம் தேதி இந்த ஜெனீவா மோட்டார் கண்காட்சி நடக்க உள்ளது. இது 89-வது கண்காட்சி ஆகும். இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு கலக்கப் போகும் சில கார்களைப் பற்றி பார்க்கலாம்.
பிஎம்டபிள்யு 7 பேஸ்லிஃப்ட் வெர்ஷன்
பிரீமியம் செடான் மற்றும் எஸ்யுவி கார்களில் பிரபல பிராண்டான பிஎம்டபிள்யு இந்த கண்காட்சியில் தனது மற்ற கார்களுடன் சேர்த்து புதிய 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையும் காட்சிப்படுத்த உள்ளது. இதன் வடிவமைப்பு மிக ஸ்டைலிஷாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் காரின் உட்புறத்தில் பயன்படுத்தப்படும் மெட்டீரியல்கள் போன்றவை மிகவும் மேம்பட்டவையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
காரின் ஒவ்வொரு அங்குலமும் பார்த்துப்பார்த்து இழைக்கப்பட்டது போன்ற ஒரு ஃபினிஷிங் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல், டீசல் வெர்ஷன்களோடு சேர்த்து ஹைபிரிட் வெர்ஷனும் கூடவே வி12 இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது.
ஸ்கோடா காமிக்
இதுவரை செடான், ஹேட்ச்பேக் கார்களை மட்டுமே உருவாக்கி வந்த ஸ்கோடா தற்போது எஸ்யுவியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இந்த ஸ்கோடா காமிக் தான் ஸ்கோடாவின் என்ட்ரி லெவல் எஸ்யுவி. ஸ்கோடா எப்போதுமே டிசைனில் அட்டகாசம் காட்டும். தூரத்தில் வரும்போது வருவது ஸ்கோடாவா பிஎம்டபிள்யுவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அல்ட்ரா பிரீமியம் லுக் இதில் இருக்கும். இது விஷன் எக்ஸ் கான்செப்டிலிருந்து இன்ஸ்பயர் ஆகி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் ஹெட்லைட் ஸ்பிளிட் டைப்பில் உள்ளது. சற்று அகலமான முன்பக்க கிரில், அதில் மெல்லிய கோடுகள் என வித்தியாசமான லுக்குடன் உள்ளது. உட்புறத்தில் ஸ்காலா ஹேட்ச்பேக் காரில் இருப்பது போலவே, டச் ஸ்கிரீன், கை வைக்கும் ஷெல்ஃப், சென்டர் கன்சோல் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்ஜினைப் பொருத்தவரை டர்போ பெட்ரோல், டர்போ டீசல் இன்ஜின்கள் உள்ளன.
டாடா அல்ட்ரோஸ்
கடந்த வாரம் வரை 45 எக்ஸ் என்று தற்காலிக பெயருடன் இருந்த ஹேச்ட்பேக் காருக்கு டாடா அல்ட்ரோஸ் என பெயர் வைத்திருக்கிறது. இந்தக் கார் ஏற்கெனவே பெரிய எதிர்பார்ப்பை கார் பிரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இதன் புரொடக்ஷன் ரெடி கார் விரைவிலேயே சந்தைக்கு வர உள்ளது. இதில் 1.2 லிட்டர் டர்போ மற்றும் டர்போ அல்லாத பெட்ரோல் இன்ஜின்கள் உள்ளன. டீசல் இன்ஜின் குறித்த தகவல்கள் உறுதிபடுத்தப்படவில்லை.
பினின்ஃபரினா பட்டிஸ்டா
மஹிந்திராவுக்குச் சொந்தமான பினின்ஃபரினா தனது முழுமையான எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை இந்த ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. பட்டிஸ்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கார் ஆல்-வீல் டிரைவ் கார் எனக் கூறப்படுகிறது. இரண்டு சீட்டர் மட்டுமே உள்ள இந்தக் கார் 1900 ஹெச்பி பவரும், 2300 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனுடையது. 100 கிமீ வேகத்தை இரண்டு விநாடிகளில் அடையும் திறன் கொண்டது என்றும் சொல்கிறார்கள். 300 கிமீ வேகத்தை 12 விநாடிகளில் அடைந்துவிடலாம்.
சாங்யாங் கொராண்டோ
சாங்யாங் நிறுவனத்தின் டிவோலி மற்றும் ரெக்ஸ்டான் மாடல் கார்களுக்கு இடைப்பட்ட எஸ்யுவிகாராக இந்த கொராண்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான டிசைன் 2016 ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகமான எஸ்ஐவி 2 கான்செப்ட்டிலிருந்தும் மற்றும் ரெக்ஸ்டான் காரிலிருந்தும் இன்ஸ்பயர் ஆகி உருவாக்கப்பட்டுள்ளது. நடுவில் பெரிய டச் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை பட்டன்களுக்கான தேவையைக் குறைத்துவிட்டன.
இதனால் உட்புற வடிவமைப்பில் இந்த எஸ்யுவி கிளட்டர்-ஃப்ரீ டேஷ்போர்டுடன் அசத்துகிறது. இதில் 1.6 லிட்டர் டீசல் மற்றும் முழு எலெக்ட்ரிக் மாடலும் உள்ளது. இவைதவிர இந்த ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ள கார்களின் கான்செப்டுகளும் அறிமுகமாகின்றன.
குறிப்பாக, டாடாவின் ஹார்ன்பில் மைக்ரோ எஸ்யுவி கான்செப்ட், டாடா ஹெச்7எக்ஸ் கான்செப்ட், டாடா 45எக்ஸ் இவி கான்செப்ட், ஸ்கோடா விஷன் iV கான்செப்ட், கியா மோட்டார்ஸின் பெர்பாமென்ஸ் இவி கான்செப்ட் ஆகிய கான்செப்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT