Published : 18 Feb 2019 10:57 AM
Last Updated : 18 Feb 2019 10:57 AM

தள்ளுபடி விலையில்பட்ஜெட் கார்கள்

கார் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அடித்திருக்கிறது பம்பர் பரிசு. 2019ல் இருந்து கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்திருந்தன. ஆனால், தலைகீழாக அனைத்து நிறுவனங்களும் கார்களின் விலையைக் குறைத்துள்ளன. மாருதி, மஹிந்திரா, டாடா எனப் பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளன.

2018-ல் விற்பனையாகாமல் இருக்கும் கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. ரூ. 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கார்களின் விலை குறைந்துள்ளது.  கார் வாங்க நினைப்பவர்கள், இந்த ஆண்டு புதிதாக வரும் கார்களை அதிக விலையில் வாங்குவதற்குப் பதிலாக இந்த தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி குறைந்த விலையில் கார்களை வாங்கிப் பயன்பெறலாம்.

விலை குறைக்கப்பட்டுள்ள கார்கள் பழைய கார்களோ, அல்லது புதிய அம்சங்கள் இல்லாத கார்களோ இல்லை. பெரும்பாலானவை லேட்டஸ்ட் அம்சங்கள் உள்ள கார்கள்தான். 

டாடா டியாகோ

டாடா நிறுவனத்தின் கார்களில், டியாகோ, டிகோர், நெக்சான் மற்றும் ஹெக்சா ஆகிய நான்கு கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஹேட்ச்பேக் மாடல் காரான டியாகோவின் விலை ரூ.54 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ. 15 ஆயிரம், விலை சலுகையாக ரூ.39 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.05 லிட்டர் டீசல் வேரியன்ட்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது.

டாடா டிகோர்

டாடாவின் ஸ்டைலான கச்சிதமான செடான் கார் டிகோர் ஆகும். இதில் ஒன்பது விதமான வேரியன்ட்கள் உள்ளன. இவற்றின் விலை ரூ. 5.42 லட்சம் முதல் ரூ. 7.51 லட்சம் வரை உள்ளது. ஆனால், இதில் தற்போது ரூ. 69 ஆயிரம் வரை விலை சலுகை வழங்கப்படுகிறது. எக்சேஞ்ச் சலுகையாக ரூ. 25 ஆயிரமும், விலை சலுகையாக ரூ. 44 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

டாடா நெக்சான்

பாதுகாப்பு சோதனைகளில் முதன்முறையாக ஐந்து நட்சத்திரங்களைப் பெற்ற ஒரே கார் டாடா நெக்சான். மிகவும் பாதுகாப்பான இந்த காம்பேக்ட் எஸ்யுவி காரான நெக்சான் தள்ளுபடி விலையில் கிடைப்பது அரிது. இதில் ரூ.79 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகை உள்ளது. எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.25 ஆயிரமும், விலை சலுகையாகரூ.54 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 110 ஹெச்பி திறன் கொண்ட டாடா நெக்சான் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் கிடைக்கிறது. 

டாடா ஹெக்சா

ஹெக்சா டாடாவின் பிரீமியம் கார் ஆகும். இந்த எஸ்யுவி கார் ஏழு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் உள்ள ஹெக்சா மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் கிடைக்கிறது. இதில் ரூ. 1.14 லட்சம் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. எக்சேஞ்ச் சலுகையாக ரூ. 30 ஆயிரமும், விலை சலுகையாக ரூ. 84 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யுவி 500

மஹிந்திராவின் மிகப் பிரபலமான எஸ்யுவி கார் எக்ஸ்யுவி 500. இதில் தற்போது ரூ. 75 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் உள்ளன.

மஹிந்திரா ஸ்கார்பியோ

ஸ்கார்பியோ கம்பீரமான எஸ்யுவி. நகரம் முதல் கிராமம் வரை இந்தக் காரை அதிகம் பார்க்கலாம். ஸ்கார்பியோவின் 2018 மாடல் ரூ. 85 ஆயிரம் தள்ளுபடி சலுகையில் கிடைக்கிறது. 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட ஸ்கார்பியோ 120 ஹெச்பி, 280 என்எம் டார்க் திறன் கொண்டது. இதில் 140 ஹெச்பி திறன் கொண்ட 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும் உயர் நிலை மாடலும் உள்ளது.

மஹிந்திரா டியுவி 300

காம்பேக்ட் எஸ்யுவி காரான டியுவி 300 ரூ. 75 ஆயிரம் தள்ளுபடி சலுகையில் கிடைக்கிறது. 80ஹெச்பி மற்றும் 100 ஹெச்பி திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இதில் உள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் உள்ளது.

மஹிந்திரா மரோஸ்ஸோ

மஹிந்திரா சமீபத்தில் அறிமுகப்படுத்திய மல்டி பர்பஸ் வாகனமான மராஸ்ஸோவுக்கும் தள்ளூபடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மரோஸ்ஸோவில் பல்வேறு லேட்டஸ்ட் அம்சங்கள் உள்ளன.

மாருதி ஆல்டோ 800

மாருதி சுசூகியின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரான ஆல்டோ 800 சிறிய அளவில் அடக்கமாக இருப்பதால் பலரின் விருப்பமான கார். ஆல்டோவுக்குப் போட்டியாக புதிய கார்கள் பல வந்தாலும் இன்றும் விற்பனையில் முன்னணியில் இருப்பது ஆல்டோதான். இந்தக் காரின் ஸ்டேண்டர்ட் பெட்ரோல் மாடல் தற்போது ரூ. 53 ஆயிரம் தள்ளுபடி சலுகையில் கிடைக்க இருக்கிறது. சிஎன்ஜி மாடல் ரூ.43 ஆயிரம் தள்ளுபடியில் கிடைக்கிறது.

செலிரியோ, செலிரியோ எக்ஸ்

குறைந்த விலை காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் அறிமுகமான செலிரியோ கார் பரவலாக கவனத்தைப் பெற்றது. இதில் பெட்ரோல்மாடலுக்கு ரூ. 58 ஆயிரமும், சிஎன்ஜி மாடலுக்கு ரூ. 48 ஆயிரமும் தள்ளுபடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது, செலிரியோ எக்ஸ் மாடல் பார்ப்பதற்கு இன்னும் அழகு. இந்தக் காருக்கு ரூ. 53 ஆயிரம் தள்ளுபடி சலுகை அளிக்கப்படுகிறது. 

ஸ்விப்ட் மற்றும் டிசையர்

மாருதியில் பலரின் மிக விருப்பமான கார் ஸ்விப்ட். இந்தக் காருக்கும் போட்டியாகப் பல கார்கள் வந்தாலும் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. இந்தக் காருக்கு தற்போது ரூ. 43 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. டிசையர் காருக்கு ரூ. 58 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.

இவை போக மாருதி சுசூகியின் காம்பேக்ட் எஸ்யுவி காரான விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு ரூ. 45 ஆயிரமும், ஆம்னி வேனுக்கு ரூ. 33 ஆயிரமும், மருதி சுசூகி ஈகோ காருக்கு ரூ. 13 ஆயிரமும் தள்ளூபடி வழங்கப்படுகிறது. கார் வாங்க விரும்புபவர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி லாபம் அடையலாமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x