Published : 11 Feb 2019 11:17 AM
Last Updated : 11 Feb 2019 11:17 AM

‘டெலிவரிபாய்’கள்  சூப்பர்மேன்கள் அல்ல

முன்பெல்லாம் நடுநிசி நேரங் களில் நகர வீதிகளில் காவலர் களும், பாலியல் தொழிலாளி களும்தான் கண்ணில் படு வார்கள். இப்போதெல்லாம், வண்ண வண்ண டி-ஷர்ட்டுகளில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள் தான் விடிய விடிய வீதிகளில் இருக் கிறார்கள்.

அவர்களுக்கு சம்பளம் மாதம் ரூ. 40 ஆயிரம். இது போக ஊக்கத்தொகை எல்லாம் உண்டு. ஐடியில் வேலைபார்ப் பவர்களை விட அதிகமாக சம்பளம் கிடைக்கிறது. டெலிவரிபாய்களை பற்றி இப்படியெல்லாம் பரவலாக தகவல்கள் வருவதை சமூக வலைதளங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், இவை பெரும்பாலும் உண்மை அல்ல. இப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக் கிறார்கள் மார்க்கெட்டிங் தந்திரிகள்.

ஒரு துறை புதிதாக முளைக்கும்போது, அதை நோக்கி ஆட்களை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் சலுகைகளையும் தொழிலதிபர்கள் பயன் படுத்துவது வழக்கம். அதுதான் இதிலும் நடந்தது. ஸ்விக்கி, உபர், சொமட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலி வரி ஆப்கள் வந்த புதிதில் பணியாளர் களுக்கு நல்ல ஊதியம் வழங்கின.

ஆனால், போகப் போக பணியாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. வேலைக்குப் போய்க்கொண்டிருந்தவர் கள் பலரும் கூட வேலையை விட்டு விட்டு இந்த நிறுவனங்களில் இணைந்தார்கள். ஒரு பைக், ஒரு செல்போன் இருந் தால் போதும். ஊர்சுற்றி பிரியர்களுக்கு ஏற்ற வேலை என்பதால், பலரும் இறங் கினார்கள். இதனால், பணியாளர்களின் ஊதியம் குறைய ஆரம்பித்தது.

டெலிவரி செய்யும் ஆர்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஊதியம் வழங்கப்படும். ஆட்கள் அதிகரித்தால் ஒவ்வொருவருக்குமான ஆர்டர்கள் குறையும். எனவே ஊதியமும் குறையும். ஆனால், ஆர்டரைப் பெறுவதற்கான போட்டி, ஆர்டரை உரிய நேரத்தில் சேர்க்க வேண்டும் என்கிற கட்டாயம், எந்த நேரத்திலும் டெலிவரி செய்ய தயாராக இருக்க வேண்டும் என்கிற நிலை போன்றவை இந்த வேலைகளில் தவிர்க்க முடியாதவை.

சொல்லப் போனால் துரித உணவு போலவே, உடனடியாக உருவாகும் துரித பொருளாதாரம் (Gig Economy) ஏற்படுத்திக்கொடுத்த நிரந்தரமற்ற வேலை வாய்ப்புகள் இவை. நிரந்தர வேலை வாய்ப்புகளுக்கு நேர் எதிரானவை இவை. இந்த வேலைவாய்ப்புகளில் எந்தவித பாதுகாப்போ, உரிமையோ இல்லை.

நகர வீதிகளின் மாசுபட்ட காற்றில், சுட்டெரிக்கும் வெயிலில், குளிர் பனியில் அலைந்து திரிந்து ஆர்டரைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஆனால், பல கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஓட்டலில் ஐஸ் கிரீம் ஆர்டர் செய்துவிட்டு, அது டெலிவரி செய்யப்படும்போது உருகி விட்டது என சலம்பும் வாடிக்கையா ளர்களுக்கும், அதற்காக நடவடிக்கை எடுக்கும் நிறுவனத்துக்கும் இடையில் மாட்டிக்கொண்டு விழிப்பது இவர்கள் தான். யார் மீது தவறு என்றாலும் நடவ டிக்கை பணியாளர் மீதேதான். இதுதான் இன்றைய பொருளாதாரத்தின் விதி.

இவர்கள் தங்களுக்கான ஊதியத்தை அதிகப்படுத்திக்கொள்ள, ஒரு நாளைக்கு 16 லிருந்து 20 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். மேலும், வாங்கும் ஊதியம் வாகன எரிபொருள் செலவுக்கே போய்விடும். அதிலும், டெலிவரி செய்ய வேண்டிய இடத்தைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் பிரச்சினையால், பெட்ரோல் செலவு கூடுதலாகக் கூட ஆகலாம். அதுமட்டுமல்லாமல் இந்த வேலையில் பெரும் உடல் கோளாறுகளும், மன அழுத்தங்களும் வருவதற்கும் வாய்ப்புள் ளது. சில நாட்களிலேயே இந்த வேலையை விட்டு பலர் ஓடிவிடுகிறார் களாம். ஆனால், வெளியேறுபவர் களைவிட புதிதாக இந்த வேலையில் சேர ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை பல மடங்கு இருக்கிறதாம்.

இணைய பயன்பாட்டின் வளர்ச்சி யால், ஒருபக்கம் இப்படியான வேலை வாய்ப்பை உருவாக்கி இருந்தாலும், இதில் உள்ள பிரச்சனைகளை அவர் கள் கூறும்போது நமக்கு தலையே சுற்று கிறது. எனவே அடுத்த முறை நீங்கள் உணவு ஆர்டர் செய்யும் போது, டெலிவரி செய்பவர்களின் நிலையையும் மனதில் நினைத்துப் பாருங்கள். அவர்கள் ஒன்றும் சூப்பர்மேன்கள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x