Published : 18 Feb 2019 11:04 AM
Last Updated : 18 Feb 2019 11:04 AM

ஓய்வூதியதாரர்களுக்கான கடன் வசதி

பணியில் இருக்கும் போதே ஓய்வுக்காலம் குறித்தும் திட்டமிடுவது மிகவும் அவசியம். இப்போது அரசுப் பணியில் இருப்பவர்களுக்கும் ஓய்வூதிய திட்டம் இல்லாத நிலையில் பணி ஓய்வுபெற்ற பிறகு நிதி தேவைகளை நிறைவேற்ற தேவையான முதலீடுகள் குறித்து முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் முக்கியம்.

இதற்கு ஆரம்பத்திலிருந்தே சேமிப்புகள், காப்பீட்டுத்திட்டங்கள், பரஸ்பர நிதி முதலீடுகள் மற்றும் தொழிலாளர் வைப்பு நிதி போன்றவற்றில் கணிசமான முதலீடுகளை செய்திருந்தால், ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க இவை நிச்சயம் உதவும்.

ஓய்வுபெற்ற பிறகு குழந்தைகளின் உயர் கல்வி  மற்றும் திருமணம் போன்ற கடமைகளை நிறைவேற்ற  நிதி போதவில்லை என்றால் என்ன செய்வது? அல்லது ஒருவேளை விருப்ப ஓய்வை முன்கூட்டியே தேர்வு செய்துவிட்டிருந்தால் உங்கள் சேமிப்பை செலவிடாமல் உங்கள் குழந்தைகளுக்கு நிறைவேற்ற வேண்டிய கல்வி, திருமண செலவுகளை எவ்விதம் நிறைவேற்றுவது.?

 அனைத்துக்கும் மேலாக நீங்களோ அல்லது உங்களின் துணைவியாரோ மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நிச்சயம் பணம் கட்டித்தான் ஆக வேண்டும் என்ற சூழல் உருவானால்அதை எப்படி சமாளிப்பது?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களது ஓய்வூதியத்தைக் காட்டி தனிநபர் கடன் பெற்று நிலைமையை சமாளிக்கலாம். அதுபோன்ற சமயங்களில் சில வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன்களின் நிபந்தனைகள் அதற்குரிய தகுதிகள், திரும்பச் செலுத்துவதற்கான நிபந்தனைகள், வட்டி விகிதம் போன்றவற்றை அறிந்து வைத்திருப்பது பயன் தரும். இதன் மூலம் எதிர்பாராத நிதி சவால்களை சமாளிக்க முடியும்.

மத்திய, மாநில, ராணுவ மற்றும் பல்கலை, கல்லூரி பணியாளராயிருந்து ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் உங்களுக்கு சில வங்கிகள் தனிநபர் கடன்களை வழங்கத் தயாராக உள்ளன. பெரும்பாலும் இதுபோன்ற கடனை பொதுத் துறை வங்கிகள்தான் அளிக்கின்றன. சில தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இத்தகைய கடனை அளிக்கின்றன. எஸ்பிஐ, பிஎன்பி, யூனியன் வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் ஓய்வூதியதாரர்களுக்கு தனி நபர் கடன் வழங்குகின்றன.

பொதுவாக ஒருவர் பெறும் ஓய்வூதியத்தில் 10 முதல் 18 மடங்கு வரை கடன் வழங்குகின்றன. ராணுவப் பணியாளர்களாயிருப்பின் அவர்களுக்கு 20 மடங்கு வரை கடன் அளிக்கப்படுகின்றன. பெரும்பாலான வங்கிகள் ஓய்வூதியதாரர்களின் வயது அடிப்படையில் கடன் வழங்குகின்றன. ஓய்வூதியதாரரின் வயது 72 ஆக இருப்பின் (சில வங்கிகளில் 75 வயது வரை) அவர்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 14 லட்சம் வரை கடன் அளிக்கின்றன. இந்த வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படும் கடன் தொகை பாதியாகக் குறையும்.

குடும்ப ஓய்வூதியமாக இருந்தாலும் (பிரதான ஓய்வூதியதாரரின் மனைவி) அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதேபோல கடனை திரும்பச் செலுத்தும் கால அவகாசம் 24 மாதங்களிலிருந்து 60 மாதங்கள் வரை நீள்கிறது. விருப்ப ஓய்வு பெற்றோராயிருப்பின் தவணைக் காலம் 84 மாதங்கள் வரை நீட்டிக்கப்படுகிறது.

உங்களது ஓய்வூதியம் எந்த வங்கியில் கிரெடிட் ஆகிறதோ அந்த வங்கிக் கிளையில் நீங்கள் தனிநபர் கடன் கோரலாம்.

வாங்கிய கடனை சரிவர நிர்வகிக்காமல் போனால் மிகப் பெரும் கடன் பொறியில் நீங்கள் சிக்க வேண்டியிருக்கும். அதைத் தவிர்க்க அதைச் சரியாக செலவிட வேண்டும்.

மேலும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் வழக்கமான வட்டியை விட 2 முதல் 2.5 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும். அதாவது 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை இருக்கும். இது குறைவான வட்டி விகிதம் இல்லை என்பதை உணர வேண்டும்.

இதனால் அவசியத் தேவையாக இருந்தால் மட்டுமே இதைத் தேர்வு செய்ய வேண்டும். அதேபோல உங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை முழுவதையும் பெற வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

மேலும் உங்களது ஓய்வூதிய தொகையில் கடனுக்கான மாதத்தவணை 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. வங்கிகளே கடன் வழங்கும்போது இதை கருத்தில் கொள்ளும். 33 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கடன் வழங்கலாம். ஆனால் அதை பெரும்பாலான வங்கி நிர்வாகம் செய்வது கிடையாது.

உங்களிடம் உபரி நிதி வரும்போது கடனைத் திரும்பச் செலுத்துங்கள். உங்களது சேமிப்பில் அதிக வருமானம் கிடைத்தால் அதை கடனுக்கு திருப்பிச் செலுத்துங்கள். ஒருவேளை நீங்கள் சொந்த வீடு கட்டி, அதற்கான மாதத் தவணையை உங்கள் ஓய்வூதியத்திலிருந்து செலுத்த வேண்டியிருந்தால் நீங்கள் இத்தகைய தனிநபர் கடனை வாங்காதீர்கள்.

உங்கள் குழந்தை உயர் கல்வி படிக்க கடன் தேவைப்பட்டால் கல்விக் கடன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்துங்கள். அதன் மூலம் கடன் சுமையில் நீங்கள் சிக்குவதை தவிர்க்கலாம். அதேபோல நுகர்பொருள்களை வாங்க தனிநபர் கடன் வாங்காதீர்கள். சர்வதேச சுற்றுலா செல்வதற்கும் கடன் வாங்காதீர்கள்.

ஓய்வுக் காலத்தில் நிதி குறித்து சரியான திட்டமிடல் இருந்தால் மட்டுமே, ஓய்வுக் காலம் நிம்மதியாக இருக்கும்.

- venkatasubramanian.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x