Published : 25 Mar 2019 11:54 AM
Last Updated : 25 Mar 2019 11:54 AM
மக்களுக்கான நலத்திட்ட விஷயங்களை, ஒருமுறைக்கு நூறு தடவை ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னரே செயல்படுத்தும் அரசு, மக்களிடமிருந்து பணம் வசூலிக்கும் திட்டம் என்றால் மட்டும் விதிபோட்ட அடுத்த விநாடியே அமல்படுத்த நினைப்பது ஏன் என்று புரியவில்லை.
தற்போது வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அளித்து வரும் மானியத்தைக் குறைப்பது குறித்து பெட்ரோலிய அமைச்சகம் நிதி அமைச்சகத்துடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இது உண்மையானால், அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அளித்துவரும் மானியத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கடைசியில் சந்தை விலைக்கே வாங்கும் நிலைக்கு மக்களைத் தள்ளிவிடும்.
2015-16-ம் நிதி ஆண்டில் எல்பிஜிக்கு அளிக்கப்பட்ட மானியத் தொகை ரூ. 16,056 கோடி மட்டுமே. ஆனால், இது தற்போது ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டில் ஒரு சிலிண்டருக்கு அரசு அளித்த மானியம் ரூ.108.78. ஆனால், இது தற்போது ரூ.219 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என பெட்ரோலிய அமைச்சகம் நிதி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு பரிந்துரைகளையும் கொடுத்துள்ளது.
தற்போது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை உள்ளவர்களுக்கு சிலிண்டர் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை என மாற்ற என அரசு பரிசீலித்து வருகிறது. அடுத்து கார் வைத்துள்ளவர்களின் குடும்பத்துக்கு சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யலாம் என்பது குறித்தும் பரிசீலித்து வருகிறது.
மேலும், ஆண்டுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12-லிருந்து 8-ஆகக் குறைக்கவும் அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
பாஜக அரசு சிலிண்டர் இணைப்பு எல்லோருக்கும் கிடக்கும் வகையிலான உஜ்வாலா திட்டத்தைக் கொண்டுவந்தது. இதற்காக, பணவசதி படைத்தவர்கள் தாங்கள் பெற்றுவந்த சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுக்க கேட்டுக்கொண்டது.
மேலும், ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிலிண்டர் மானியம் இல்லை என கூறப்பட்டது. மேலும், மானியத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தும் முறையைக் கொண்டுவந்ததன் மூலம், போலி பயனாளிகள் பலர் நீக்கப்பட்டனர்.
இதுபோன்ற பல நடவடிக்கைகள் எடுத்த பின்னரும், மானியத் தொகை அதிகரிக்கிறதே என்று கவலைப்படுகிறது அரசு. இதற்கு ஒருவகையில் சிலிண்டரின் விலை அதிகரிப்பும் ஒரு காரணம். அதேசமயம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒருபுறம் பெட்ரோலிய துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், எல்பிஜி மானியம் அதிகரித்ததில் அரசின் உஜ்வாலா திட்டத்துக்கும் பங்கு உள்ளது.
2015-ம் ஆண்டில் எல்பிஜி இணைப்பு எண்ணிக்கை 14 கோடி. ஆனால், இது தற்போது 26 கோடியாக அதிகரித்துள்ளது. இவை பெரும்பாலும் நடுத்தர, ஏழை குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பெண்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த கொண்டுவரப்பட்டதே உஜ்வாலா திட்டம். திட்டமும், திட்டத்தின் நோக்கமும் சரி. ஆனால், அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டாமா?
மானிய விலையில் சிலிண்டர் இணைப்புகளைக் கொடுப்பதுபோல் கொடுத்து, போகப்போக மானியத்தைக் குறைப்பது என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. பெரிய அளவிலான பொருளாதார ஏற்ற் தாழ்வுகள் நிலவும் இந்தியாவில் இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, அதற்கான மானிய உதவிகளை படிப்படியாகக் குறைப்பது என்பது ஏழை மக்களுக்கு இதன் மூலம் கிடைத்து வந்த பலன் தொடர்ந்து கிடைக்காமல் போகச் செய்துவிடும்.
மேலும், மாதாந்திர சம்பளதாரர்களைப் பாதிக்கும் இதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையும் மிகப் பெரும் அதிர்வலையைத்தான் தோற்றுவிக்கும். அரசு முடிவு எடுப்பதற்கு முன் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT