Published : 25 Feb 2019 10:55 AM
Last Updated : 25 Feb 2019 10:55 AM

புதிய தலைமுறைக்கான ஹோண்டா சிவிக்

செடான் கார்களில் பெரும்பாலானோரின் விருப்பமான காராக இருந்தது ஹோண்டா சிவிக். 2007 முதல் 2012 வரை ஹோண்டா சிவிக் சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அதன் பிறகு அதன் அடுத்த தலைமுறை வெர்ஷனை ஹோண்டா நிறுவனத்திலிருந்து எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர் கார் பிரியர்கள்.

ஆனால் 2012-க்குப் பிறகு அதுகுறித்த எந்த அறிகுறியும் இல்லை. செகண்ட் ஹேண்ட் கார் சந்தையில் கூட ஹோண்டா சிவிக்கின் ரீசேல் வேல்யூ மிகவும் சிறப்பாகவே இருந்தது. அந்த அளவுக்கு விருப்பமான ஹோண்டா சிவிக், 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தற்போது பல்வேறு புதிய அம்சங்களுடன், கூடுதல் அழகுடன் சந்தையைக் கலக்க வருகிறது.

ஹோண்டாவின் செடான் மாடல்கள் பெரும்பாலும் ரொம்பவே ஃபார்மலாக பிரீமியம் லுக்குடன் இருக்கும். ஆனால், 2019-ல் அறிமுகமாகும் சிவிக் மாடல் ஸ்போர்ட்டி லுக் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெல்லிய எல்இடி ஹெட்லைட், பெரிய தடிமனான குரோம் கிரில், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல், பின்பக்க சி வடிவ டெயில் லைட் ஆகியவை காருக்கு ஸ்போர்ட்டியான லுக்கை தருகின்றன.

வெளிப்புறம் ஸ்போர்ட்டியாக இருந்தாலும் உட்புறத்தில் பாதி எக்ஸிகியூட்டிவ் லுக்கும், பாதி ஸ்போர்ட்டி லுக்கும் கலந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காரில் ஸ்டோரேஜ் வசதிகள் அதிகம் தரப்பட்டுள்ளன. கிளவ் பாக்ஸ், டோர் பாக்கெட் மற்றும் பாட்டில் ஹோல்டர் ஆகியவை பெரிதாக உள்ளன. லிவர் ஹேண்ட் பிரேக் எலெக்ட்ரானிக்காக மாற்றப்பட்டிருப்பதால், முன்பக்க சீட்டுகளுக்கு இடையில் அதிக இட வசதி கிடைக்கிறது. இதனால் பொருட்களின் ஹேண்ட்லிங் எளிதாக இருக்கிறது. பெரிதாக சிரமப்பட வேண்டியதில்லை.

டூயல் டோன் கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் தரப்பட்டுள்ளன. ஆனால், டெம்பரேச்சர், எரிபொருள் அளவு காட்டும் காஜ் ஆகியவை மட்டும் அனலாக் டைப்பில் தரப்பட்டுள்ளன. சன்ரூஃப் இருப்பது காருக்கு கூடுதல் சிறப்பு. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், காரை லாக் செய்ய மறந்துவிட்டால் ஆட்டோலாக் ஆகும் வசதி ஆகியவையும் இதில் உள்ளன.    

இன்ஜினைப் பொருத்தவரை புதிய சிவிக் மாடலில் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் தரப்பட்டுள்ளது.

முந்தைய சிவிக் மாடலில் டீசல் ஆப்ஷன் இல்லை. இதில், ஹோண்டா சிஆர்வி காரில் உள்ள 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் தரப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 120 பிஹெச்பி பவர் மற்றும் 300 என் எம் டார்க் திறனை வழங்குவதாக உள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.8 லிட்டர் ஐ-விடெக் இன்ஜின் 141 பிஹெச்பி பவர் தருகிறது. இரண்டு இன்ஜின்களுமே ஸ்மூத்தான டிரைவிங் அனுபவத்தைத் தருகின்றன.

புதிய சிவிக் காரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் பிரமாதம். பழைய சிவிக் மாடல் பல இடங்களில் தரைதட்டும். இதில் 171 மிமீ அளவு கிளியரன்ஸ் இருப்பதால் தரைதட்டும் பிரச்சினை பெரும்பாலும் இல்லை. ஓட்டும்போது கார்னர் வியூ நன்றாகத் தெரிகிறது. இதனால் ஓட்டும் அனுபவத்தை மிகவும் எளிதாகவும், சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது. சஸ்பென்ஷனில் எந்த குறையும் இல்லை. மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது சஸ்பென்ஷன் நன்றாக தன் வேலையை செய்கிறது.

டிரான்ஸ்மிஷன் வசதியைப் பொருத்தவரை பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் மட்டும்தான் கிடைக்கிறது. அதேபோல் டீசல் மாடலில் மேனுவல் மட்டும்தான். பாதுகாப்பு அம்சங்கள் என்ற வகையில், 6 காற்றுப்பைகள், இபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்க மற்றும் பின்பக்க சக்கரங்களில் டிஸ்க் பிரேக் வசதிகள் உள்ளன.

இது சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற, அன்றாட பயன்பாட்டுக்கான கார் என்ற வகையில் சிறப்பாக உள்ளது. ஆனால், ஆஃப்ரோடு டிரைவிங் என்று வரும்போது அதற்கு ஏற்ற வகையில் இந்த இன்ஜின் செயல்பாடுகள் இல்லை என்பது குறை. ஆஃப்ரோடில் போகும்போது கொஞ்சம் பார்த்து பதமாகத்தான் ஓட்ட வேண்டும்.

ஓட்டுபவருக்கு இருக்கை கச்சிதமாக உள்ளது. 8 வகைகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளலாம். ஆனால், பின்பக்க சீட் உயரம் குறைவு என்பதால், ஏற இறங்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கிறது.

ஹெட்ரூம் அளவும் குறைவு. இதனால் உயரமாக இருப்பவர்கள் மட்டும் சற்று சிரமப்பட்டு உட்கார வேண்டியிருக்கும். கால்களை வைக்கவும் போதுமான அளவு இடம் உள்ளது. பின்பக்கத்தில் அமர்பவர்களுக்கு ஏசி வென்ட் இல்லாதது ஒரு குறை. பெட்ரோல் மாடலில் 16 கிமீ, டீசல் மாடலில் 26 கிமீ வரை மைலேஜ் கிடைக்கிறது.

மார்ச் 7-ல் ஹோண்டா சிவிக் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் போட்டியாளர்கள் ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கொரோலா ஆல்டிஸ், ஹுண்டாய் எலன்ட்ரா ஆகியவற்றோடு எப்படி போட்டி போடப் போகிறது என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x